மாதவரம்: போதை வெறியில், தன்னை கற்பழிக்க முயன்ற, அக்கா கணவரை கழுத்து அறுத்து கொன்ற கல்லூரி மாணவி சட்ட பரிசீலனையின்படி கைதாகவில்லை. சென்னை மாதவரம் பால்பண்ணை, டெலிபோன் காலனி, 1வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் மேத்யூ பினுராஜ், 32. சென்னை அண்ணாநகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். அவரது மனைவி ஹேமா, 26. ஒரு மகன் இருக்கிறார்.
என்ன நடந்தது? : ஹேமாவின் தங்கை சுபா, 23. (பெயர் மாற்றப்பட்டது). அக்கா வீட்டில் தங்கி, பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., இறுதியாண்டு படித்து வருகிறார். சுபாவை தன் ஆசை வலையில் வீழ்த்த, பினுராஜ் பலமுறை முயன்றார். இந்த நிலையில், கடந்த, ஜன., 31ம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு, போதையில் வீட்டிற்கு வந்த பினுராஜ், சுபாவை அடையும் முயற்சியில் வெறித்தனமாக ஈடுபட்டார்.
அப்போது சுபா தன்னை காப்பாற்றிக் கொள்ள, வேறு வழியில்லாத நிலையில், அக்கா கணவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றார். இதுகுறித்து மாதவரம் போலீசார், கொலை வழக்கு (302) பதிவு செய்து, மாணவி சுபாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.
இன்று ஆஜர் : இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மாணவி சுபாவை கைது செய்யவில்லை. ஏனெனில், குறைந்தபட்ச உதவி ஏதும் கிடைக்காத நெருக்கடி நிலையில் சிக்கி தன்மானம் மற்றும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய சுபாவின் செயல் குறித்து, 41ஏ விதிப்படி, திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த சூழல் குறித்து விவரம் அறிந்த நிலையில், மாணவி சுபாவை, இன்று (3ம் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை அறிக்கை பெறவும், மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதனால் தேவைப்படும் போது, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் நிபந்தனையுடன் சுபா கைது செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கல்வியில் ஆர்வம் சந்தர்ப்பவசத்தால் கொலை வழக்கில் சிக்கிய சுபா, கல்வியில் ஆர்வமுள்ள மாணவி. தேர்வுகளில், அவர் 88 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார். தன் அக்கா கணவரின் தொல்லை குறித்து, தனது கல்லூரி தோழிகளிடம் கூறி, பலமுறை அழுதிருக்கிறார். அப்போது அவர்கள், படிப்பை முடித்து, நல்ல வேலையில் சேர்ந்து விட்டால், சுயமாக வாழலாம் என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அதே போன்று மாணவி சுபாவிற்கு ஆதரவாக, மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதி அனைத்திந்திய மாதர் சங்கத்தினரும் குரல் கொடுத்துள்ளனர்.