'பா.ஜ.,வுடன், கூட்டணி தொடர்பான, பூர்வாங்க பேச்சுவார்த்தை துவங்கும் முன், தைலாபுரம் தோட்டத்தில், அக்கட்சி தலைவர்களை சந்திக்க, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
'திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும், இனி கூட்டணி இல்லை' என, கடந்த ஒன்றரை ஆண்டு களாக, பா.ம.க., கூறி வந்தது. பல்வேறு ஜாதி கட்சிகள், சங்கங்களை இணைத்து உருவாக்கிய, சமுதாய பேரியக்கம் மூலம், லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக கூறிய, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், தன் கட்சி சார்பில், 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார்.ஆனால், சமுதாய பேரியக்கம், கதைக்கு ஆகாது என்ற கருத்து, பா.ம.க.,வில் வலுப்பெற்றது. கட்சி யினரை தக்கவைக்க வேண்டும் என்றால், பலமான கூட்டணியில் இடம்பெற வேண்டும் என, கட்சியின் இளைஞர் அணி தலைவர், அன்புமணி கருதினார்.
அதிரடியாக:
இதையடுத்து, 'சமுதாய பேரியக்கம் தேர்தலில் போட்டியிடாது' என, ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். அதேநேரத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, அக்கட்சியின் மேலிடப் பார்வையாளர் முரளீதர் ராவை, சென்னையில் அன்புமணியை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தினார்.அப்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்கு, ராமதாஸ் சம்மதம் கிடைத்துஉள்ளதை அடுத்து, அக்கட்சியின் சார்பில் விரைவில் பா.ஜ.,வுடன் பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி பங்கீடு:
ஆனால், அதற்கு முன், தமிழக பா.ஜ., தலைவர்களை, விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள, தன் வீட்டில்சந்தித்து பேச, ராமதாஸ் விரும்புகிறார்.தற்போது, மாவட்ட பா.ம.க., மகளிர் மாநாடுகளில், ராமதாஸ் பங்கேற்று வருகிறார். இதற்காக தர்மபுரி, சேலம் மாவட்டங்களில், அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தை முடித்ததும், மூன்று நாட்களில், அவர் தைலாபுரம் செல்லவுள்ளார். அப்போது, பா.ஜ., தலைவர்களை, அவர் சந்தித்து பேச ரகசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.தொகுதி பங்கீடு தொடர்பான விஷயங்கள், தேர்தல் செலவு, அன்புமணிக்கு ராஜ்யசபா, 'சீட்' ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, அப்போது விரிவாக ஆலோசிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி இறுதியாகும் பட்சத்தில், பா.ஜ., தலைவர்களுக்கு ராமதாஸ் சார்பில் விருந்து வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
- நமது சிறப்பு நிருபர் - -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE