பா.ஜ.,வுக்காக வாய்ஸ் கொடுப்பாரா ரஜினிகாந்த்? தேதி மோடியை சந்திக்க வைக்க ஏற்பாடு| Will Rajinikanth voice for BJP | Dinamalar

பா.ஜ.,வுக்காக 'வாய்ஸ்' கொடுப்பாரா ரஜினிகாந்த்? தேதி மோடியை சந்திக்க வைக்க ஏற்பாடு

Updated : பிப் 02, 2014 | Added : பிப் 01, 2014 | கருத்துகள் (18)
Share
'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்காக, நடிகர் ரஜினிகாந்த், 'வாய்ஸ்' கொடுக்க வேண்டும்' என, அவரிடம் வேண்டுகோள் விடுக்கவும், இதுதொடர்பாக, அவரைச் சந்தித்துப் பேசவும், பா.ஜ., மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.வரும், 10ம் தேதி, ரஜினிகாந்த், சீனா செல்ல இருப்பதால், 8ம் தேதி சென்னை வரும் மோடியும், அவரும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டு
பா.ஜ.,வுக்காக 'வாய்ஸ்' கொடுப்பாரா ரஜினிகாந்த்? தேதி மோடியை சந்திக்க வைக்க ஏற்பாடு

'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்காக, நடிகர் ரஜினிகாந்த், 'வாய்ஸ்' கொடுக்க வேண்டும்' என, அவரிடம் வேண்டுகோள் விடுக்கவும், இதுதொடர்பாக, அவரைச் சந்தித்துப் பேசவும், பா.ஜ., மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.வரும், 10ம் தேதி, ரஜினிகாந்த், சீனா செல்ல இருப்பதால், 8ம் தேதி சென்னை வரும் மோடியும், அவரும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


ஏழாம் பொருத்தம்:


நடிகர் ரஜினிக்கும், அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நேரத்தில் மட்டும், தன் லட்சக்கணக்கான ரசிகர்கள், யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என, தன் பாணியில், 'வாய்ஸ்' கொடுப்பது அவரது வழக்கம். 1996 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - மூப்பனாரின் தமிழ் மாநில காங்., கூட்டணிக்கு ஆதரவாக, 'வாய்ஸ்' கொடுத்தார்.கடந்த, 1998ல் நடந்த லோக்சபா தேர்தலின் போதும், அதே கூட்டணிக்கு, 'வாய்ஸ்' அளித்தார். 2004 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு எதிராகவும், அ.தி.மு.க, - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஓட்டுச்சாவடியில் ஓட்டு அளித்து விட்டு, வெளியே வந்த ரஜினி, அ.திமு.க., வுக்கு ஆதரவாக பேசினார். அவரது பேச்சு மூலம், அவரது ரசிகர்கள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு அளித்தனர். வரும் லோக்சபா தேர்தலில், ரஜினியின் ஆதரவை கேட்க, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது. 'ரஜினியிடம் ஆதரவு கேட்போம்' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர், ஏற்கனவே நிருபர்களிடம் தெரிவித்து உள்ளனர்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கும், ரஜினிக்கும் நல்ல நட்புறவு உள்ளது. ரஜினி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது, அவரி டம் மோடி உடல் நலம் விசாரித்தார். வறட்சி மாநிலமாக இருந்த குஜராத்தை, நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்தும், 60,000 தடுப்பணைகள் கட்டியும், பசுமை புரட்சியை மோடி ஏற்படுத்தியது, ரஜினியை மிகவும் கவர்ந்த விஷயம்.


ஒரு கோடி நன்கொடை:


வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது, கங்கை - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, ஒரு கோடி ரூபாய் நன்கொடை தருவதாக, ரஜினி உறுதி அளித்தார்.நதிநீர் இணைப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறையுள்ள, பா.ஜ., கொள்கைகளும், ரஜினியின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருப்பதால், மோடிக்கு ஆதரவாக, அவர், கண்டிப்பாக 'வாய்ஸ்' அளிப்பார் என, பா.ஜ., தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், ரஜினியிடம், அவரது நண்பரும், பத்திரிகையாளருமான சோவும் ஆதரவு கேட்க திட்டமிட்டு உள்ளார். விரைவில், அவர் ரஜினியை சந்தித்து பேசுவார் என, தெரிகிறது. மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை அமையும் போது, ரஜினியை கவுரவப்படுத்தும் வகையில், அவருக்கு ராஜ்யசபா எம்பி., பதவி வழங்கவும் வாய்ப்பு உள்ளது.


நட்சத்திர தம்பதியரும்...:


ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியில் இருந்த, 'இதுதாண்டா போலீஸ்' புகழ் நடிகர், டாக்டர் ராஜசேகரும், நடிகை ஜீவிதாவும், பா.ஜ.,வில் இணைந்து உள்ளனர். இந்த நட்சத்திர தம்பதியர், விரைவில் ரஜினியை சந்தித்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு கேட்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், 'கோச்சடையான்' பட விவகாரம் தொடர்பாக, வரும், 10ம் தேதி, சீனா செல்ல ரஜினி திட்டமிட்டு உள்ளார். அதற்கு முன், 8ம் தேதி, சென்னை வண்டலூரில் நடைபெறவுள்ள பா.ஜ., பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று, கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் கைகோர்க்கிறர்.அதனால், சென்னையில் மோடியும், ரஜினியும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் ஈடுபட்டு உள்ளார் என, அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X