வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர், தாங்கள் விரும்பும் நிறுவனத்திற்கு மாறும் திட்டத்தை, சென்னையில், 100 பேர் கூட பயன்படுத்தவில்லை. இச்சூழலில், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், திட்டம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.54 கோடி வாடிக்கையாளர் உள்ளனர். வினியோகஸ்தர்கள் மூலம், வாடிக்கையாளருக்கு, காஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது.
காஸ் வேண்டி முன்பதிவு செய்து, குறித்த நேரத்தில் வினியோகம் செய்யாதது; புதிய இணைப்புக்கு அலைக்கழித்தல்; கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற காரணங்களால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதையடுத்து, ஒரு காஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர், மற்றொரு நிறுவனம் அல்லது மற்றொரு வினியோகஸ்தருக்கு மாறும் வசதி, கடந்த ஆண்டு, பிப்ரவரியில், சண்டிகரில், சோதனை ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டது. பின், முதல் கட்டமாக சென்னை உட்பட, 30 நகரங்களில், இந்த திட்டம், கடந்த அக்டோபரில் துவங்கப்பட்டது. சில தினங்களுக்கு முன், தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர், தற்போது இணைப்புப் பெற்றுள்ள நிறுவனத்தின் இணைய தளத்தில், புதிய சேவையைப் பெற விரும்பும் நிறுவனம் அல்லது வினியோகஸ்தர் பெயரை பதிவு செய்ய வேண்டும்.அடுத்த, 72 மணி நேரத்திற்குள், வினியோகஸ்தர், வாடிக்கையாளரின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.வாடிக்கையாளர் இதை ஏற்க மறுத்தால், சிலிண்டரையும், ரெகுலேட்டரையும், தற்போதுள்ள நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். விரும்பிய நிறுவனத்திடம் இருந்து, ரெகுலேட்டர், சிலிண்டர் ஆகியவற்றை, பதிவுக் கட்டணம் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் நிறுவனத்திற்கு மாறும் திட்டத்தில், சென்னையில், பொது மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இச்சூழலில், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், திட்டம் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சென்னையில், இதுவரை, 100க்கும் குறைவான வாடிக்கையாளர் மட்டுமே, விரும்பிய நிறுவனத்திற்கு, மாறும் வசதியை பயன்படுத்தியுள்ளனர்' என்றார்.
நமது நிருபர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE