விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியின், ஊழல் எதிர்ப்பு மாநாடு, உளுந்தூர்பேட்டை அருகே இன்று நடக்கிறது. இந்த மாநாட்டிற்கான, ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில், தொண்டர்கள் நிர்வாகிகளிடம், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கருத்து கேட்கும் விஜயகாந்த், உடனே முடிவை அறிவிப்பாரா அல்லது ஓரிரு நாட்கள் கழித்து அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
எதிர்பார்ப்பு:
லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க.,வும், -பா.ஜ.,வும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், எந்த கட்சியுடன், தே.மு.தி.க., கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. அதனால், கூட்டணி தொடர்பாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்க, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, எறஞ்சியில், இன்று, தே.மு.தி.க., மாநாடு நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள, 150 ஏக்கர் இடத்தில், மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு, 19 நாள் இழுபறிக்குப் பின், 24 நிபந்தனைகளுடன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மாநாட்டில், மற்ற கட்சியினரால், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிறப்பு பூஜை:
மாநாட்டை ஒட்டி, விஜயகாந்தின் விருகம்பாக்கம் வீட்டில், இன்று அதிகாலை, சிறப்பு பூஜை நடக்கிறது. இதையடுத்து, பூசணிக்காய் உடைத்த பின், விஜயகாந்தின் பிரசார வாகனம், விழுப்புரம் மாநாட்டிற்கு புறப்பட உள்ளது. மாநாட்டில், விஜயகாந்தும், அவரின் மனைவி, பிரேமலதாவும் சிறப்புரையாற்றுகின்றனர். அது முடிந்ததும், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், கருத்துக்கள் கேட்கப்படும். மாநாடு முடிந்ததும், இன்றிரவே, சென்னை திரும்ப விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ற வகையில், இரவு, 9:30 மணிக்குள், மாநாட்டை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, தே.மு.தி.க., நிர்வாகி கூறினார்.
50 லட்சம் தொண்டர்கள்?
'ஊழல் எதிர்ப்பு மாநாடு என்றதும், அந்த பெயரை எதிர்த்து நெருக்கடிகளை கொடுக்கின்றனர்' என, தே.மு.தி.க., மாநில பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலர் எம்.எல்.ஏ., வெங்கடேசன் கூறினர். ஊழல் எதிர்ப்பு மாநாடு என்றதும் பல கெடுபிடிகளை தருகின்றனர். பாதுகாப்பு அனைத்தையும் நாங்களே பார்த்து கொள்ள வேண்டும் என்கின்றனர். அப்படியானால் நாங்கள் ஏன் அனுமதி கேட்க வேண்டும். எத்தனை வழக்குகளை போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம்.
மாநாடு பணிகளை, நேற்று பார்வையிட்ட பின், அவர்கள் அளித்த பேட்டி: மாநாட்டிற்கு, 25 முதல், 50 லட்சம் தொண்டர்கள் வருவர் என, எதிர்பார்க்கிறோம். தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, டில்லி, கேரளா, கர்நாடகா, அந்தமானில் இருந்தும் தொண்டர்கள் வருவர். மாநாட்டிற்கு பல்வேறு வகைகளில் ஆளுங்கட்சியினரும், போலீசாரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். சட்டப்படி நடப்போம். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றிகரமான மாநாடாக நடத்திக் காட்டுவோம். இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நுழைவு வாயில் பெயர்கள் மாற்றம்:
தே.மு.தி.க., மாநாட்டு திடலின் முகப்பில், மாலை, 3:00 மணிக்கு, கட்சி கொடியை எதிர்க்கட்சித் தலைவர், விஜயகாந்த் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, மேடை நிகழ்ச்சிகளை பிரேமலதா விஜயகாந்த் துவக்கி வைக்கிறார். முன்னதாக, மாவட்ட செயலர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., வரவேற்கிறார். மாநாட்டு திடல்களில் உள்ள நுழைவு வாயில்களுக்கு, ஆண்டாள் அழகர், ராமுவசந்தன், ராஜா தேசிங்கு, சங்க கால புலவர் கபிலர், பரிந்தல் இளங்கோவன் ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. ஆனால், நேற்று மாலை, விஜயகாந்த் உத்தரவிட்டதை அடுத்து, அவை, பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கேப்டன் என, பெயர் மாற்றப்பட்டன.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE