லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையுமா, தேர்தலில் போட்டி யிட, "சீட்' ஒதுக்கப்படுமா என, கடந்த சில நாட்களாக, தவமாய் தவமிருந்த, இரு கம்யூனிஸ்ட்களில், இந்திய கம்யூ., தலைவர்கள், நேற்று நிம்மதி அடைந்தனர். முதல்வர் ஜெயலலிதாவை, அவரின் போயஸ் தோட்டம் இல்லத்தில் நேற்று, இந்திய கம்யூ., தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இதன் மூலம், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், கம்யூனிஸ்ட்களுக்கு சீட் ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்த லின் போது, அ.தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில், அ.தி.மு.க., பொதுக் குழுவில் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, "நாளை நமதே; நாற்பதும் நமதே. லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், அ.திமு.க., போட்டியிடும் என, அறிவித்தார்.
இதனால், லோக்சபா தேர்தலுக்கான, அ.தி.மு.க., கூட்டணியில், கம்யூனிஸ்ட்களுக்கு, "சீட்' ஒதுக்கப்படுமா அல்லது இதயத்தில் மட்டுமே இடம் என, ஓரங்கட்டப்படுவரா என்ற நிலை உருவானது. அதற்கேற்ற வகையில், முதல்வரை சந்திக்க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலத் தலைவர்களும், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், போயஸ் தோட்டம் வீட்டிலிருந்து பதில் இல்லை.
அதனால், எப்போது அழைப்பு வருமோ என, கம்யூனிஸ்ட் தலைவர்கள், வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு நேற்று பலன் கிடைத்தது. முதல்வர் ஜெயலலிதாவை, அவரின் போயஸ் தோட்டம் இல்லத்தில், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர், சுதாகர் ரெட்டி, அந்தக் கட்சியின் மூத்த தலைவர், பரதன் மற்றும் மாநிலச் செயலர், தா.பாண்டியன் ஆகியோர், சந்தித்துப் பேசினர்.
சந்திப்பு முடிந்ததும், வெளியே வந்த, ஜெயலலிதா கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி, 40 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். "அமைதி, வளம், முன்னேற்றம்' என்ற மூன்று
கோஷங்களை மையப்படுத்தி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம். மற்ற விஷயங்கள் குறித்து பின் முடிவெடுக்கப்படும். மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலர் பிரகாஷ் கராத், நாளை (இன்று) என்னை சந்திக்கிறார். இவ்வாறு ஜெயலலிதா கூறினார். பரதன் கூறுகையில், ""முதல்வர் ஜெ., கருத்தை, நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் கூட்டணி வெற்றி பெறும். மற்ற விஷயங்கள் குறித்து பின்னர் பேசுவோம். கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமர் பதவி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர், சுதாகர் ரெட்டி கூறுகையில், ""அகில இந்திய அளவில், சிறப்பான கூட்டணி அமைத்து வருகிறோம். காங்கிரஸ் மீது, பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அக்கட்சி தோல்வி அடையும்; எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்,'' என்றார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE