லோக்சபா தேர்தலில் போட்டியிட, தி.மு.க., சார்பில், 1,000த்துக்கும் மேற்பட்டோர், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் செலுத்திய கட்டணம் மூலம், 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளது. வேலூர் தொகுதியில், முன்னாள் அமைச்சர், துரைமுருகனின் மகன், கதிர்ஆனந்த் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தி, 130 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, 20ம் தேதி முதல் விருப்ப மனுக்கள், கட்சித் தலைமையகமான அறிவாலயத்தில் பெறப்படுகின்றன. விருப்ப மனு கட்டணமாக, பொது தொகுதிக்கு, 25 ஆயிரம் ரூபாயும், தனித்தொகுதி மற்றும் பெண்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.
விருப்ப மனு:
நேற்று மாலை வரை, 1,400 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று, தை அமாவாசை என்பதால், விருப்ப மனு சமர்ப்பிக்க, அறிவாலயத்திற்கு அதிகம் பேர் வந்திருந்தனர். தூத்துக்குடியில் போட்டியிட விரும்பி, அம்மாவட்ட, தி.மு.க., செயலர், பெரியசாமியின் மகன் ஜெகனும், திருநெல்வேலிக்கு தேவதாஸ் சுந்தரமும், கள்ளக்குறிச்சிக்கு, வழக்கறிஞர் செல்வநாயகமும், கடலூரில், 'சீட்' கேட்டு, முன்னாள் மத்திய அமைச்சர், செஞ்சி ராமச்சந்திரனும், தென் சென்னை தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்புவும், விருதுநகர் தொகுதிக்கு, கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் மனுத்தாக்கல் செய்தனர்.
ரூ.3 கோடி:
வேலூர் தொகுதியில், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட வேண்டும் என, அவர் உட்பட, 130 பேர் விருப்ப மனுக்கள் வழங்கியுள்ளனர். விருப்ப மனுக்கள் மூலம், கட்டணமாக, 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளது. கருணாநிதி, ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என, எத்தனை பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்ற விபரத்தை, ஓரிரு நாளில், தி.மு.க., தலைமை வெளியிடும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமாவாசை 'ஸ்பெஷல்':
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும், தே.மு.தி.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, அக்கட்சித் தலைமை, விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. கடந்த, 23ம் தேதி, விருப்ப மனுக்கள் பெறுவது துவங்கியது. முதல் நாளன்று, 100க்கும் மேற்பட்ட, தே.மு.தி.க., நிர்வாகிகள், 'சீட்' கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர், தங்கள் மாவட்டத்தில் போட்டியிட வலியுறுத்தி, மாவட்ட செயலர்கள் பலர் விருப்பமனு கொடுத்தனர். அதன்பின், விருப்ப மனு தாக்கல் ஆமை வேகத்தில் நடந்தது. அமாவாசை நாளான நேற்று, மீண்டும் மனு தாக்கல், சூடுபிடித்தது. நேற்று ஒரே நாளில், 200க்கும் மேற்பட்டவர்கள், விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால், தே.மு.தி.க., அலுவலகம், மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. 'நாளைக்குள், விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, தே.மு.தி.க., தலைமை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.,வை ஒப்பிடுகையில் தி.மு.க.,வில் ஆர்வம் குறைவே:
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, அக்கட்சி தலைமை, விருப்ப மனுக்களைப் பெற்ற போது, 4,500க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில், 1,000த்துக்கும் மேற்பட்ட மனுக்கள், ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என, தாக்கல் செய்யப்பட்டவை. அதை ஒப்பிடுகையில், தி.மு.க.,வில், இதுவரை, பாதி அளவுக்கு கூட, விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், தற்போது, எம்.பி.,க்களாக உள்ளவர்கள் சார்பாகவே, அதிக அளவில் மனுக்கள் தாக்கலாகியுள்ளன. அதாவது, தற்போதைய எம்.பி.,க்கள் தாங்கள் மட்டுமின்றி, தங்களின் ஆதரவு ஒன்றிய, நகர, மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலமாக, தங்களுக்காகவும், தங்களின் வாரிசுகளுக்காகவும் சீட் கேட்டு மனு செய்துள்ளனர். இதைப்பார்க்கும் போது, புதியவர்கள் அதிக அளவில் போட்டியிட விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. அதற்கு, தி.மு.க., சரியான கூட்டணியை இன்னும் அமைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம் என, நம்பப்படுகிறது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE