"அரசியல் என்பதே, வேறு வேலை தெரியாதவர்களின் புகலிடம்' என, ஒருபுறம் கூறப்பட்டாலும், இன்னொரு புறம், அரசியலை ஜாக்கிரதையாக கையாள வேண்டிய அவசியமும் உள்ளது. தவறு லாக காய் நகர்த்தினால், அரசியலில் தோல்வி தான் மிஞ்சும். ராகுலும், அந்த நிலைமையில் இருப்பதாக தான், அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மறைமுகமாக ராகுலுக்கு பரம்பரை தான் பலமே. அப்பா, பாட்டி, கொள்ளு தாத்தா என, அனைவரும் பிரதமராகவும், காங்., தலைவராக வும் இருந்தவர்கள். அரசியலில் ஆர்வமில்லாமலிருந்த ராஜிவ், தாயார் இந்திரா படுகொலை காரணமாக, கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டி இருந்தது. அவரது படுகொலைக்குப் பின், கட்சிப் பொறுப்பை சோனியா ஏற்றார். சில மாதங்களுக்கு முன், சிகிச்சைக்காக அவர் வெளிநாட்டில், சிலகாலம் தங்க வேண்டியிருந்ததால், கட்சி பொறுப்பு மறை முகமாக ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டது. மூத்த காங்., தலைவர்களும், ராகுலுக்கு ஆதரவாக இருந்தனர். நேரு குடும்பத்திலிருந்து, ஐந்தாவது தலைமுறையாக ராகுல் அரசியலுக்குள் நுழைந்தார். வந்த புதிதில், ராகுல் மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. காங்., கட்சியின், அசல் நட்சத்திரமாக வலம் வந்தார்.
இருப்பினும் காங்கிரசின், 10 ஆண்டு கால ஆட்சியில், அதிருப்தியே மிஞ்சுகிறது. முக்கிய பொறுப்பிலிருந்த ராகுல், கட்சியின் பெயரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்.,கின் அடுத்த தலைவர் என்ற நிலையிலிருக்கும் ராகுலுக்கு, நாடு குறித்து தெளிவான பார்வை இல்லை என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் மற்றும் காங்., தலைவர் எனும் இரட்டை அதிகார முறை, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சியின் பழைய கட்டமைப்பை, தற்போதைய நடைமுறைக்கு ஏற்றபடி மாற்றாததும், பின்னடைவை ஏற்படுத்தியது.
மண்ணை கவ்வியது : அரையிறுதி போட்டி என, கருதப்பட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ராகுல் முன்னிலை படுத்தப்பட்டார். இத்தேர்தலில், காங்., கட்சி மண்ணைக் கவ்வியது, ராகுல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே, இது காட்டியது. சோனியா, கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பின், தன் தலைமையில் ஒரு அதிகார வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார். இந்திரா, ராஜிவ் ஆகியோரும், இதுபோன்ற கட்டமைப்பை வைத்திருந்தனர். சோனியாவின் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள், ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இருப்பினும், ராகுல் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இதுவும், அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஐ.மு., கூட்டணி, 2009ல், இரண்டாவது முறையாக வென்று ஆட்சி அமைக்கும் போது, காங்.,சிடம் ஒருவித அசட்டை உண்டானது. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என, நினைத்துக் கொண்டனர். இதனால், எந்த செயலையும் முனைப்போடு செய்யவில்லை.
சோனியா, ராகுலின் தொகுதி இருக்கும், உ.பி.,யில், 1984க்கு பின் காங்., ஆட்சி அமையவில்லை. இது, சோனியா, ராகுல் ஆகியோர் கட்சி முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளவில்லை என்பதை காட்டியது. இதனால், 2012 உ.பி., சட்டசபை தேர்தலில் காங்., தோல்வி அடைந்தது.
நேரடி போட்டி ராகுலின் தற்போதைய பேச்சுகள், தலைமை பதவிக்கு இன்னும் தயாராகவில்லை என்ற
தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சோனியா, ராகுல் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற என்ன
நடவடிக்கை எடுப்பார்கள் என, தெரியவில்லை. நடப்பு, 2014ம் ஆண்டு துவக்கம், காங்., கட்சிக்கும், ராகுலுக்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கும், ராகுலுக்கும் இடையேயான நேரடி போட்டி எனும் எதிர்பார்ப்பு தான் அது. கடந்த, 2009ம் ஆண்டு ஆட்சியிலிருந்து, காங்., தேய்ந்து வந்துள்ளது. 2014ல், முழுவதுமாக தேய்ந்து விட்டதாக, ஒரு தோற்றம் இருக்கிறது. தன் மீதுள்ள அனைத்து சவால்களையும் காங்., கட்சியும், ராகுலும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என, தெரியவில்லை.
அரசியல் நோக்கர்கள் கூறுகையில், "ராகுலுக்கு தற்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தலைமை பொறுப்பை ஏற்று, தேர்தலில் என்ன முடிவு வந்தாலும் ஏற்றுக் கொள்வது; இரண்டாவது, சோனியா தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு, இன்னும் வயது இருப்பதால் அடுத்த வாய்ப்புக்காக காத்திருப்பது; மூன்றாவது, அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டு, தன் குடும்ப நபர்கள் அல்லது கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பது. இந்த மூன்று முடிவுகளில் ஒன்றை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் ராகுல் இருக்கிறார்' என்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE