சென்னை: ''பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு, நாடகம் பற்றி எனக்கு தெரியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில், அவரது பேட்டி: 'கவர்னர் உரை திருப்திகரமாக இல்லை. மக்கள் பிரச்னைக்காக எதுவுமில்லை' என, சொல்லி, சில கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. அந்த கட்சிகள் சார்பில் சொல்லப்பட்ட கருத்துகள் தான், என் கருத்தும், தி.மு.க., கருத்தும். விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் தான், கவர்னர் உரை மீதான விவாதத்தை, மூன்று நாட்களுக்கு மட்டும் நடத்த உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்பது, கனவா, நனவா என்று எனக்கு தெரியாது. பிரதமர் ஆவதற்கு, வழக்குகள் இடையூறாக இருக்குமா என்றும், அதைபற்றிய சட்ட நுணுக்கங்களும் எனக்கு தெரியாது. 'டெசோ' கூட்டத்தில், இந்திய மீனவர்களை, இலங்கை ராணுவம் கைது செய்வது குறித்து விரிவாக பேசி முடிவு செய்வோம். தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. 'அழகிரி பிரச்னை என்பது, குடும்பத்திற்குள் நடக்கும் நாடகம்' என, பிரேமலதா விமர்சித்திருக்கிறார். அவருக்கு தெரிந்த அளவிற்கு, நாடகம் பற்றி எனக்குத் தெரியாது. தி.மு.க.,வில் உள்ளவர்கள், மாவட்டச் செயலர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போன்றவர்களை பற்றி, அபாண்டமாக, பி.சி.ஆர்., குற்றச்சாட்டை போலீசாரிடம் சொல்லி, போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பின், கட்சி அதை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE