உளுந்தூர்பேட்டை அடுத்த, எறஞ்சியில், நாளை நடைபெற உள்ள, தே.மு.தி.க., ஊழல் எதிர்ப்பு மாநாட்டிற்கு, 24 நிபந்தனைகளுடன், போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால், அந்தக் கட்சி தொண்டர்களும்,
நிர்வாகிகளும், விஜயகாந்த் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த, எறஞ்சியில், தே.மு.தி.க.,வின், ஊழல் எதிர்ப்பு மாநில மாநாடு, நாளை நடக்கிறது. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு, கடந்த மாதம், 11ம் தேதி, விழுப்புரம் எஸ்.பி.,யிடம், அம்மாவட்ட, தே.மு.தி.க., செயலர், வெங்கடேசன் மனு அளித்தார். இந்த மனுவுக்கு, இரு வாரங்களுக்கு மேலாகியும் பதில் அளிக்கப்படாததால், மாநாட்டிற்கு, போலீசார் அனுமதி கொடுப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அத்துடன், மாநாட்டிற்கு அனுமதி தராவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அனுமதி பெறுவதற்கான, ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்நிலையில், நேற்று மதியம், 2:10 மணிக்கு, எஸ்.ஐ., ராஜீவ்காந்தி என்பவர், மாநாட்டிற்கான அனுமதி கடிதத்தை, மாவட்ட செயலர், வெங்கடேசனிடம் வழங்கினார்.
அனுமதி கடிதத்தில், 24 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
தே.மு.தி.க., மாநாடு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி நடப்பதால், பொதுமக்களுக் கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
தொண்டர்கள், வி.ஐ.பி.,க்கள் என, வாகனங்கள் நிறுத்துவதற்கு, தனி இட வசதி செய்து கொள்ள வேண்டும்.
மின் சாதனங்களைக் கையாள, தகுதியான, அங்கீகரிக்கப்பட்ட ஆட்களை நியமிக்க வேண்டும்.
மாநாடு இரவில் நடப்பதால், போதுமான வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், ஒளி, ஒலி வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மாநாடு நடக்கும் இடத்தில், தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு சாதனங்கள் இடம் பெற வேண்டும்.
மேடைக்கான தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.
மாநாட்டை குறித்த நேரத்தில் துவக்கி, இரவு, 10:00 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தக் கூடாது.
கூட்டம் முடிந்து தொண்டர்கள் செல்லும் வரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
இவை உட்பட, 24 நிபந்தனை கள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டிகு அனுமதி கிடைத்த தகவல், உடனடியாக, திருமலை திருப்பதிக்கு சென்றுள்ள விஜயகாந்திற்கும், அவரது மைத்துனர் சுதீஷிற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும், "எல்லாம்... அந்த ஏழுமலையான் செயல்' எனக்கூறி, நிம்மதி அடைந்தனர். அத்துடன், தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும், உற்சாகமாக, மாநாட்டு ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டசபை கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.,க்கள் "ஆப்சென்ட்' : "மாநாடு ஏற்பாடுகளில், கவனம் செலுத்துங்கள்' என, கட்சித் தலைமை உத்தரவிட்டதால், தே.முதி.க., - எம்.எல்.ஏ.,க்கள், நேற்று சட்டசபைக்கு செல்லவில்லை.
தே.மு.தி.க.,வில் மாவட்ட செயலர்களாக உள்ள பலர், எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியுள்ளதால், அதில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம், அவர்களுக்கு ஏற்பட்டது. இதையறிந்த, தே.மு.தி.க., தலைமை, கவர்னர் உரையில் பங்கேற்க மட்டும், எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுமதி வழங்கியது.
அதன்பின், நாளை நடக்க உள்ள, கட்சி மாநாட்டு ஏற்பாடுகளில் முழுக்கவனம் செலுத்தும்படி உத்தர விட்டது. இதையடுத்து, சென்னையில் முகாமிட்டிருந்த, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, புறப்பட்டு சென்றனர். இதனால், சட்டசபை நிகழ்ச்சிகளில், நேற்று அவர்கள் பங்கேற்கவில்லை.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE