கடந்த சில நாட்களாக, தி.மு.க.,வில் சகோதர யுத்தம் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஸ்டாலினை, கட்சியின் அடுத்த தலைவராக உருவகப்படுத்துவதாகச் சொல்லி, அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர், அழகிரி ஆதரவாளர்கள். கட்சித் தலைமையை விமர்சிப்பது போல, மதுரையில் போஸ்டர்கள் ஒட்டினர். இதையடுத்து, அழகிரி ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி, உத்தரவிட்டது தலைமை. இதன்தொடர்ச்சியாக, அழகிரியும், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளார். கருணாநிதியின் இந்த நடவடிக்கை, வழக்கம் போல
தற்காலிகமானதே என, ஒரு பிரிவினரும், இல்லை என, மற்றொரு பிரிவினரும், இரண்டு விதமான கருத்துக்களை சொல்கின்றனர். இதுதொடர்பாக, தி.மு.க.,வில் மாறுபட்ட அணியில் இருக்கும், இரு தலைவர்களின் வார்த்தை விளையாட்டு:
அண்ணாதுரை மறைந்த பின், தி.மு.க.,வின் அடுத்த தலைவர் யார்? தி.மு.க., தலைமையிலான அரசின் முதல்வர் யார் என்ற போட்டி ஏற்பட்டது. நெடுஞ்செழியனுக்கும், கருணாநிதிக் கும் இடையே நடந்த போட்டியில், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், கருணாநிதியை தலைவராகவும்,
முதல்வராகவும் தேர்வு செய்தனர்.அதுபோன்ற நிலை, தி.மு.க.,வில் இப்போதும் நடக்க வேண்டும். கட்சித் தலைவர் கருணாநிதி, இந்த வயதிலும், துருதுருவென தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அப்படி இருக்கையில், அடுத்த தலைவராக, குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்த வேண்டிய அவசியம், இப்போது ஏற்படவில்லை.ஆனால், ஒருவர் மட்டும் அவசரப் படுகிறாரே? அழகிரியின் தயவைப் பெற, சிலர் போஸ்டர் ஒட்டினர். அவர்கள் யாரும், தி.மு.க.,வின் நிர்வாகிகள் அல்ல. அதேநேரத்தில், "தமிழகத்தின் எதிர்காலமே, முதல்வரே' என, ஸ்டாலினை புகழ்ந்து, முரசொலியில் விளம்பரமே வருகிறது. அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 2009 லோக்சபா தேர்தலில், தென் தமிழகத்தில், தி.மு.க., ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதற்கு யார் காரணம். யாருடைய உழைப்புக்கு, இந்த பரிசு கிடைத்தது என்பதை, கட்சியினரும், நாடும் அறியும்.
தலைவரும், பொதுச் செயலரும் வயது மூப்பின் காரணமாக, மாநிலம் முழுவதும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடிவதில்லை. அதற்காக, அவர்களுக்கு அடுத்த நிலையில், பொருளாளராக இருப்பவர், கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். அதற்காக, அவரே அடுத்த தலைவர் ஆகிவிட முடியுமா?
அழகிரியை கட்சியிலிருந்து, "சஸ்பெண்ட்' செய்ததால், கட்சிக்குத்தான் நஷ்டம். அவர் மீண்டும் கட்சிக்கு வருவார்; தீவிரமாக கட்சிப் பணியாற்றுவார் என்றே கருதுகிறோம்.
இசக்கிமுத்து, முன்னாள் அவைத் தலைவர், மதுரை தி.மு.க.,
கட்சியின் கட்டுப்பாடே முக்கியம். அதற்கு குந்தகம் விளைவிப்பவர் யாராக இருந்தாலும், அவர் கட்சி தலைவரின் மகனாக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு, உதாரணமாகமே, அழகிரி மீது நடவடிக்கை எடுத்து, தி.மு.க., தலைமை, கட்சியின் ஒற்றுமையை உறுதி செய்துள்ளது. அழகிரியை, கட்சியிலிருந்து, "சஸ் பெண்ட்' செய்ததால், லோக்சபா தேர்தலில், தி.மு.க..,வுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதெல்லாம் கட்டுக்கதை. தி.மு.க., தொண்டர்கள், லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, உத்வேகத்துடன் எப்போதும் போல் செய்து வருகின்றனர். போஸ்டர் ஒட்டியதற்கு நடவடிக்கையா என கேட்டால், போஸ்டர் ஒட்டி, கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலையைச் செய்ததால், ஒரு பகுதியின் நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டனர். அப்பகுதிக்கு, பொறுப்புக் குழு அமைத்து, இனிமேல் அதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என, கட்சி எச்சரிக்கை செய்தது. அதன்பிறகும், கட்சி நடவடிக்கையைப் பொருட்படுத்தாமல், போஸ்டர் ஒட்டுவது, கட்சி விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது என, எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால், அடுத்தகட்ட நடவடிக்கையையும் கட்சி தலைமை எடுத்துள்ளது. மேலும், தேர்தல் தொடர்பான ஒரு கூட்டணிக்கு, கட்சித் தலைமை நட வடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும், சஸ்பெண்ட் நடவடிக்கையை கட்சி எடுக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அழகிரி, கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவாரா, மீண்டும் கட்சிக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதா என்பதற்கு, "அவரது செயல்பாடுகளைப் பொறுத்தது' என, கட்சித் தலைவர் கருணாநிதியே கூறிஉள்ளார். எனவே, அழகிரி மீண்டும் தி.மு.க.,வுக்கு வருவது, அவரது அடுத்தகட்ட செயல்பாடுகளைப் பொருத்ததே.
கோவி.செழியன், எம்.எல்.ஏ., - தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE