டில்லியில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், 28 இடங்களைப் பிடித்த, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியில், தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. 'முதல்வர், கெஜ்ரிவால் சர்வாதிகாரி போல செயல்படுகிறார்' என, அந்த கட்சி எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி குறை கூறி வருகிறார். அத்துடன், தேர்த லின் போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நேற்று முன்தினம் உண்ணாவிரதமும் இருந்தார்.அதேநேரத்தில், ஆம் ஆத்மிக்கும், அந்த கட்சி அரசு அமைக்க ஆதரவு அளித்த காங்கிரசுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்துள்ளது. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல், கெஜ்ரிவால், மத்திய அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என, காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால், ஆம் ஆத்மிக்கான ஆதரவை, வாபஸ் பெறுவது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக, டில்லி மாநில காங்., தலைவர், அர்விந்தர் சிங் லவ்லி கூறியதாவது: 'ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவை தொடரக்கூடாது' என, டில்லி காங்கிரசிலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் குறைகளை தீர்க்கும் பணியில், முதல்வர் கெஜ்ரிவால் ஈடுபட்டால் மட்டுமே, அவரது அரசுக்கான ஆதரவு தொடரும்.
கடும் கோபத்தில்:
இனியும், காங்கிரசுக்கும், மத்திய அரசுக்கும் எரிச்ச லூட்டும் வகையில் அவர்கள் செயல்பட்டால், கெஜ்ரிவால் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவது நிச்சயம். அந்த அளவுக்கு, கெஜ்ரிவால் மீது காங்கிரஸ் தலைவர்கள், கடும் கோபத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்பதே, பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களின் விருப்பம். ஆனாலும், எப்போது வாபஸ் பெறுவது என்பதில் தான், குழப்பம் நீடிக்கிறது. சிலர், லோக்சபா தேர்தலுக்கு பின், வாபஸ் பெறலாம் எனக்கூறி வருவதால், கட்சி மேலிடம் முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. இருந்தாலும், கெஜ்ரிவால் அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதே உண்மை. இவ்வாறு, டில்லி மாநில காங்கிரஸ் தலைவர் கூறினார்.
இது ஒருபுறமிருக்க, டில்லி மாநிலத்திற்கான ஜன்லோக்பால் மசோதாவை, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை, எந்த நேரத்திலும் இறுதி செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், டில்லி ராம்லீலா மைதானத்தில், சட்டசபை கூட்டத்தை நடத்தி, அங்கு, ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும், கெஜ்ரிவால் திட்டமிட்டு உள்ளார்.
வாபஸ் பெற...:
ஆனால், அவரின் இந்த திட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, டில்லி மாநில போலீசார் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி, கடந்த ஞாயிறன்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளதால், 70 உறுப்பினர்களைக் கொண்ட, டில்லி சட்டசபையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 27 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் - எம்.எல்.ஏ.,க்கள், எட்டுப் பேரின் ஆதரவையும் சேர்த்தால், 35 பேர் மட்டுமே, அரசுக்கு ஆதரவாக உள்ளனர். பெரும்பான்மைக்கு, 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கான, 'கவுன்ட்-டவுனை' காங்கிரஸ் துவக்கி விட்டது. கெஜ்ரிவால், தன் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டால், காங்கிரஸ் விரும்பும் வகையில் செயல் பட்டால், அவரின் அரசு தொடரும். இல்லை எனில், கவிழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE