சாலையில் சென்றவர் மீது கொலை முயற்சி: இருங்கூர் - தட்டச்சேரி சாலையில் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் சென்றவர் மீது கொலை முயற்சி: இருங்கூர் - தட்டச்சேரி சாலையில் மறியல்

Added : ஜன 29, 2014
Share

வேலூர்: சாலையில் சென்று கொண்டிருந்தவர், போலீசார் கண்ணெதிரே, கத்தியால் வெட்டப்பட்டதால், ஆற்காடு அருகே, பதற்றம் நிலவியது. குற்றவாளியை கைது செய்யக் கோரி, சமூக சமத்துவப் படை நிறுவனர், சிவகாமி தலைமையில், கட்சி நிர்வாகிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயங்கிய நிலையில்: சமூக சமத்துவப் படை அமைப்பு சார்பில், அடுத்த மாதம், 23ம் தேதி, சென்னை, மயிலாப்பூரில், 'நிலமற்றோர், வீடற்றோர் மாநில மாநாடு' நடைபெற உள்ளது. இதற்கான நிர்வாகிகள் கூட்டம், வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுகா, இருங்கூர் - தட்டச்சேரி காலனியில், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த, ரமேஷ், 35, என்பவரை, அதே கிராமத்தை சேர்ந்த, திருமலை, 25, என்பவர் மடக்கி, அவரது இடது கையை, கத்தியால் வெட்டினார். அதை, பாதுகாப்பிற்கு வந்த போலீசார், நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. வெட்டு காயங்களுடன், மயங்கிய நிலையில் இருந்த, ரமேஷை, கிராம மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக, செய்யார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர், மேல் சிகிச்சைக்காக, வேலூர் அடுத்த, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால், சமூக சமத்துவப் படையின் ஆலோசனைக் கூட்டம், பாதியில் ரத்தானது. திருமலையை கைது செய்யக் கோரி, சிவகாமி தலைமையில், நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள், ஒன்று திரண்டு, நேற்று காலை, 11:00 மணிக்கு, செய்யாறு - ஆரணி நெடுஞ்சாலையில், திடீர் மறியலில் ஈடுபட்டனர்.


விரைவில் தீர்வு:

மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த, போலீசார் முயன்றனர். வேலூர், எஸ்.பி., விஜயகுமார், பேச்சு நடத்தினார். சமூக சமத்துவப் படையினரின் கோரிக்கைகளுக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என, எஸ்.பி., கூறியதை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது.


போராட்டம் நடத்துவோம்!

இதுகுறித்து, சமூக சமத்துவப்படை நிறுவனர் சிவகாமி கூறியதாவது: இருங்கூர் - தட்டச்சேரி காலனி மக்களுக்கும், வன்னியர் இனத்தவருக்கும், அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. காலனி மக்கள், கிராமத்திற்கு சொந்தமான, பொது இடத்தை பயன்படுத்தக் கூடாது என, வன்னியர் இன மக்கள், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காலனி மக்கள், ரேஷன் பொருட்கள் வாங்கும்போதும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் போதும், வன்னியர் இன மக்கள், பிரச்னையில் ஈடுபடுகின்றனர். இது, தொடர் கதையாக இருந்து வருகிறது. போலீஸ் முன்னிலையில் நடந்த, ரமேஷ் வெட்டப்பட்ட சம்பவம். மக்களிடையே அதிருப்தியை எற்படுத்தியுள்ளது. அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை, வன்கொடுமை சட்டத்தின் கீழும், ரமேஷை வெட்டியவர்களையும், போலீசார், உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களில், சமூக சமத்துவப் படையினர் ஈடுபடுவர். இவ்வாறு, சிவகாமி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X