விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, எறஞ்சியில். இன்று நடக்கவுள்ள, தே.மு.தி.க., ஊழல் எதிர்ப்பு மாநாட்டில், நடிகர் விஜய் பங்கேற்பார் என்ற தகவல் கசிந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில், பரபரப்பு உருவாகியுள்ளது.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, நடிகர் விஜய் தலைமையிலான மக்கள் இயக்கம், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்தது. மேலும், விஜயின் தந்தை, இயக்குனர் சந்திரசேகரும், விஜய் ரசிகர் மன்றத்தினரும், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அப்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற, தே.மு.தி.க.,விற்கு, 49 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விஜயின் மக்கள் இயக்கம், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தராமல் இருந்திருந்தால், தே.மு.தி.க.,விற்கு கூடுதல் தொகுதிகள் கிடைத்திருக்கும் என, அப்போது கூறப்பட்டது. அதனால், விஜய் மற்றும் சந்திரசேகர் மீது, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அதிருப்தி அடைந்தார்.
கொடியை இறக்கும்படி:
மேலும், விஜயகாந்தின் பிரசாரத்தின் போது, விஜயின் மக்கள் இயக்க கொடியை, ரசிகர்கள் கையில் வைத்து ஆட்டினர். இதைபார்த்ததும், கோபம் அடைந்த விஜயகாந்த், கொடியை இறக்கும்படி ஆவேசமாக கூறினார். இப்படி தேர்தலின் போது, இருதரப்பும் எலியும், பூனையுமாக மாறினாலும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதும், அவரது வீட்டிற்கு, விஜய் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., கழற்றிவிடப்பட்ட பின், அரசுக்கு எதிராக, விஜயகாந்த் பேசியதால், அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ஆளும்கட்சி மூலம், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக நீடிக்க, இயக்குனர் சந்திரசேகர் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சங்கத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், களமிறங்கிய சந்திரசேகருக்கு, விஜயகாந்திடம் ஆதரவு கேட்கப்பட்டது. இருந்தும், இந்தத் தேர்தலில், சந்திரசேகரால் வெற்றி பெற முடியவில்லை. இதன்பின், விஜய் நடித்து வெளியான, 'தலைவா' படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டது. சமீபத்தில் வெளியான, 'ஜில்லா' படத்திற்கும் வரிவிலக்கு கிடைக்கவில்லை.
ஆஹா... ஓகோ... :
இதற்கிடையே, விஜயகாந்த் மகன், சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும், 'சகாப்தம்' படத்திற்கான பூஜை, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற போது, அதில், பங்கேற்ற, சந்திரசேகர், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தை, ஆஹா... ஓகோ... என, புகழ்ந்து விட்டுச் சென்றார். சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்ததற்கு, 'நல்ல பலன்' கிடைத்து விட்டதால், விஜய் குடும்பத்தினர், கடும் அதிருப்தியில் உள்ளனர். அதேநேரத்தில், தே.மு.தி.க., - அ.தி.மு.க., இடையேயான மோதலாலும், விஜயகாந்த் மற்றும் விஜய் தரப்பினர் மத்தியில், மீண்டும் நட்பு மலர்ந்துள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே, எறஞ்சியில், தே.மு.தி.க., சார்பில், ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று நடக்கிறது. இதற்கு வரும்படி, தி.மு.க., - -பா.ஜ., - -காங்., கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தனக்கு நெருக்கமான திரையுலக நண்பர்களுக்கும், விஜயகாந்த் அழைப்பு அனுப்பியுள்ளார். அந்த அடிப்படையில், சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜய்க்கும் அழைப்பிதழ் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், நடிகர் விஜயும், இயக்குனர் சந்திரசேகரும், இன்றைய மாநாட்டில் பங்கேற்கலாம் என்ற தகவல்கள் கசிந்துள்ளன. இது, தே.மு.தி.க., வட்டாரத்தில் மட்டுமின்றி, விஜய் ரசிகர்கள் மத்தியிலும், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE