கிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிராமம் சாதித்த வரலாறு

Updated : ஜன 27, 2014 | Added : ஜன 26, 2014 | கருத்துகள் (83) | |
Advertisement
சென்னையில் இருந்து 40 கி.மீ., சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 6 கி.மீ., உள்ளே சென்றால் குத்தம்பாக்கம் நம்மை வரவேற்கும். அழகான தார் சாலைகள், தூய்மையான வடிகால் வசதி, வயல்வெளிகள், மரங்கள் நிறைந்த சோலைகள், நீர்நிறைந்த கண்மாய்கள், வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு என குடிசைகள் இல்லாத, குறைகள் இல்லாத கிராமம்.இந்த கிராமத்தில், ஒரு குடும்பத்தின் மாத வருமானம் குறைந்தது 40
கிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிராமம் சாதித்த வரலாறு

சென்னையில் இருந்து 40 கி.மீ., சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 6 கி.மீ., உள்ளே சென்றால் குத்தம்பாக்கம் நம்மை வரவேற்கும். அழகான தார் சாலைகள், தூய்மையான வடிகால் வசதி, வயல்வெளிகள், மரங்கள் நிறைந்த சோலைகள், நீர்நிறைந்த கண்மாய்கள், வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு என குடிசைகள் இல்லாத, குறைகள் இல்லாத கிராமம்.

இந்த கிராமத்தில், ஒரு குடும்பத்தின் மாத வருமானம் குறைந்தது 40 ஆயிரம். வீட்டில் ஒருவர் பட்டதாரி, எல்லோருக்கும் எதாவது வேலை உண்டு; பெண்களும் சம்பாதிக்கின்றனர். எல்லா ஜாதியினரும் ஒற்றுமையாய் வாழ்கின்றனர். இதில் அதிகம் பேர் ஆதிதிராவிடர்கள். இன்று தமிழகத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு முன்மாதிரியாய் வழிகாட்டுகிறது, இந்த தன்னிறைவு பெற்ற கிராமம். "மாதிரி கிராமம்' என்று சர்வதேச கருத்தரங்குகளில் விவாதிக்கப்படுகிறது குத்தம்பாக்கம்! பஞ்சாயத்துராஜ் கருத்தரங்குகளில், "கிராம பொருளாதார மேம்பாட்டிற்கு' இந்த கிராமத்தையே உதாரணம் காட்டுகின்றனர்.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

ஒரு "பிளாஷ்பேக்'!
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு குத்தம்பாக்கம்... ஊரை இரண்டாக்கி ஓடிய சாக்கடை; தெருவெல்லாம் குப்பை. கழிவுநீர் சூழ்ந்த குடிசைகள். குடிநீர் வசதி இல்லை. விவசாய கூலிகளாய் வாழ்ந்து, கள்ளச்சாராயத்தில் வீழ்ந்து வாழ்வை இழந்த மக்கள். ஜாதிச்சண்டை, அடிதடி. தலைநகர் சென்னை அருகே இருந்தும் கல்வி கற்க யாருக்கும் மனமில்லை.இந்த கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் இளங்கோ. யாரும் படிக்காத ஊரில், இவர் பி.இ., கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். கிராமத்தின் அவலத்தை கண்டு மனம் வெறுத்து, "விட்டால் போதும்' என இளங்கோவும் வேலை தேடி பயணம் ஆனார். காரைக்குடி "சிக்ரியில்' மத்திய அரசு வேலை. என்றாலும் மனதில் நிறைவு இல்லை. எந்த வசதியும் இல்லாத தான் பிறந்த கிராமமும், அங்குள்ள மக்களும் மனதில் வந்து போனார்கள்."இவர்களுக்காக நான் என்ன செய்வது?'மனம் அலைபாய்ந்தது.


மாற்றம் ஏற்படுத்திய சந்திப்பு :

குன்றக்குடி கிராமத்தில் சேவை செய்து கொண்டிருந்த குன்றக்குடி அடிகளாரை சந்தித்தார்.""ஐயா...நான் என் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்'' -இது இளங்கோ.""நீ கிராமத்து ஆள் தானே... முதலில் உன் கிராமத்திற்கு ஏதாவது செய். உன் ஊர்ல மாற்றம் செய்ய முடியாவிட்டால், நீ எந்த ஊர்லயும் செய்ய முடியாது. இந்தியாவைப்பற்றி கவலைப்பட்டால், முதலில் குத்தம்பாக்கத்தை பற்றி கவலைப்படு!''இவ் வார்த்தைகள் இளங்கோ மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. என்றாலும் அரசு வேலை, முயற்சிக்கு தடையாக தோன்றியது.அதற்கும் அடிகளாரின் வார்த்தைகள் தான் தீர்வு தந்தன.""சிக்ரிக்கு நீ இல்லை என்றால்இன்னொரு இன்ஜினியர். ஆனால் குத்தம்பாக்கத்திற்கு நீ இல்லை என்றால், இன்னொரு மனிதர் இல்லை''இந்த வார்த்தைகள் இளங்கோ வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த, அரசுப்பணியை உதறினார்.1994ல் சமூக சேவகராக குத்தம்பாக்கத்தில் களம் குதித்தார். வேலையை விட்டதால், குடும்பத்தை கவனிக்க ஏதுவாக மனைவியை வேலைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.மனைவி ஓ.என். ஜி.சி., அதிகாரி ஆனார். அவர் சென்னையில் இருந்து குழந்தைகளை கவனிக்க, குத்தம்பாக்கத்தில்ஒரு படுக்கை அறை, சமையலறை உள்ள வீட்டில் குடியேறினார் இளங்கோ.இதில் இருந்து தான், தனிமனிதன் நினைத்தால், இந்த சமூகத்தை மாற்றிக்காட்ட முடியும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது.கள்ளச்சாராயம் ஒழிப்பு: இரண்டாண்டுகள் கடுமையாக போராடியதன் விளைவு, அதிகாரிகள் துணையோடு, கள்ளச்சாராயம் இந்த கிராமத்தில் இருந்து அடியோடு ஒழிக்கப்பட்டது. ஜாதி வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையானார்கள் கிராம மக்கள். 1996ல் பஞ்சாயத்து தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களை தீட்டினார். இதற்கான ஐடியா பெற, கேரளாவின் மாதிரி கிராம பஞ்சாயத்தான வள்ளிகுன்னுவிற்கு சென்று வந்தார் இளங்கோ.

முதன்முதலாக, பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுத்திய, 2 கி.மீ., நீளமுள்ள சாக்கடை ஓடை, கான்கிரீட் கால்வாயாக மாறியது. அரசு நிதி கொஞ்சம், பொதுமக்கள் நிதி, அவர்களின் பொருள் உதவி, உடல் உழைப்பு எனதிட்டங்கள் மளமளவென செயலாக்கம் பெற்றன. ரோடுகள் உருவாகின. குடிசைகள் மாறின. பன்றிகள், கொசுக்கள் ஒழிந்தன. மோசமான காலனி என்ற "இமேஜ்' தகர்ந்தது. மரங்கள் நடப்பட்டன. மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயலாக்கம் பெற்றன. பஞ்சாயத்து வரவு, செலவு கணக்கு மாதந்தோறும் பொதுஇடத்தில் ஒட்டப்பட்டது.


சஸ்பெண்ட் என்ற பரிசு :

நடந்த வளர்ச்சிப்பணிகளில் திருப்தி அடைந்து, நடைமுறைகளை அரசு ஏற்றுக்கொண்டாலும், பணிகளை செயல்படுத்திய விதத்தில் அதிருப்தி அடைந்து, இவரை பஞ்., தலைவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இப்போது தான் முதன்முதலாய் துவண்டார் இளங்கோ.காந்திய புத்தகங்களை படிக்க தந்து, கணவனின் தன்னம்பிக்கை குறையாது காத்து உடனிருந்தார் மனைவி. கிராம மக்களும் இளங்கோவின் பக்கம் இருந்தனர். நேர்மையான அதிகாரிகள் நடத்திய மறுவிசாரணைக்கு பிறகு, சஸ்பெண்ட் ரத்தானது.""நேர்மையாக, தர்மத்தை உள்வாங்கி என்னை அர்ப்பணித்தேன். அற்புதங்கள் தோன்றி என்னை காப்பாற்றியது. வெற்றியோ, தோல்வியோ இதுவே என் பாதை என பயணித்தேன்,'' என்கிறார் எதிர்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்றிய இளங்கோ.அடுத்து நடந்த பஞ்., தேர்தலிலும் வென்றார். இம்முறை கடந்தமுறை பெற்ற அனுபவங்கள் கைகொடுத்தன. மக்கள் பங்களிப்போடு, கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டன. இப்போது, நான்கு நாள் மழை பெய்தால் போதும்; எட்டு மாதத்திற்கு தண்ணீர் பஞ்சம் இருக்காதாம். இவரது முயற்சியில், அரசு துவக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளியாகியது.

இரண்டு ஜாதிக்காரர்கள் சேர்ந்து வாழும், 50 இரட்டை வீடுகளை, பஞ்., செலவில் கட்டினார். இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, தி.மு.க., ஆட்சியில் இதே மாதிரியில் மாநிலம் முழுவதும் "சமத்துவபுரங்கள்' உருவானது.முதலில் அடிப்படை வசதியில் மாற்றம் கொண்டு வந்தவர், பின்னர் தனிமனித மேம்பாட்டில், அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். விவசாயம் செய்யாதவர்கள் சுயதொழில் செய்ய, பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளித்தார். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைத்து, பெண்களின் பொருளாதார நிலை உயர வழிகாட்டினார்.இன்று குத்தம்பாக்கம், யாரும் குற்றம் சொல்லமுடியாத கிராமமாய் நிமிர்ந்து நிற்கிறது. ஐ.நா.,வின் "வசிப்பிட விருதுக்கு' 8 ம் இடத்தில் இந்த கிராமம் தேர்வானது.


சுழற்சிமுறையில் குத்தம்:

பாக்கம், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் பதவியில் இல்லாத இளங்கோ செயல்படுத்திய திட்டங்கள், இப்போதும் தொடர்கிறது. அதற்கு சிறந்த உதாரணம், இன்றும் வரவு, செலவு கணக்கு பொதுஇடத்தில் ஒட்டப்படுகிறது. இப்போதைய பணி: தற்போது கிராம தன்னாட்சி அறக்கட்டளை என்ற அமைப்பை துவங்கி, பிற பஞ்., தலைவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் இளங்கோ. சிறு தொழில் நிறுவனங்கள் துவங்கி, கிராமத்து மக்களுக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளார். சூரியஒளி சக்தியின் பயன்கள், சாமான்யனுக்கும் கிடைக்க, "டிசி'யில் ஓடும், குறைந்த விலை மின்விசிறி, விளக்குகள் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில், 1.5 எச்.பி., மெஷின் இயங்கும் வகையில், சூரிய சக்தியை பயன்படுத்தும் முயற்சி நடந்துவருகிறது. இந்த சேவைகள் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி தொடர்கிறது.


இவர் முன்மாதிரி :

குத்தம்பாக்கத்தில், இரண்டு வவெ?வேறு ஜாதியினர் தங்கும் இரட்டை வீடுகள் கட்டப்பட்டதை பார்த்து தான், "சமத்துவபுரங்களை' தமிழகம் முழுவதும் அரசு உருவாக்கியது.டூ மக்கள் பங்களிப்போடு இங்கு சாலைகள் உருவானதை தொடர்ந்து தான், "நமக்கு நாமே' திட்டத்தை அரசு உருவாக்கியது.

தலை நிமிர்ந்து நிற்கும் பெண்கள் :எங்களுக்கு சேமிப்புன்னா என்னவென்றே தெரியாது. வெளிஉலகம் தெரியாம இருந்த எங்களை வழிநடத்தினார். இன்று நாங்க சம்பாதிக்கிறோம், சேமிக்கிறோம்.
இந்திரா, தாழம்பூ மகளிர் குழு

சுயதொழில் செய்து முன்னேறலாம் என்று வழிகாட்டினார். சோப் ஆயில், பேப்பர்
கப் உற்பத்தி என பல பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். இன்னைக்கு நாங்க தலை
நிமிர்ந்து நிற்கிறோம்.
லோகநாயகி, தாமரை மகளிர் குழு


இளங்கோவுடன் இணைந்த 4 ஆயிரம் இளைஞர்கள்


இளங்கோவுடன் நேர்காணல்...


* "குத்தம்பாக்கம் மாதிரியை' பிற கிராமங்களுக்கும் எடுத்துச் செல்வீர்களா?
உறுதியாக. கிராம தன்னாட்சி அறக்கட்டளை மூலம், 2016 க்குள் 200 கிராமங்களையும், 2021 க்குள் ஆயிரம் கிராமங்களையும் தன்னிறைவு பெற செய்ய திட்டமிட்டு, செயலாற்றி வருகிறோம். இப்போது 600 கிராம பஞ்சாயத்துகளோடு தொடர்பு உள்ளது. என் "நெட்வொர்க்கில்', இன்ஜினியர், டாக்டர் என 4 ஆயிரம் இளைஞர்கள், இந்தியா முழுவதும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
* ஒரு கிராமத்தில் ஏற்படுத்திய மாற்றத்தை, இந்தியா முழுக்க கொண்டுவருவது சாத்தியமா?
ஒரு இந்தியன் தர்மத்தை பற்றி பேசும் போது, மற்றொரு இந்தியனால் கேட்டு விட்டு சும்மா இருக்க முடியாது. ஒரு ஊரில் மாற்றம் ஏற்பட்டால், அது பிற இடங்களிலும் எதிரொலிக்கும்.
* "கிராம சுயாட்சி'- ஏன் அவசியம்?
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வரும் முன்பு, கிராம மக்கள் தான் வலுவாக இருந்தனர். அரசை நம்பி, மக்கள் வாழும் முறையை ஏற்படுத்தியது ஆங்கிலேயர்கள். மக்களை அடிமையாக வைக்க, மக்களின் பொறுப்புக்களை எடுத்துக்கொண்டது அரசு. முன்பு, மன்னர்கள்
வலுவாக செயல்பட மக்கள் உதவினர். இப்போது நிலைமை மாறி, இலவசங்களுக்காக மக்கள்
கையேந்துகின்றனர். பாதுகாப்பு, நிதிமேலாண்மையை தான் அரசுகள் கவனிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மக்கள் செய்து கொள்ள வேண்டும். இதற்கு கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும். அதற்கு தான் மக்களுக்கு அதிகாரம் தரவேண்டும் என்று மகாத்மா கூறினார்.
* கிராமங்கள் விவசாயத்தின் அடையாளத்தை இழந்து வருகிறதே...
பால், உணவு என உற்பத்தி செய்யும் கிராம மக்கள் ஏழையாக உள்ளனர். தக்காளி அதிகம் விளைந்தால், அழுகி குப்பைக்கு போகிறது. கிராமத்தில் தக்காளி ஜாம் தயாரித்தால், விவசாயி ஏன் கையேந்த வேண்டும்? கிராமங்களை வலுப்படுத்த, வலுப்படுத்த நகரங்களுக்கு சோறு போடலாம்.


வீழ்ந்தாலும் எழுவேன் :

நாட்டுக்கு நல்லது செய்யும் நல்ல இதயம் கொண்ட இளங்கோ, சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டது தான் சோகத்திலும் சோகம். இதய அறுவை சிகிச்சை செய்த போதும், கிராமத்தில் தனியாக வாழும் அவர்,""என் கிராமத்தில் செய்ததை, பிற கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற மன வைராக்கியம் தான் என்னை மீண்டு வரச் செய்திருக்கிறது. நான் குணமடைய பல லட்சங்களை இந்த சமூகம் தான் செலவு செய்தது. புது சக்தியோடு திரும்பி இருக்கிறேன். எனக்கு ஓய்வு இல்லை,'' என்றார்.

இவரோடு கருத்து பரிமாற: panchayat@yahoo.com

- ஜி.வி.ரமேஷ்குமார்

Advertisement


வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.S.Irudayarajan - chennai,இந்தியா
23-பிப்-201415:10:09 IST Report Abuse
V.S.Irudayarajan தங்களின் சேவைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
sathya - madurai,இந்தியா
14-பிப்-201421:02:57 IST Report Abuse
sathya சூப்பர் சார் நீங்கள் ஆற்றிய முயற்சிக்கு வாழ்த்துகள் சார் ...........
Rate this:
Cancel
M Mahaboob Basha - dubai, UAE,இந்தியா
14-பிப்-201412:35:05 IST Report Abuse
M Mahaboob Basha வாழ்த்துக்கள்... தங்களை போன்றவர்களால்தான் நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது நன்றி சார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X