'இந்த ஆண்டின் மிகச் சிறந்த பேட்டி' என, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, அறிவிப்பு வெளியிட்டு, நேற்று முன்தினம், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் பேட்டியை ஒளிபரப்பியது. நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பேட்டியில், அதிரடியான கருத்துக்கள் எதையும் சொல்லவில்லை; எல்லாம் வெற்று அலங்கார வார்த்தைகளாகவே இருந்தன. அமைப்பு ரீதியான மாற்றமும், சமூக மாற்றமும் அவசியம் என்பதை வலியுறுத்திய, ராகுல், நரேந்திர மோடியை பார்த்து, காங்கிரஸ் பயப்படவில்லை என்றும் தெரிவித்தார். பேட்டியில், ராகுல் தெரிவித்த தகவல்கள் நியாயமானவை, தர்க்கம் நிறைந்தவை என, ஒரு தரப்பும், சுவாரஸ்யம் இல்லை என, மற்றொரு தரப்பும் கூறுகின்றன. இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்களை உடைய இரு பிரபலங்கள், முன்வைத்த வாதங்கள்:
ராகுல், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சமூக மாற்றத்தை முன்வைத்தே பேசினார். அதில், வெற்று ஆரவாரம், அலங்கார வார்த்தைகள் இல்லை. எதார்த்தம் தான் தேவைஎன்பதை வெளிப்படுத்தியது.நாட்டில், தற்போது நிலவும் பல்வேறு சூழல்கள் குறித்து கேள்விகள் எழுப்பினாலும், அதற்கெல்லாம், அமைப்பு ரீதியான மாற்றம் தான் அவசியம் என, ராகுல் குறிப்பிட்டார். லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், வேட்பாளர்களை தேர்வு செய்வது, ஒரு மாநிலத்தின் முதல்வர் அல்லது நாட்டின் பிரதமர் தேர்வு என்பது, நான்கு சுவற்றுக்குள் நடக்கும் விஷயமாக உள்ளது. இம்முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
நாட்டில் உள்ள மக்கள் எல்லாம், எந்த மாதிரியான இந்தியாவை எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிந்து, அதுபோன்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என, தன் பேட்டியில் ராகுல் குறிப்பிட்டார்.அரசியல் ஆரவாரங்களுக்கான கேள்விகளை தவிர்த்துவிட்டு, சமூக மாற்றத்துக்கான விவாதங்களை நடத்த ஏன் முன்வர மறுக்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டார். தனி மனித விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே, ராகுலின் நோக்கமாக வெளிப்பட்டது.
ஆனால், பா.ஜ., நிறுத்தியுள்ள பிரதமர் வேட்பாளர் மோடி, தனி மனித விமர்சனத்தை தான், முன் வைக்கிறார்.மோடியை விமர்சிக்க ராகுல் மறுத்ததால், அவரை கண்டு ராகுல் அஞ்சுகிறார் என்கின்றனர். யார், யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்பது, போக போகத் தெரியும்.ராகுல், ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கூறுகின்றனர். ஆங்கில தொலைக்காட்சியை, சாதாரண தொண்டர்கள் எத்தனை பேர் பார்க்கின்றனர் என, தெரியவில்லை. இந்நிலையில், ராகுலின் தொலைக்காட்சி பேட்டி, தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லை என, கூறுவதில் அர்த்தமில்லை.ஞானதேசிகன்தமிழக காங்., தலைவர்.
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, நாட்டின் பல நகரங்களில், 70க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசிவிட்டார். இன்னும் சில கூட்டங்களில் பேசிவிட்டால், அவரது வெற்றி உறுதியாகிவிடும் என, நினைத்தோம்.ஆனால், ராகுலின் தொலைக்காட்சி பேட்டியைப் பார்த்த பின், மோடி இனி பேசத் தேவையில்லை. ராகுல் பேசினாலே போதும். மோடியின் வெற்றி உறுதியாகிவிடும் என்ற எண்ணம், எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி பேட்டியில், எந்த ஒரு கேள்விக்கும், நேரடியான பதிலை ராகுல் கூறவில்லை. அவருக்கு வரலாறு தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாளிதழ்களை படிக்கும் பழக்கம் கூடவா அவருக்கு இல்லை. கோத்ரா சம்பவம் குறித்து, நீதிமன்றம் அமைத்த குழு அளித்த அறிக்கையை தொடர்ந்தே, கோத்ரா சம்பவத்தில், மோடிக்கு தொடர்பில்லை என, நீதிமன்றம்அறிவித்தது.ஆனால், மோடிக்கும், கோத்ரா சம்பவத்துக்கும் தொடர்புண்டு என்பது போன்ற பொய் பிரசாரத்தை, ராகுல் செய்து வருகிறார். ராகுலின் சொந்த தொகுதியான அமேதி குறித்து, சுப்ர மணியசாமி தெரிவித்த கருத்துக்கு, ராகுலால் எந்த பதிலையும் கூற முடியவில்லை. மாறாக, அவர் தனிமனித விமர்சனத்தை செய்ய விரும்பவில்லை. சமூக மாற்றத்துக்கானவிவாதத்தை செய்ய விரும்புகிறார் என்கின்றனர்.
பகதுார் சாஸ்திரி, 'திங்கள்கிழமை இரவு ஒரு நேரம் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்' என்றார். பல கோடி மக்கள் பின்பற்றினர். இதற்குக் காரணம், சொல்கிறவர்களுக்கு உள்ள தகுதியை மக்கள் அறிந்து கொண்டிருந்தனர். ராகுல் சார்ந்துள்ள காங்கிரசும், அவரது குடும்பம் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், சமூக மாற்றம் வேண்டும் என, ராகுல் விரும்புகிறார். அதற்கு, விவாதம் நடத்த வேண்டும் என்பதை, யாரும் கேட்கவும் மாட்டார்கள், ஏற்கவும் மாட்டார்கள்.இல.கணேசன்பா.ஜ., தேசிய குழு உறுப்பினர் .
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE