விரைவில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதால், கூட்டணி அமைக்கும் முயற்சியில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை, அ.தி.மு.க., - தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்த, ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, இம்முறை, பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இணைய உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், பா.ஜ., கூட்டணியில், விஜயகாந்தின் தே.மு.தி.க., இணைந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும், பா.ம.க., தயாராக உள்ளது. இனியும் தேர்தலில் தோற்றால், கட்சியின் எதிர்காலம் போய் விடும் என்ற எண்ணத்தில், இந்த முடிவை எடுக்க உள்ளது. பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சேர்வதால், அதற்கு லாபமா அல்லது நஷ்டமா என்பது தொடர்பாக, இரு பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:
"கடல் உள்ளவரை, வான் உள்ளவரை, நீர் உள்ளவரை, தேசிய கட்சிகள் உடனோ, திராவிட கட்சிகள் உடனோ, கூட்டணி வைக்க மாட்டேன்; கூட்டணி வைத்து, நான் செய்த தவறுகளுக்காக, மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்ற வார்த்தைகள், கடந்த ஆண்டுகளில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், ராமதாஸ் சொன்னவை. ஆனால் தற்போது, லோக்சபா தேர்தலில், தேசிய மற்றும் திராவிட கட்சி களின் கூட்டணியுடன், பா.ம.க., போட்டியிடப் போகிறது என்ற செய்தி கள் வெளியாகி வருகின்றன. பா.ஜ., தலைவர்களுடன், ராமதாஸ் மகன் அன்புமணி, பேச்சு நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதற்கு முன், சினிமா பார்க்கச் சென்ற இடத்தில், அன்புமணியும், ஸ்டாலினும், கூட்டணி குறித்து பேசினர் என, செய்தி வெளியானது. காங்கிரசின், தேசிய செயலர் ஒருவருடனும், பா.ம.க., தலைவர்கள், கூட்டணி குறித்து பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்திகள் எதையும், ராமதாஸ் மறுக்கவில்லை. எனவே, லோக்சபா தேர்தலில், தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க, அவர்கள் முடிவு செய்துள்ளது உறுதியாகி விட்டது. வன்னிய மக்களை தன்னால் முடிந்த அளவு ஏமாற்ற, ராமதாஸ் தயாராகி விட்டார். அவர்கள், தன்னை கேள்வி கேட்கமாட்டார்கள் என, அவர் நினைக்கிறார். முன்னர், விஜயகாந்தின், புகைப்படமோ, அவரது கட்சி கொடி கம்பமோ, வன்னியர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் இருக்கக் கூடாது என, கூறிய ராமதாஸ், விஜயகாந்தை தனிப்பட்ட முறையிலும் விமர்சித்தார்.
இப்போது, விஜயகா த் இடம்பெறும் கூட்டணி யில், பா.ம.க., இடம்பெறுவது பற்றி கவலையில்லை என, கூறுகிறாராம்.
"அரசியலில் தனிமைப்பட்டு விட்டோம்' என்பதை, ராமதாஸ் உணர்ந்து விட்டார். அதனால், எப்படியாவது, யாருடனாவது, கூட்டணி அமைத்து, மகனை எம்.பி.,யாக்கி, அமைச்சராக்க வேண்டும் என்ற தீராத பேராசையில் உள்ளார். அவரது ஆசை நிராசையாகும்.
வேல்முருகன் , தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி
"தமிழகத்தில், தேசிய கட்சிகளுட னும், திராவிட கட்சிகளுடனும், பா.ம.க., கூட்டணி வைத்துக் கொள்ளாது' என, கட்சியின் நிறுவனர், ராமதாஸ் அறிவித்துள்ளார். அது, முழுக்க முழுக்க, தமிழக சட்டசபை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். சட்டசபை தேர்தலின் போதே தமிழகத்தில், தனித்துப் போட்டியிடுவோம், என, பா.ம.க., கூறி
வருகிறது. அதற்கான பணிகளையும், தொடர்ந்து செய்து வருகிறோம்.
தமிழகத்தில் மட்டும் இருக்கும், பா.ம.க., தேசிய அளவில், தன்
பிரதமர் வேட்பாளரை முன்னிலைப்படுத்த முடியாது. எனவே, அதற்குத் தகுந்தாற்போல் முடிவெடுக்கும்.
பிரதமர் வேட்பாளரை, லோக்சபா தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்பதால், லோக்சபா தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ, கூட்டணி அல்லது பிற கட்சிகளை ஆதரிக்கும் நிலையை எடுக்க வேண்டும்.
லோக்சபா தேர்தலில், பா.ம.க., மட்டும் இந்த முடிவை எடுக்க வில்லை. அனைத்து, தமிழக கட்சிகளும், கூட்டணி என்ற நிலையை எடுக்கின்றன. எனவே, லோக்சபா தேர்தலையொட்டி நிலவும் அரசியல் சூழல்களைப் பொறுத்து, கட்சித் தலைமை, கூட்டணி சேர்வதா, தனித்து நிற்பதா என்ற முடிவை எடுக்கும்.
சமுதாய கூட்டணி சார்பில், ஏற்கனவே, 10 தொகுதிகளில், வேட்பாளர்களை பா.ம.க., அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளில், வேட்பாளர்களை அறிவிக்கும் தயாரிப்புகளில் உள்ளோம். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில், யாரை ஆதரிப்பது என்ற முடிவையும் எடுப்போம்.
கூட்டணி சேர்வதால், பா.ம.க., வலுப்பெறுமா, இல்லை கூட்டணி சேரும் கட்சி கள் வலுப்படுமா என்றால், கூட்டணி என்பது, எல்லா கட்சிகளுக்கும் வலுசேர்க்கும். இதில், பா.ம.க., மட்டும் விதிவிலக்கல்ல. தலைமை முடிவெடுத்து அறிவிக்காத நிலையில், ஒரு கட்சியை குறிப்பிட்டு, அக்கட்சியுடன் கூட்டணி சேர்வது குறித்து, கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்காது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE