லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரை தேர்வு செய்வதற்கான, நேர்காணல் நேற்று துவங்கியது. முதல் நாளில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிட, 'சீட்' கேட்டு விண்ணப்பித்த ஏழு பேரிடம், முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.
லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எப்போது, வேண்டு மானாலும், தேர்தல் தேதி, அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனால், தேர்தலுக்கான கூட்டணி முயற்சிகளில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க.,வை பொறுத்த வரை, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன், 40 தொகுதி களிலும், வேட்பாளர்களை களமிறக்க, முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டி யிட விரும்புவோரிடம், கடந்த டிசம்பரில், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு, கட்டணமாக, 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. மொத்தம், 4,537 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில்,முதல்வர் ஜெயலலிதா, போட்டியிட வலியுறுத்தி மட்டும், 1,000க்கும் மேற்பட்ட மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. விருப்ப மனுக்கள் மூலம், கட்சி தலைமைக்கு, 11.34 கோடி ரூபாய் வசூலானது.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், மூன்று வேட்பாளர்களை பரிந்துரைக்க, மாவட்ட செயலர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டார். அதன்படி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் அடங்கிய நால்வர் குழுவிடம், வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியல்களை மாவட்ட செயலர்கள்வழங்கினர். இப்பட்டியல்களில் உள்ளவர்கள் விவரங்கள், நால்வர் குழுவால் மீண்டும் சேகரிக்கப்பட்டன. உளவுத்துறை மூலமும், பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. முதல்வர், கோடநாட்டில் இருந்தபோதே, வேட்பாளர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டது. இதற்கிடையே, ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, மாற்றப்பட்டது. வேட்பாளர் சின்ன துரை மீதான புகார் காரணமாக, அவர் வேட்பாளர்பட்டியலில் மட்டுமின்றி, கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்த சர்ச்சை காரணமாக, லோக்சபா தேர்தல் வேட்பாளர் தேர்வில், முதல்வர் ஜெயலலிதா, தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரது உத்தரவின் பேரில், லோக்சபா வேட்பாளர் தேர்வு பட்டியலில், இடம் பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் மீண்டும் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து, அ.தி.மு.க., வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் இருந்து, உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர், கமலகண்ணன், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர், மரகதம் குமர வேல், மாமல்லபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர், எஸ்வந்த் ராவ், ஆகியோர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருந்து, கே.என்.ராமச்சந்திரன் உட்பட நால்வர் அழைக்கப்பட்டனர். இவர்கள், காலை, 10:30 மணிக்கு, போயஸ் கார்டனில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம், சுயவிவரம், குடும்ப விவரங்கள், கட்சி பதவி, தொழில் உள்ளிட்டவை குறித்து, முதல்வர் ஜெயலலிதா கேட்டறிந்துள்ளார்.காஞ்சிபுரம் தொகுதிக்கு, முட்டுக்காடு ஊராட்சி தலைவர் முனுசாமியையும் நேர்காணலுக்கு அழைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அவரை, நால்வர் குழுவினர் தொடர்பு கொண்டபோது, மொபைல்போன் அழைப்பை தாமதமாக கவனித்து உள்ளார். எனினும், அவர் நேர்காணலுக்கு வந்துள்ளார்.ஆனால், முதல்வரின் ராசி எண் ஏழு என்பதால், சென்டிமென்டாக நேற்று ஏழு பேரை மட்டுமே, அவர் சந்தித்துள்ளார். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும், நால்வரை நேர்காணலுக்கு அழைக்க முடிவு செய்து உள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE