அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அரசியல் உலகிலே? - ஆர்.நடராஜன் -| Dinamalar

அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அரசியல் உலகிலே? - ஆர்.நடராஜன் -

Added : பிப் 01, 2014 | கருத்துகள் (11)
Share
அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அரசியல் உலகிலே? - ஆர்.நடராஜன் -

'குடும்ப தகராறு, கொலு மண்டபத்திற்கு வரும் விசித்திரத்தை, சரித்திரம் இப்போது தான், முதன் முதலாக சந்திக்கிறது' என்ற வசனத்தைக் கருணாநிதி எழுதிய போது, அவருக்குக் குடும்பம் இருந்தது, கொலு மண்டபம் இல்லை. இப்போது குடும்பம் இருக்கிறது, கொலுமண்டபமும் இருக்கிறது. குடும்பம், கொலு மண்டபத்தில் இருக்கிறது.கற்பனைப் பாத்திரத்திற்கு, தான் எழுதிய வசனம், பின்னர் தன்னையே தாக்கும் என்று, அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒரு வசனகர்த்தா, முதல்வரானதால் ஏற்பட்ட விபரீதம் இது. ஆனாலும், இதை யாரும் அதிசயமாகப் பார்க்கவில்லை. ஏன்? குடும்பம், கொலு மண்டபம் இரண்டும் வேறல்ல, என்ற அத்வைத நிலையை, கருணாநிதி எப்போதோ வெகு சாமர்த்தியமாக உருவாக்கி விட்டார்.

கொலுமண்டபம் என்ற பெயரும் பொருத்தமானதே. ஏனென்றால், தி.மு.க.,வின் கொலுமண்டபத்தில் படிகள், பிறைகள், மாடங்கள் என்று எத்தனை இருந்தாலும், (செயற்குழு, பொதுக்குழு என்ன பெயராக இருந்தால் என்ன) அத்தனை இடங்களிலும், பொம்மைகளே இருக்கின்றன. சிறிய அமைச்சர், பெரிய அமைச்சர், ராஜகுரு என்று தர்பாரில் எல்லாமே அவர் தான். கேள்வியும் அவரே, பதிலும் அவரே.குடும்பத்தினரை மட்டுமே கொலுமண்டபத்தில் ஏற்றிவிட்டீர்களே என்று, யாரும் அவரைக் கேள்வி கேட்கவில்லை. அப்படிக் கேட்கக் கூடும் என்று சந்தேகப்பட்ட சிலரை, கருணாநிதி வெளியேற்றினார் அல்லது வெளியேறச் செய்தார். அதனால் கட்சியை இப்படிக் குடும்ப அமைப்பாக மாற்றி விட்டீர்களே என்று, அவரை நேருக்கு நேராகக் கேட்க சிறு தலைகள், பெருந்தலைகள் இல்லை. தலைகள் இல்லை என்பதால், தளைகளும் இல்லை. இந்த நிலையில் கருணாநிதியின் குடும்பம் மட்டுமே, கொலுமண்டபத்தை நிறைத்திருக்கிறது.குடும்பமே கட்சி என்பது, ஜனநாயகமல்ல என்பதை, எடுத்துச் சொல்லப் பழம் பெரும் கட்சியான காங்கிரசிலேயே யாரும் இல்லை. வெகு சில விதிவிலக்குகள் நீங்கலாக, தனி நபர்களால் துவங்கப்பட்ட அடுத்த தலைமுறைக் கட்சிகள் குடும்பக் கிளைகளே. மூன்றாம் தலைமுறைக் கட்சிகள், மனைவி, மைத்துனன் என்று குடும்பத் தொழில்களாகவே துவங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கருணாநிதியைக் கேள்வி கேட்கும் தகுதி, எவருக்கும் இல்லாமல் போகிறது.

கட்சிக்குள் குடும்பத்தினர் அல்லாத பிறர், இது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. சரி, தலைமை என்றால் பொறுப்பு, இழுபறி, பழி, பாவங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அதெல்லாம் தலைவர் பொறுப்பு, நாம் அமைச்சர்களாக கட்சியில் வட்டம், சதுரம், முக்கோணம் என்று ஏதோ ஒரு பதவியில் அமர்ந்து, அதில் கிடைப்பதை வைத்து காலம் தள்ளலாம் என்று, இரண்டாம், மூன்றாம் நிலைத்தலைவர்கள் நினைத்துவிட்ட பின், தி.மு.க., ஒரு காலத்தில் மிகவும் பெருமையாக சொல்லி வந்த உட்கட்சி ஜனநாயகம் உறவுமுறை, ஜனநாயகமாகிவிட்டது.குடும்பத்தில் அதாவது கட்சியில், தவறு தவறு கட்சியாகிய குடும்பத்தில் அல்லது குடும்பமாகிய கட்சியில், சர்வாதிகாரம் வேண்டாம், ஜனநாயகம் வேண்டும். பாரபட்சம் கூடாது, அவருக்கு இது என்றால், எனக்கு எது என்ற சண்டை, சச்சரவுகளில், தி.மு.க., சிக்கிக் கொண்டு திண்டாடுகிறது.
சில ஆண்டுகளாக புகைந்து வரும் ஸ்டாலின் - அழகிரி சண்டை, இந்த உறவு முறை, முட்டாளின் வெளிப்பாடே. பதவிப் பொறுப்பு அல்லது வயதில் மூத்தவர் என்ற நிலையில் உள்ள எவரும், கருணாநிதியை, ஏன் உங்கள் குடும்பத்தினரே, பதவியில் இருக்க வேண்டும் என்று கேட்டதில்லை. வேறு யாராவது இருக்கட்டுமே என்று, யோசனை சொன்னதுமில்லை. மூன்றாம் நபரைத் தலைமைக்கு முன்மொழிந்ததில்லை. ஏனெனில், இவர்கள் கெஞ்சிக் கெஞ்சி பதவிகள் கேட்பது, தம் வாரிசுகளுக்காகவே.
இதை நன்றாகத் தெரிந்து கொண்ட தொண்டர்கள், தாம் என்றும், எந்தப் பதவிக்கும் வர முடியாது, தலைமையை ஆதரிப்பதன் மூலம், நோகாமல் வேறு ஆதாயங்கள் தேடிக் கொள்ளலாம் என்று, நினைத்து, பிறரது வாரிசுகள் வருவதை விட தலைவர் குடும்பத்து வாரிசுகளே வந்துவிட்டுப் போகட்டும் என்று, வம்சாவளி ஆட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

தமக்குள் இப்படிச் சண்டையிட்டுக் கொள்ளும் அழகிரி - ஸ்டாலின் சகோதரர்கள், அதே குடும்பத்தில் உள்ள வேறு இரண்டு சகோதரர்களின் ஒட்டுறவைப் பின்பற்றாமல் போனது துரதிர்ஷ்டம். யார் அந்த சகோதரர்கள். வேறு யார்? மாறன் சகோதரர்கள் தான். பெற்றோர் அவர்களைச் சண்டைக்கோழிகளாக வளர்க்கவில்லை. பெற்றோர் தம் படிப்புக்கும், பண்புக்கும் ஏற்றபடியே தான், பிள்ளைகளை வளர்க்கின்றனர். தன் மருமகன் முரசொலி மாறனிடமிருந்து, எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொண்ட கருணாநிதி, நல்ல தந்தையாக இருப்பது, எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லையே!அழகிரி - ஸ்டாலின் சண்டையும், சச்சரவும், பிரிவினையும் ஏதாவது கொள்கை வேறுபாடுகளினாலா? தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுவதை, அழகிரி விரும்பவில்லை என்ற பேச்சு, இதில் ஏதோ கொள்கை விவகாரம் இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. திராவிட மாயையில், எத்தனையோ பிரமைகள், ரூபங்கள். அதில் இதுவும் ஒன்று. விஜயகாந்த் பற்றிய கொள்கை வேறுபாட்டினால், அழகிரியை விலக்க நேர்ந்தது என்று கருணாநிதி, எங்கும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு மட்டுமே, விலக்கல் அறிக்கையில் வெளிப்பட்டது.

அழகிரியின் வெளியேற்றத்திற்குப் பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாநிதி, இந்தக் கொள்கை, கோட்பாடு, மோதல் பற்றி அதிகம் பேசவில்லை. 'என் இன்னொரு மகன் மூன்று மாதத்தில் சாவான் என்று, இவன் சாபம் கொடுத்தானே' என, பகுத்தறிவுவாதி, பத்திரிகையாளர்கள் நடுவே கலங்கினார். காலையில் ஏழு மணிக்கேவா வந்து கேட்பது என்று வருந்தினார். குடும்பம் சம்பந்தப்படாத நபர் அழகிரி என்றால், நிர்வாகிகள் வசம் கட்சி இருந்திருக்குமானால், அழகிரி கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்து, காத்திருந்து தலைவரிடம் தன் மனக்குறையைப் பக்குவமாக, நிறுவன நிர்வாகத்தில் ஜெனரல் மேனேஜர், மேனேஜிங் டைரக்டரைப் பார்க்கக் காத்திருந்து பேசுவது போல பேசியிருப்பார்.கட்சியே குடும்பம், குடும்பமே கட்சி என்று கருணாநிதி நிலைமையை மாற்றிய பின், மகன் எப்போது வேண்டுமானாலும், தந்தையை வந்து பார்ப்பதில் என்ன தவறு? 'ஏழு மணிக்கேவா' என்று கேட்பதில் பொருள் இல்லையே. வாதத்திற்காக என்றே வைத்துக் கொள்வோம். காலை, 10:00 மணிக்கு அழகிரி வந்து பார்த்திருந்தால் கேள்விகளும், கோரிக்கைகளும் சரியானவை என்று எடுத்துக் கொண்டிருப்பாரா கருணாநிதி?

இந்தக் கேள்வியும் எழும் என்பதை, அதிபுத்திசாலியான கருணாநிதி நன்றாக அறிவார். இருந்தும் ஏன் இதைச் சொன்னார்? ஒரு பிரச்னையில் இருந்து கொண்டே, அதை மெல்ல மெல்லத் திசை திருப்பும் சாமர்த்தியசாலி அவர். சண்டையெல்லாம் குடும்ப சண்டை தான். கட்சி ஒன்று பட்டால் குடும்பம் ஒன்றுபடுமா, குடும்பம் ஒன்றுபட்டால் கட்சி ஒன்றுபடுமா என்ற கேள்வி, இந்தக் கட்டத்தில் தேவையில்லை. ஏதோ கேட்டார், ஏதோ சொன்னேன். எல்லாவற்றையும் மறப்போம், மன்னிப்போம் கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, என்று கட்சி ஒற்றுமைக்காக கருணாநிதி இனிமேல் சொல்லப் போகும், பழைய வசனத்தின் புதிய பதிப்புக்கு இது ஒரு முன்னோட்டம்.கட்சியில் யாரும் இது பற்றி கவலைபடவில்லை. ஏனெனில் கருணாநிதியின் குடும்பக் கட்சியில், பிறருக்கு இடமில்லை. திருச்சி சிவா ராஜ்யசபா உறுப்பினராகியிருக்க வேண்டிய நேரத்தில், கனிமொழி ராஜ்யசபா உறுப்பினரானார். இதற்காகக் கருணாநிதி பலரிடம், கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சினார். மகள் தன் வழக்கிலிருந்து விடுபட அந்தப் பதவி, ஓரளவுக்கு உதவும் என்று நினைத்தார். அதனால், அப்போது சிவாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

விஜயகாந்த், தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருந்தால், இப்போதும் அந்த வாய்ப்பு நழுவிப் போயிருக்கும். பரவாயில்லை, சிவாவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. தேர்தல் கூட்டணியில், தி.மு.க.,வுடன் சேர பிடிக்காமல் நழுவினார் விஜயகாந்த். தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இல்லை என்பதனால், திரும்பவும் கட்சிக்குள் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ள, அழகிரிக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.எது எப்படியோ, கட்சி ஏற்கனவே கலகலத்துவிட்டது. கட்சி உடைந்தால் மேலும் சிக்கல்கள் வரும். அந்தக் சிக்கல்களிலிருந்து தப்பிவிட்டோம் என்ற திருப்தியுடன், தானைத் தலைவரின் கட்டளைக்கு உடன்படுவர் ஸ்டாலினும், கனிமொழியும். ஆக, எப்படி பார்த்தாலும், இது கட்சி முலாம் பூசப்பட்ட குடும்பச் சண்டை, மற்றவர்கள் சண்டையிடுவார்களோ என்று, கட்சியின் மூத்த தலைவர்களை ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளியேற்றிய கருணாநிதி, அடுத்த கட்டத்தில் தலைமைச் சண்டை, குடும்பத்துக்குள்ளேயே மூளும் என்று, எதிர்பார்த்திருக்க மாட்டார்.முதுமை, இரண்டு குடும்பங்கள் என்ற நிலையில் கருணாநிதி என்ற மாஜி நிர்வாகி, கருணாநிதி என்ற உழைப்பாளி, தளர்ந்த தகப்பனாகி எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார். இந்த நிலை ஏன் வந்தது? கருணாநிதி, குடும்பத்தை கவனிக்க வேண்டிய காலத்தில், கட்சியை கவனித்தார். கட்சியை கவனிக்க வேண்டிய காலத்தில், குடும்பத்தை கவனிக்கிறார்.

இ-மெயில்:hindunatarajan@hotmail.com

- ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X