'இந்தியாவில், வேலையின்மை அதிகரித்துள்ளது; பொருளாதார மந்தநிலையால், புதிய தொழில்கள் துவங்காததே, இதற்கு காரணம்' என, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வேலைவாய்ப்பு விஷயத்தில், நம் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இப்படி வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க, மத்திய அரசே காரணம் என, எதிர்க்கட்சியினரும், வேலைவாய்ப்பை பெருக்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, அரசு தரப்பும் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, இரு அரசியல் பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள்:
காங்கிரஸ் தலைமையிலான அரசின், பொருளாதார கொள்கையை, மன்மோகன் சிங், சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, ரங்கராஜன் போன்ற பொருளாதார நிபுணர்கள் தான், வழிநடத்தி செல்கின்றனர். இவர்களின் பொருளாதார கொள்கை என்பது, நாட்டின் வளர்ச்சியை புள்ளி விவரங்களால், அடுக்கிக் கொண்டே செல்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி, நாட்டின் மக்களுக்கு கிடைக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியின் விளைவு, வேலைவாய்ப்பை உருவாக்க வேண் டும். இந்தியா போன்ற மக்கள் தொகை மிக அதிகமுள்ள நாட்டில், 35 சதவீதம் பேர், இளைஞர்கள். இவர்களுக்கு, வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும், பொருளாதார வளர்ச்சியே முக்கியம். மாறாக, கடந்த இரு ஆண்டுகளில், வேலையின்மை, 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. படித்து வேலை கிடைக்காத இளைஞர்களின் நிலை, மாற்று வழியில் சென்றால், அது பெரும் ஆபத்தை நாட்டுக்கு உருவாக்கும். ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்தால் தான், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக அர்த்தம். ஒரு மரம் வளர்ந்தால், அதன் மூலம் நிழல் கிடைக்க வேண்டும். மரத்திலிருந்து, காய், பழங்கள் கிடைக்க வேண்டும். மனிதன் மட்டும் அல்லாமல், பறவைகள் கூடு கட்டி வாழ்வது போன்ற பல பலன்கள், ஒரு மரத்தின் மூலம் கிடைத்தால் தான், அம்மரம் வளர்த்ததற்கான பயன் முழுமையாக கிடைக்கும். இது தான் பொருளாதார வளர்ச்சி. காங்கிரஸ் அரசின் பொருளாதார வளர்ச்சி என்பது, பனை மரம் போல் உள்ளது. மரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், அதன்மூலம் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நாட்டில், தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பதற்கு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின், தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். இதன்மூலம், சமூகத்தில் எதிர் விளைவுகள் ஏற்படும், அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
நிர்மலா சீத்தாராமன், பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர்
சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய சர்வே என்பது, தொழிற்சாலைகளில் நிலவும் வேலைவாய்ப்பை பற்றி மட்டுமே நடந்துள்ளது. விவசாயம், சிறுதொழில், சேவை துறை ஆகியவற்றின் வேலைவாய்ப்பு பற்றி சர்வே நடக்கவில்லை. எனவே, தொழிலாளர் அமைப்பின் சர்வே, இந்திய வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான சர்வே அல்ல. பொதுவாக, உலக அளவில் ஏற்பட் டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம், அனைத்து நாடுகளிலும் எதிரொலித்துள்ளது. அதனால், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் வீழ்ந்துள்ள நிலை யில், அதிகபட்சமாக, சீன நாடு தான் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளது. இதற்கு அடுத்து, இந்தியாவின் பொருளாதாரம் உள்ளது. அமெரிக்காவிலும் 2 சதவீத வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. எனவே, நம்நாட்டில், வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கும் நிகழ்வல்ல. இதைத் தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசில், கிளாஸ் - ஏ முதல் டி வரையிலான பணியிடங்களில், காலியாக இருந்த, ஒரு லட்சம் பணிஇடங்களை, நான்கு மாதங்களில் நிரப்பியுள்ளோம். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் உட்பட, பல திட்டங்கள் மூலம், கிராமங்களின் வேலைவாய்ப்பை பெருக்கியுள்ளோம். தகவல் தொழில்நுட்பத் துறையில், மூன்றாண்டுகளாக நிலவிய வீழ்ச்சி, தற்போது மீண்டும், மேம்பட்டு வருகிறது. இதன்மூலம், அத்துறையில், 3 சதவீத வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, நம்நாட்டில், தற்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டம் என்பது, தாற்காலிகமானதே. மிக விரைவில் வேலையில்லாத் திண்டாட்டம் போக்கப்படும். பொருளாதார வீழ்ச்சிக்கு, காங்கிரசின் பொருளாதார கொள்கையால் ஏற்பட்ட விளைவு என, கூறுபவர்கள், இதே கொள்கையால் தான், நாடு 9.5 சதவீத வளர்ச்சிக்கு மேல் சென்றது என்பதை உணர மறுக்கின்றனர்.
நாராயணசாமி, மத்திய இணை அமைச்சர், பிரதமர் அலுவலகம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE