பா.ம.க.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், அன்புமணியுடன், பா.ஜ., மேலிட தலைவர், முரளீதர் ராவ் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணியில், பா.ம.க.,வும் வருவது உறுதியாகி உள்ளது என, தமிழக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், பா.ஜ., தலைமை யில், வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்காக, சென்னை வந்த பா.ஜ., மேலிட தலைவர், முரளீதர் ராவ், ம.தி.மு.க., அலுவலகம் சென்று, அக்கட்சி தலைவர் வைகோவை சந்தித் தார். இந்த சந்திப்புக்கு பின், நேற்று முன்தினம், பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு வைகோ வந்தார். பா.ஜ., தலைவர்களை சந்தித்துப் பேசி, பா.ஜ.,வுடனான கூட்டணியை உறுதி செய்தார். ம.தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதை அடுத்து, பா.ம.க.,வுடன் பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம், பா.ஜ., தலைவர்கள் துவக்கினர். பா.ம.க., தலைவர் ராமதாசின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணியை, முரளீதர் ராவ், சென்னையில் சந்தித்தார்.
விரிவான விவாதம்:
வைகோவுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை, அன்புமணியுடன் பகிர்ந்து கொண்ட முரளீதர் ராவ், பா.ம.க.,வையும் கூட்டணியில் சேர வேண்டும் என, அழைப்பு விடுத்தார். பின், இரு தரப்பினரும் எவ்வாறு தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ளலாம் என்பது குறித்தும், பா.ஜ., கூட்டணியில் சேர்வதால், பா.ம.க.,வுக்கு ஏற்படும் பலன் மற்றும் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் பலம் ஆகியவை பற்றியும் விரிவாக விவாதித்தனர். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்புக்கு பின், 'பேச்சுவார்த்தை விவரங்களை ராமதாசிடம் தெரிவிக்கிறேன். அவரது ஆலோசனைப்படி, பா.ம.க., முடிவை அறிவிக்கும். விரைவில், பா.ம.க., முடிவை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். பா.ம.க.,வை பொறுத்தவரையில், காங்கிரஸ், தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்பது தான் நிலைப்பாடு. எனவே, நல்ல முடிவை சொல்கிறேன்' என, முரளீதர் ராவிடம், அன்புமணி உறுதி அளித்துள்ளார்.
கூட்டணி பலம் பெறும்:
அதன்படி, நேற்று தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் தொலைபேசியில் பேசிய அன்புமணி, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,வும் சேருகிறது என்பதை உறுதி செய்துள்ளார். டில்லியில் இருக்கும் முரளீதர் ராவிடமும், அவர் இதை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பா.ஜ., தலைவர்கள் கூறியதாவது: பா.ம.க., முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. பா.ம.க., வரவால், கூட்டணி பலம் பெறும். விரைவில், இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். அடுத்த மாதம், 8ம் தேதி நடக்கும் மோடி பொதுக் கூட்டத்தில், வைகோவுடன் ராமதாசும் கலந்து கொள்ளும் வகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணியை முடிவு செய்துள்ளோம். புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகளுடன் பேசி வருகிறோம். தே.மு.தி.க.,வுடனும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. விஜயகாந்த் அழைப்புக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE