கடந்த நான்கரை ஆண்டுகளாக, மத்திய காங்கிரஸ் அரசில், கப்பல் துறை அமைச்சராக இருந்து வரும், ஜி.கே.வாசனின், ராஜ்யசபா எம்.பி., பதவி, ஏப்ரல், 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாக முயற்சித்தார். ஆனால், தமிழக காங்கிரசில், போதுமான எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததால், பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இருந்தும், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட, கட்சி மேலிடம் அவருக்கு ஆதரவு அளிக்காததால், அவருடைய முயற்சி எடுபடவில்லை. வாசனின் முயற்சிக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவை, அவருக்கு கட்சியில் செல்வாக்கு குறைந்து விட்டதாக, ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனால், வாசன் ஆதரவாளர்களோ, இந்தக் கருத்தை கடுமையாக மறுக்கின்றனர். இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள், இருவரின் டிஷ்யூம்:
ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறும் அளவுக்கு ஆதரவு இருந்தால், தகுதியானவரை வேட்பாளராக நிறுத்தி, கட்சித் தலைமை வெற்றிபெறச் செய்திருக்கும். தே.மு.தி.க.,வோ, பா.ம.க.,வோ, வாசனை ஆதரிப்பதாக எந்த உறுதியையும், காங்கிரஸ் தலைமைக்கு அளிக்கவில்லை. அப்படியிருக்கையில், காங்கிரஸ் எப்படி வேட்பாளரை அறிவிக்க முடியும். வாசனை வேட்பாளராக அறிவிக்க, காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் தடையாக இருந்து விட்டனர் என, மூத்த தலைவரான வாசனோ, அவரைச் சார்ந்தவர்களோ தெரிவித்தால், அது நியாயமல்ல. எந்த ஆதரவும் இன்றி, களத்தில் இறங்கி அசிங்கப்படும் நிலைக்கு, நாட்டின் மிகப் பழமையான காங்கிரஸ் கட்சியை உள்ளாக்க வேண்டுமா என்பதை உணர வேண்டும். கடந்த முறை, தமிழகத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், போதிய ஆதரவின்றி, தே.மு.தி.க., வேட்பாளரை நிறுத்தி தோற்றதை, யாரும் மறந்திருக்க முடியாது. அதுபோன்ற தோல்வியை, காங்கிரஸ் கட்சி சந்திக்க வேண்டும் என, விரும்புகிறார்களா. போதிய எம்.எல்.ஏ.,க்கள் ஆதர வின்றி, தே.மு.தி.க., ராஜ்யசபா தேர்தல் களத்தில் குதித்தது, அக்கட்சியின் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தியது என, அப்போதே விமர்சிக்கப்பட்டது. 127 ஆண்டு பழமையான காங்கிரஸ், முதிர்ச்சியற்ற செயலை செய்ய என்றும் தயாராக இல்லை. இந்த எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல், தே.மு.தி.க., - பா.ம.க., ஆதரவை வாசன் திரட்டியிருந்ததாகவும், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், தமிழகம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் நடந்து கொண்டனர் என, தகவல்களை வெளியிடுவது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது, தேவையற்ற விவகாரங்களைத் தான் கட்சிக்குள் உண்டாக்கும். நம்மை நாமே பலவீனப்படுத்திக் கொள்ளவே, இதுபோன்ற செயல்கள் உதவும்.
மயூரா ஜெயக்குமார், தமிழக இளைஞர் காங்., முன்னாள் தலைவர்
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட, வாசன் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. 10 எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைத்தால் தான், வேட்பு மனுவையே ஏற்றுக் கொள்வர். காங்கிரசில், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட, வாசன் எப்படி முயற்சி மேற்கொள்வார். 'வாசனை ஏன், தி.மு.க., ஆதரிக்க வில்லை; கடந்த முறை, கனிமொழியை, காங்கிரஸ் ஆதரித்ததே' என, சிலர் கேட்கின்றனர். காங்கிரஸ் கூட்டணி யில், தி.மு.க., ஒன்பது ஆண்டுகள் இருந்தது. ராஜ்யசபா தேர்த லில், அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற, காங்கிரசின் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு தான் காரணம். கனிமொழியை ஆதரித்தது மூலம், காங்கிரசும், அதன் தலைவர் சோனியாவும், பெருந்தன்மையை வெளிப்படுத்தி உள்ளனர். வாசனை எம்.பி.,யாக்கக் கூடாது என, காங்கிரசில் உள்ள கோஷ்டி தலைவர்கள் செயல்பட்டனர் என்று கூறுவதையும், ஏற்க முடியாது. ராஜ்யசபா தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்ற எண்ணமே, வாசனுக்கு இல்லாதபோது, கோஷ்டி தலைவர்கள், அவர் போட்டியிடுவதைத் தடுத்துவிட்டனர் என, கூறுவதே அடிப்படை இல்லாதது. வாசனைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தொண்டர்களின் நலனுக்காக பாடுபடுபவர். அரசியலில் முன்னிலை பெற வேண்டும். அதன்மூலம், பதவிகளைப் பெற வேண்டும் என, அவர் எண்ணியதில்லை. அதற்காக, பிற தலைவர்களையோ, கட்சிகளையோ அணுகியதும் இல்லை. யூகத்தின் அடிப்படையில், ஆதாரம் இல்லாமல், வாசன் குறித்து சில தகவல்களை வெளியிட்டனர். இப்போது, அந்த செய்தியை காரணம் காட்டி, காங்கிரசில் வாசனின் செல்வாக்கு குறைந்து வருகிறது; அவர் வலுவிழக்கிறார் என, கூறுகின்றனர். தமிழக காங்கிரசில் யார் பலமுடன் இருக்கின்றனர் என்பது, கட்சித் தொண்டர்களுக்குத் தெரியும்.
யுவராஜா, தமிழக இளைஞர் காங்., முன்னாள் தலைவர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE