திருமண விழாவில், விஜயகாந்தை சந்திப்பதன் மூலம், கூட்டணி பேச்சுக்கு அச்சாரமிட்டு விடலாம் என, நினைத்த, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினுக்கு, அதிருப்தியே மிஞ்சியது. மச்சானை அனுப்பி விட்டு, தந்திரமாக நழுவி விட்டார் விஜயகாந்த். மேலும், ஸ்டாலினை சந்திப்பதை தவிர்க்க, திருமண விழாவுக்கு தாமதாமாக வந்தார் சுதீஷ். இதனால், தி.மு.க., வட்டாரம் கடும் சோகம் அடைந்துஉள்ளது.
மண விழாவில்... : திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர், முகமது யூசுப் இல்ல திருமண விழா, நேற்று காலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. மணவிழாவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், ஜவாஹிருல்லாஹ், விடுதலை சிறுத்தைகள் தலைவர், திருமாவளவன் உட்பட, தி.மு.க., கூட்டணி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்த திருமண விழாவிற்கு வரும்படி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து, திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார். "வேறு அலுவல் இல்லாதபட்சத்தில், நிச்சயம் திருமண விழாவிற்கு வருகிறேன்' என, விஜயகாந்தும்,
அப்போது உறுதி அளித்தார்.
தவிர்த்து விட்டார் : விஜயகாந்த் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது, அவரையும், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினையும் சந்திக்க வைக்க, கூட்டணி கட்சித் தலைவர்கள், ரகசிய ஏற்பாடுகளைச் செய்தனர். அதனால், அழைப்பிதழை தொடர்ந்து, திருமணத்திற்கு வரும்படி, விஜயகாந்திற்கு, மொபைல் போன் மூலமும், அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலவரங்களால், நேற்றைய விழா, மிகுந்த பரபரப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மண விழாவில் பங்கேற்பதை, விஜயகாந்த் தவிர்த்து விட்டார். அவருக்கு பதிலாக, தே.மு.தி.க., இளைஞர் அணி செயலரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ், அந்தக் கட்சி, எம்.எல்.ஏ., பார்த்தசாரதி உட்பட, சிலர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களும், ஸ்டாலின் மற்றும் மற்ற தி.மு.க., கூட்டணி தலைவர்கள், விழாவில் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கிச் சென்ற பின்னரே வந்தனர். தன் சாலிகிராமம் வீட்டில் இருந்து முன்னதாகவே புறப்பட்ட, சுதீஷ், கீழ்ப்பாக்கம் அருகே, டி.பி., சத்திரத்தில் உள்ள பார்த்தசாரதி எம்.எல்.ஏ., வீட்டிற்கு சென்றுள்ளார்.
மிகுந்த ஏமாற்றம் : அங்கு, 30 நிமிடங்கள் காத்திருந்த அவர், தி.மு.க., கூட்டணி தலைவர்கள், விழாவில் பங்கேற்று, சென்று விட்டனர் என்ற தகவல் கிடைத்த பின்னரே, மணவிழா நடந்த இடத்திற்கு சென்றார். ஸ்டாலினை சந்திப்பதை தவிர்க்கவே, சுதீஷ் இவ்வாறு செய்ததாக, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலவரங்களால், விஜயகாந்த் - ஸ்டாலின் சந்திப்பு நிகழும்; கூட்டணிக்கு அச்சாரமிட்டு விடலாம் என, நினைத்த, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அத்துடன், ஸ்டாலினும், மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தி.மு.க.,வில் இருந்து, அழகிரி நீக்கப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்த, திராவிடர் கழக தலைவர், வீரமணி, "அழகிரியை நீக்கியதன் மூலம், குடும்ப அரசியல் நடத்துகிறது, தி.மு.க., என்ற பழி துடைக்கப்பட்டுள்ளது; சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, ஆரோக்கியமான நடவடிக்கை' என, கூறினார்.
பதிலளிக்கவில்லை : இதற்கு பதிலடி கொடுத்த அழகிரி, "எப்போதெல்லாம், ஆட்சி மாறுகிறதோ, அப்போதெல்லாம், கருத்து சொல்லும், கறுப்பு மனிதர் வீரமணி. தற்போது, தி.மு.க.,வின் அழிவுக்கு, அவரும் ஒரு காரணமாகி வருகிறார்' என, தெரிவித்தார். அழகிரியின் கருத்துக்கு, திருமண விழாவில், வீரமணி பதில் அளிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எந்த பதிலையும் கூறவில்லை. மேலும், அழகிரி நீக்கம் குறித்து, ஸ்டாலினும், விழாவில் எதுவும் பேசாமல், மணமக்களை மட்டும் வாழ்த்தி விட்டு சென்றார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE