ராஜ்யசபா வேட்பாளர் தேர்வில், நடந்த குளறுபடியை தொடர்ந்து, லோக்சபா தேர்தலுக்கு, புதிய வேட்பாளர் பட்டியல், தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், அரசியல் கட்சிகள் அனைத்தும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில், அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக, அ.தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கியது. கட்சி சார்பில், போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து, விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தொகுதிக்கு ஒருவர்:
தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 லோக்சபா தொகுதிகளுக்கும், 3,000க்கும் மேற்பட்டோர் மனுச் செய்து, தலா, 25 ஆயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்தினர்.ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும், தேர்தல் பணிகளை கவனிக்க, அமைச்சர்கள் உட்பட மூன்று பேர், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் சட்டசபை தொகுதிவாரியாக, ஆலோசனை கூட்டங்களை நடத்தினர்.அதன்பின், லோக்சபா தேர்தலில் நிற்கும் வேட்பாளருக்கு, மூன்று பேரை பரிந்துரை செய்யும்படி, மாவட்டச் செயலர்களிடம் கேட்கப்பட்டது; அவர்களும், பரிந்துரை செய்தனர். அந்தப் பட்டியலில் இருந்து, தொகுதிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். அவர்கள் குறித்த விவரங்கள், கட்சியினரிடம் சேகரிக்கப்பட்டன.உளவுத் துறையினரிடமும், சம்பந்தப்பட்டவரின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு:
இச்சூழலில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட, திரு?நல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் முத்து கருப்பன், திருநெல்வேலி மேயராக இருந்த விஜிலா சத்தியானந்த், தூத்துக்குடி மேயரான சசிகலா புஷ்பா, மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்த சின்னத்துரை, ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இவர்களில், சின்னத்துரை மீது, ஊழல் செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. உடன் அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். கடந்த ராஜ்யசபா தேர்தலின்போதும், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, சரவணபெருமாள் மீது, குற்றச்சாட்டு வந்ததைத் தொடர்ந்து நீக்கப்பட்டார். கட்சி நிர்வாகி கள், தங்களுக்கு வேண்டியவர்களை, வேட்பாளர்களாக பரிந்துரை செய்வதால், இதுபோன்ற நிலை ஏற்பட்டது.
கடும் அதிருப்தி:
இது கட்சி தலைமைக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா வேட்பாளர் பட்டியலிலும், இதுபோன்ற நபர்கள் இடம்பெற்று விடக்கூடாது என்பதால், வேட்பாளர் தேர்வில், அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தயாரித்த வேட்பாளர் பட்டியலுடன், புதிய பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கட்சி நிர்வாகிகளிடம், ஆலோசனை கேட்கப்பட்டு ள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறுகையில், 'லோக்சபா தொகுதி வேட்பாளர்களாக, ஏற்கனவே தேர்வானவர்களில், சிலரது பெயரை நீக்கிவிட்டு, புதிய நபர்களை பரிந்துரை செய்யும்படி, மாவட்டச் செயலர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. புதிய பட்டியல் தயாராக உள்ளதால், கட்சியினர் விரும்புபவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது' என்றன.
- நமது சிறப்பு நிருபர் - -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE