உளுந்தூர்பேட்டை யில், நாளை நடைபெறும், ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்கு, தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் கட்சி களுக்கு, தே.மு.தி.க., அழைப்பு விடுத்துள்ளது.அ.தி.மு.க., மற்றும் ச.ம.க., தவிர்த்து, மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, கூட்டணி விஷயத்தில், குழப்ப நிலையை நீடிக்க வைத்திருக்கிறார் விஜயகாந்த். அதனால், நாளைய மாநாட்டிலாவது, 'தெளிவு' கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பு, கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தே.மு.தி.க., சார்பில், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள, எறஞ்சியில், நாளை, ஊழல் எதிர்ப்பு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தான், கூட்டணி குறித்து முடிவு எடுத்து, அறிவிக்கப் போவதாக, அந்தக் கட்சியின் தலைவர், விஜயகாந்த் ஏற்கனவே கூறி இருந்தார்.
ரகசிய பேச்சு வார்த்தை:எனவே, இம்மாநாட்டுக்கு, மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அதிலும், தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள், மாநாட்டு முடிவை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றன. இவ்விரு கட்சிகளும், தே.மு.தி.க.,வுக்கு கூட்டணி அழைப்பு விடுத்து உள்ளன. ரகசியமாகவும், வெளிப்படையாகவும், தே.மு.தி.க.,வுடன் பேச்சு வார்த்தையும் நடத்தி முடித்துள்ளன.
பா.ஜ., அணியில் சேர...:இந்நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட வந்த, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தி.மு.க.,வில் ஏற்பட்டு உள்ள குடும்ப சண்டை குறித்து, அளித்த பேட்டியும், அதற்கு கருணாநிதி சொன்ன சூடான பதிலும், இரு
கட்சிகளுக்கும் இடையே உறவு மலருவதற்கான வாய்ப்பை சூன்யமாக்கி உள்ளதாக
கருதப்பட்டது.அதேபோல, மாநாட்டு ஏற்பாடுகளை பார்வை யிட்ட பின், கட்சி
நிர்வாகிகள் சிலருடன் பிரேமலதா பேசியுள்ளார். அப்போது கூட்டணி திட்டம்
குறித்த விவாதம் நடந்துள்ளது. 'மாவட்ட செயலர்களில் பெரும்பான்மையோர்,
பா.ஜ., அணியில் சேர ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாநாட்டின் முடிவு, அதை
ஒட்டித்தானே இருக்கும்' என, நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்து, பிரேமலதா கூறியதாவது: நமக்கு வெற்றி பெறுவது தான் இலக்கு. ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தவிடு பொடியாக்க வேண்டும். அதற்கு நாம் வலுவான கூட்டணியில் இருக்க வேண்டும். பா.ஜ.,வுடன் சேர்ந்தால், அந்தளவுக்கு வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி உள்ளது. மேலும், அங்கு பா.ம.க.,வும் உள்ளது.சிறுபான்மையினர் ஆதரவையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. என்னதான் பிரசாரம் செய்தாலும், கடைசியில் காங்கிரசா, பா.ஜ.,வா என்ற கேள்வி தான் மக்கள் மனதில் எழும். அதற்கேற்ப நமது முடிவு அமையும்.இவ்வாறு, பிரேமலதா கூறியுள்ளார்.ஒரே நேரத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக பேட்டியும், பா.ஜ.,வுக்கு எதிராக கருத்தும் கூறி, கூட்டணி திட்டத்தை கேள்விக்குறியாக்கி இருந்தார் பிரேமலதா.
அழைப்பு :இச்சூழ்நிலையில், மாநாட்டுக்கு வரும்படி, தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் அழைப்பு அனுப்பி, கூட்டணி குழப்பத்தை புதுப்பித்துள்ளது, தே.மு.தி.க., தலைமை.இதுகுறித்து, தே.மு.தி.க.,
நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க., மற்றும் சரத்குமார் கட்சியை
தவிர்த்து, மற்ற கட்சிகளுக்கு எல்லாம் அழைப்பு விடலாம் என்பது தான்
விஜயகாந்த் கூறிய யோசனை. அதன்படி, தி.மு.க., - காங்கிரஸ் -பா.ஜ., - பா.ம.க., - ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் - ம.ம.க., என, எல்லா கட்சிகளுக்கும் மாநாட்டு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.இதற்காக, எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமையில், மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், இக்கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று, மாநாட்டு அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர். எங்களை பொறுத்தவரை, அ.தி.மு.க., தான் எதிரி. அதை, இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். மற்ற கட்சிகளுடன் எந்த பிணக்கும் இல்லை. அதை வெளிப்படுத்தவே, இந்த அழைப்பு.மற்றபடி கூட்டணி விஷயத்தை விஜயகாந்த் முடிவு செய்வார். கட்சியினரின் கருத்துக்கள் அடிப்படையிலேயே அவரது முடிவு இருக்கும். அதில் சந்தேகம் வேண்டாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.- நமது சிறப்பு நிருபர் -