பாம்பன் : "மீனவர் பிரச்னை குறித்து ஒவ்வொரு லோக்சபா கூட்டத்தொடரிலும் பா.ஜ., குரல் எழுப்புகிறது. இதுகுறித்து விவாதிக்கிறது. மத்திய காங்., பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. மத்திய அரசு, ஊமை அரசாக விளங்குகிறது,” என, பாம்பனில் நடந்த கடல் தாமரை போராட்டத்தில் பா.ஜ., லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக சாடினார்.
அவர் பேசியதாவது: துரதிஷ்டவசமாக இதுவரை மத்திய காங்., அரசு, மீனவர்களை புறக்கணித்து வந்துள்ளது. மீனவர்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வசதி இல்லை. பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காணவில்லை. தமிழகம், குஜராத் மாநிலங்களில் மீனவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.குஜராத் மீனவர்கள், பாகிஸ்தான் நாட்டவரால் சிறை வைக்கப்படுகின்றனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர், சிறை வைக்கின்றனர். இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நான் இந்திய அரசு பிரதிநிதியாக இலங்கை சென்ற போது, இப்பிரச்னை குறித்து அதிபர் ராஜபக்சேயிடம் வலியுறுத்தினேன். அவர், " தமிழக மீனவர்கள், மீன்களை மட்டும் பார்க்கின்றனர். எல்லையை பார்ப்பதில்லை,” என்றார். அவரிடம் இப்பிரச்னையை, இந்திய மீனவர் பிரச்னையாக பார்க்க வலியுறுத்தினேன். அதன் பிறகும் தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். மீனவர் பிரச்னையை பா.ஜ., புரிந்து கொண்டுள்ளதால், இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
இங்கு கணவரை, மகனை இழந்தவர்கள் அமர்ந்துள்ளீர்கள். நாகபட்டினத்திற்கு நான் சென்ற போது, 29 வயதான பெண், கணவரை இலங்கை கடற்படை சுட்டு கொன்றதாக, கூறினார். அவருக்கு இரு பெண் குழந்தைகள். ஒரு குழந்தை பிறந்து 2 மாதங்கள் தான் ஆனது. அவருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தையில்லை. இப்பிரச்னை குறித்து லோக்சபாவில் தொடர்ந்து குரல் எழுப்பினேன். மத்திய காங்., அரசு, ஊமை அரசாக உள்ளது. லோக்சபாவில் சோனியாவிடம், நீங்களும் ஒரு பெண் தானே, மீனவ பெண்களின் அவலத்தை போக்குங்கள் என வலியுறுத்தினேன். ஒவ்வொரு லோக்சபா கூட்டத் தொடரிலும் மீனவர் பிரச்னையை எழுப்புகிறோம். ஆனால் மத்திய அரசு தீர்வு காணவில்லை. நேற்று கூட தமிழக மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
சமீபத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு மீனவரை, பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி, ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்து அனுப்பியுள்ளார். அவர் மீனவர் பிரச்னையை நன்கு அறிந்தவர் என்பதால், தீர்வு காண குரல் கொடுப்பார். மீனவர் பிரச்னைக்காக பா.ஜ., மீனவர் பிரிவை ஏற்படுத்தி, சில கொள்கைகளையும் வகுத்துள்ளது. தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ், அதற்கு வழிகாட்டியாக செயல்படுவார். இதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு, நாட்டின் பல பகுதி மீனவர்களை சந்தித்து பிரச்னைகளை தொகுத்து அறிக்கை அளித்துள்ளது.அந்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் கொள்கையாக மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால், மீனவர் சமுதாயத்திற்காக தனி அமைச்சர் நியமிக்கப்படுவார். கடற்கரை பகுதிகளில் மீனவர்களுக்காக மருத்துவம், பள்ளி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். மீனவர்களுக்காக பா.ஜ., கொள்கைகளை, தமிழில் அச்சடித்து வினியோகிக்க வேண்டும் என மாநில தலைவரை கேட்டு கொள்கிறேன்.
மத்தியில் விரைவில் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி வரவுள்ளது. இலங்கை பிரச்னைக்கு, தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராகி தீர்க்க முடியும் என்பதில்லை. இந்திய பிரதமரால் தான் தீர்க்க முடியும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் மீட்கப்படுவர். உங்களை பாதுகாக்க பா.ஜ., உள்ளது. பிப்., 5ல் லோக்சபா கூட்டத்தொடர் துவங்கவுள்ளது. இலங்கை, மீனவர் பிரச்னை குறித்து கண்டிப்பாக குரல் எழுப்புவேன். மார்ச்சில் லோக்சபா தேர்தல் வரவுள்ளது. தமிழகத்தில் 2 அல்லது 3 கட்டமாக தேர்தல் நடக்கலாம். தேர்தலில் பிராந்திய சிந்தனையின்றி, இந்தியர் என்ற முறையில் பா.ஜ.,க்கு ஓட்டளிக்க வேண்டும். மத்தியில் நிலையான அரசை, பா.ஜ.,வினால் மட்டும் கொடுக்க முடியும்.இந்திய எல்லை பகுதியில் இந்தியரின் தலையை துண்டித்து, பாகிஸ்தான் நாட்டவர் கொண்டாடுகின்றனர். இதை மத்திய அரசு, வேடிக்கை பார்த்தபடி இருக்கிறது. மத்தியில் என்ன தான் ஆட்சி நடக்கிறது? பா.ஜ., ஆட்சியாக இருந்தால், இத்தகைய சம்பவங்கள் நடக்குமா?
2 ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், நிலக்கரி ஊழல் என மத்திய அரசில், ஊழல்களுக்கு மேல் ஊழல்கள் நடக்கின்றன. ஆனால் மத்திய அரசு, இதை கண்டுகொள்ளவேயில்லை. ஒன்பது ஆண்டுகள் பிரதமராக இருந்து விட்டு இப்போது மன்மோகன் சிங், இனி பிரதமராக பதவி ஏற்க மாட்டேன் என்கிறார். நீங்கள் என்ன சொல்வது? மக்களே முடிவு செய்து விட்டார்கள். மத்தியில் காங்., ஆட்சி செய்து மக்களை துன்புறுத்தியது போதும். நல்ல அரசை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். பா.ஜ., சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என தகவல்களை சிலர் பரப்பக்கூடும். கோவாவில் பா.ஜ., அரசு நடக்கிறது. அங்கு சிறுபான்மையினத்தை சேர்ந்த 5 பேர் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். உண்மையான மதசார்பின்மை மீது பா.ஜ., நம்பிக்கை வைத்துள்ளது. ஒரு இந்து நல்ல இந்துவாக இருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவர், நல்ல கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்பதைதான் பா.ஜ., வலியுறுத்துகிறது. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
கண்ணீருடன் கதறிய மீனவபெண்கள்: கட்டி தழுவி ஆறுதல் கூறிய சுஷ்மா:கடல் தாமரை போராட்டத்தில் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்களின் மனைவிகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கிய சுஷ்மா பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல், அவர்களை சந்தித்தார். தங்கச்சிமடம் ஜான்சன் மனைவி ஜெனிட்டா, கணவர் கொல்லப்பட்டதை கதறியவாறு தெரிவித்தார்.அதே ஊரை சேர்ந்த சலோனோ, தன் கணவர் அந்தோணியும் கொல்லப்பட்டதாக கூறி கதறினர். அவர்களை கட்டி தழுவி, சுஷ்மா சுவராஜ் ஆறுதல் கூறினார். மேலும் பல மீனவ பெண்களும் அவரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சுஷ்மாவிற்கு அப்பெண்கள் கூறுவதை நிர்வாகி ஒருவர் எடுத்து கூற முயன்றார். அப்போது சுஷ்மா, "எனக்கு விளக்க வேண்டாம். பெண்கள் விடும் கண்ணீரிலிருந்து அவர்களின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. இப்பிரச்னை குறித்து லோக்சபா கூட்டத் தொடரில், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்,” என்றார்.
பிரசார மேடையான போராட்ட மேடை:
*போராட்டத்தில் பங்கேற்க மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் சுஷ்மா சுவராஜ் மண்டபம் கேம்ப் வந்தார். அங்கிருந்து காரில், போராட்ட மேடைக்கு வந்தார். பேசிய பின், மீண்டும் மண்டபம் கேம்ப் சென்று, ஹெலிகாப்டரில் மதுரை சென்றார்.
*மேடைக்கு செல்லும் வழியில் காரில் இருந்தவாறு பாம்பன் பாலம், ரயில் பாலம், கடல் அழகை ரசித்தார்.
*போராட்டத்தில் 40 நிமிடங்கள் சுஷ்மா சுவராஜ் பேசினார். அவரது பேச்சை, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தமிழில் மொழி பெயர்த்தார்.
*சுஷ்மா சுவராஜூக்கு கட்சியினர் மலர்கிரீடம், ஆளுயர மலர் மாலை மற்றும் வீரவாள் பரிசளித்தனர். மீனவர் சங்கத்தினர் மாதிரி படகு, வலம்புரிசங்கு போன்ற நினைவு பரிசுகள் வழங்கினர்.
*ராமநாதபுரம் மட்டுமின்றி தென் மாவட்ட பா.ஜ.,வினர் திரளாக பங்கேற்றனர்.
*இல.கணேசன் பேசுகையில், "கன்னியாகுமரியில் சூரியன் உதயமாவதை பார்க்கலாம். இங்கு நீங்கள் சூரியன் மறைவதை பார்க்கும் வகையில் உள்ளீர்கள்,” என, 'இக்' வைத்து பேச, கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE