லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதா அல்லது பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்வதா என்பதில், முடிவு எடுக்க முடியாமல், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் இருமனதாக உள்ளார்.
அத்துடன், தி.மு.க., தரப்பிலிருந்தும், கூட்டணிக்கு, அழைப்பு மேல், அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, வரும், 7ம் தேதி நடக்கவுள்ள ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், ஒரு எம்.பி., பதவியை விட்டுக் கொடுக்கவும், தி.மு.க., முன்வந்து, அதுதொடர்பாக விஜயகாந்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதேநேரத்தில், தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பா.ஜ., தரப்பிலிருந்தும், காங்கிரஸ் தரப்பில் இருந்தும், விஜயகாந்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், விஜய காந்த், கூட்டணி தொடர்பாக வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவதால் தி.மு.க., தரப்பினர், டென்ஷனாகி, திருச்சி சிவாவை, ராஜ்யசபா தேர்தல் வேட்பாளராக்கி, அவர் மனு தாக்கலும் செய்து விட்டார்.
இரு மனதாக...:
அதுமட்டுமின்றி, விடாப்பிடியாக தி.மு.க., தரப்பிலிருந்து,தே.மு.தி.க., தலைமையை நாள்தோறும் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு கேட்க, தங்கள் வேட்பாளரை நேரில் அனுப்பலாமா எனவும், விஜயகாந்திடம் அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது.அதற்கும், விஜயகாந்த் பதில் அளிக்கவில்லை. இதற்கிடையில், சமீபத்தில், மலேசியா சென்றிருந்த விஜய காந்த், அங்கு நண்பரின் வீட்டில் தங்கினார். அப்போது, சினிமா பார்த்தும், நண்பரின் மகனுடன் விளையாடியும் பொழுது போக்கினார். அரசியல் ரீதியான சந்திப்பாக, மனித நேய மக்கள் கட்சியினரை மட்டும், சந்தித்தும் பேசியுள்ளார். வேறு அரசியல் நடவடிக்கைகளில், எதுவும் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
இப்படி, கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க முடியாமல், இரு மனதாக இருந்து
வரும் தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்திற்கு, வரும், 30ம் தேதி திருமண நாள். அன்றைய தினம், ஆந்திராவில் உள்ள மூன்று கோவில்களில் திவ்யதரிசனம் மேற்கொள்ள, விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.இந்த ஆன்மிக சுற்றுப் பயணத்தில் விஜயகாந்துடன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என, 50க்கும் மேற்பட்டவர்கள் செல்கின்றனர். அப்போது, கூட்டணி குறித்து உறவினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்க உள்ள விஜயகாந்த், பிப்ரவரி, 2ம் தேதி, உளுந்தூர் பேட்டையில் நடக்கும் கட்சி மாநாட்டில், தொண்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் கேட்ட பின், முடிவை அறிவிப்பார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கூட்டணி முடிவெடுக்க...:
சித்தூரில் உள்ள புகழ் பெற்ற பிள்ளையார் கோவில், ராகு, கேது ஸ்தலமான, காளஹஸ்தி மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் என, மூன்று கோவில்களில், விஜயகாந்த் வழிபாடு நடத்துவார் எனவும், அப்போது, சாமியிடம் சூசகமான முறையில் குறிகேட்டு, அதனடிப்படையில், கூட்டணி முடிவெடுக்கவே, இந்த ஆன்மிக சுற்றுப் பயணம் என்றும், சொல்லப்படுகிறது. கடவுள் எந்த கூட்டணிக்கு ஆதரவாக குறி சொல்லப்போகிறாரோ; அதுவரை கூட்டணி கட்சிகளுக்கு திக்...திக்...தான்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE