பாட்னா : வரும் லோக்சபா தேர்தலில், காங்., பா.ஜ.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை அமைப்பதற்கான முயற்சி, மேற்கொள்ளப் பட்டுள்ளது. தேவகவுடா, முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார், மம்தா ஆகியோர், இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக, காங்., பா.ஜ., அல்லாத கட்சிகளின் தலைவர்கள், வரும், 5ம் தேதி டில்லியில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளே, பிரதானமாக செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போதும், காங்., பா.ஜ., கூட்டணியில் இடம் பெற விரும்பாத கட்சிகள், மூன்றாவது அணியை அமைப்பது வழக்கமாக இருந்தது. இதில், இடதுசாரி கட்சிகள், முக்கிய பங்கு வகிக்கும். இந்த தேர்தலில், மூன்றாவது அணி தொடர்பாக, எந்த பேச்சும் எழவில்லை.
இந்நிலையில், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான, நிதிஷ் குமார், மூன்றாவது அணி அமைக்கப் போவதாக, முதல் முறையாக, வாய் திறந்துள்ளார்.இந்த தேர்தலில், காங்., கூட்டணியில் இடம் பெறுவதற்காக, நிதிஷ் குமார், காய் நகர்த்தி வந்தார். காங்கிரசும், இதற்கு சாதகமாகவே பதில் அளித்து வந்தது. திடீரென, பீகாரில், தங்கள் அரசியல் எதிரியான, லாலுவுடன், காங்கிரஸ் கைகோர்த்தது, நிதிஷ் குமாருக்கு, கோபத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், அவர் இறங்கியுள்ளார்.
செய்தியாளர்களிடம், நேற்று அவர் கூறியதாவது:காங்., பா.ஜ., ஆகிய கட்சிகள் இடம் பெறாத, புதிய கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக, ஒருமித்த கருத்துக்களை உடைய, அரசியல் கட்சிகளின் தலைவர்களை திரட்டி, பேச்சு நடத்தவுள்ளோம். வரும், 5ம் தேதி, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பங்கேற்கவுள்ளனர். இதில், கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த விஷயங்கள், இறுதி செய்யப்படும். இதற்கான முயற்சிகளை, இடதுசாரி கட்சிகள் துவக்கியுள்ளன. இந்த முயற்சிக்கு, ஐக்கிய ஜனதா தளம், முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
உ.பி., மாநிலத்தில், ஆளும் கட்சியாக உள்ள, சமாஜ்வாதி கட்சியின் தலைவரான, முலாயம் சிங் யாதவும், இதே கருத்தை, எதிரொலித்துள்ளார்.
உ.பி.,யில் நடந்த சைக்கிள் யாத்திரையை துவக்கி வைத்த அவர், கட்சி நிர்வாகிகளிடையே, நேற்று பேசியதாவது: உ.பி., மாநிலத்தில், வெற்றிக் கொடி நாட்டி விட்டோம். இனி, டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தான், எங்கள் இலக்கு. மத்தியில், அடுத்த ஆட்சி அமைவதில், சமாஜ்வாதி கட்சி, முக்கிய பங்கு வகிக்கும். இது தொடர்பாக, முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கூறினார்.
இதற்கிடையே, மூன்றாவது அணியை உருவாக்குவதில், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான, தேவ கவுடாவும் களத்தில் இறங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கு முன், காங்., பா.ஜ., தலைமயிலான, கூட்டணிகளுக்கு மாற்றாக, புதிய அணியை உருவாக்குவோம். அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும். இந்த கூட்டணியில், எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பதை, இப்போது கூற முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.
மூன்றாவது அணி அமைப்பதற்கு சாதகமாக, திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி, ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில், அவர் பேசுகையில்,'பா.ஜ.,வுக்கு, காங்., மாற்று அல்ல; அதுபோல், காங்கிரசுக்கு, பா.ஜ., மாற்று அல்ல. திரிணமுல் காங்., மட்டுமே, தேசிய கட்சிகளுக்கு மாற்று. பிரதமராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. ஆனால், மத்தியில், அடுத்து அமையவுள்ள ஆட்சியில், எங்கள் பங்கு முக்கியமானதாக இருக்கும்' என்றார்.
அரசியல் கட்சி தலைவர்களிடம் ஏற்பட்டுள்ள, இந்த திடீர் மாற்றம் குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: மூன்றாவது அணி தொடர்பாக, வரும், 5ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதி, பிஜு ஜனதா தளம் ஆகிய
கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதில், மம்தாவையும் பங்கேற்க வைக்க, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இடதுசாரி கட்சி தலைவர்கள், இதில் பங்கேற்றால், மம்தா, இந்த கூட்டத்தை புறக்கணிப்பார். இந்த விவகாரத்தில் மட்டுமே, இழுபறிநிலவுகிறது. மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், கட்டாயம், இதில் பங்கேற்பர். காங்., பா.ஜ.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை, மீண்டும் தூசு தட்ட நினைக்கும், அரசியல் கட்சி தலைவர்களின் ஆசை பலிக்குமா என்பது, 5ம் தேதி தெரிந்து விடும்.இவ்வாறு, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரகாஷ் கராத் கூறுவதென்ன?மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் கூறியதாவது: மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக, எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதே நேரத்தில், தேர்தலுக்கு பின், எப்படி செயல்படுவது என்பது குறித்து, காங்., பா.ஜ., கட்சிகள் அல்லாத மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தி, ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிப்போம். வரும், 5ம் தேதி, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், அ.தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி, மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில், பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். பார்லிமென்ட்டின் கடைசி கூட்டத் தொடர்பான, பொதுவான பிரச்னைகள் குறித்து, இதில் விவாதிக்கப்படும். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.