கூட்டணி குறித்து, கருத்து கேட்பதாகக் கூறி, மாநாட்டு மேடையில், 'போட்டு வாங்கிய' விஜயகாந்த், தன் முடிவைத் தெளிவாக அறிவிக்காததால், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அத்துடன், விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க, காவடி தூக்கிய கட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளன. அதே நேரத்தில், 'அரசியல் பேரத்திற்காகவே' விஜயகாந்த் மாநாடு நடத்தியதாக, விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்சி துவக்கியது முதல், 'கடவுளுடனும், மக்களுடனும் மட்டுமே கூட்டணி' எனக் கூறி வந்த, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., உடன், கூட்டணி அமைத்தார். அதற்கு முன், கூட்டணி தொடர்பாக, தொண்டர்களிடம் கருத்து கேட்க, சேலத்தில், மாநாடு ஒன்றை நடத்தினார். அப்போதும், கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல், தொண்டர்களை குழப்பி அனுப்பினார்.பின், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, எதிர்க்கட்சி தலைவரானார். ஆனாலும், கூட்டணியில், நீடிக்க விடாமல், தே.மு.தி.க.,வை, ஜெயலலிதா கழற்றி விட்டதால் அதிருப்தி அடைந்தார். அத்துடன், 'இனி கூட்டணி விஷயத்தில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்ற பாடத்தையும் கற்றுக் கொண்டார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலுக்காக, தே.மு.தி.க.,வை, தி.மு.க., பா.ஜ., உட்பட, சில கட்சிகள் கூட்டணிக்கு அழைத்துள்ள நிலையில், தொண்டர்களிடம் கருத்துக் கேட்பதாகக் கூறி, நேற்று முன்தினம், உளுந்தூர்பேட்டை அருகே, மாநாட்டை நடத்தினார். மாநாட்டில், தொண்டர்களிடம் கருத்து கேட்ட போது, அவர்கள் தனித்துப் போட்டி என, தெரிவித்தனர். ஆனால், 'நான் வேறு முடிவு எடுத்தால், தொண்டர்கள் அதை ஏற்பர்' என, மாநாட்டில் பேசிய விஜயகாந்த் கூறினார்.
இது தொடர்பாக, அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: விஜயகாந்திடம் கூட்டணி அமைக்க, முக்கிய கட்சிகள் பல, தூது மேல் தூது விட்டு வருகின்றன. அந்த தூதுக்கு, ஆரம்பத்திலேயே பணிந்து விட்டால், கூட்டணியில் குறைவான தொகுதிகளே கிடைக்கும் என, விஜயகாந்த் ககணக்கு போட்டார். அதனால், ஊழல் எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில், மாநாட்டை கூட்டி, பெயரளவிற்கு, தொண்டர்களிடம் கருத்துக்களையும் கேட்டுள்ளார். தொண்டர்களிடம் கருத்து கேட்ட பின், அவர்கள் கூறும் முடிவுக்கு மாறாக, வேறு முடிவு எடுத்தால், பின்னாளில், சர்ச்சை வரலாம் என்பதால் தான், 'தே.மு.தி.க., தலைவர் வேறு முடிவு எடுத்தால், அதை தொண்டர்கள் ஏற்பர்' என, சப்பை கட்டு கட்டியுள்ளார்.
மாநாட்டிற்கு, பல ஆயிரம் பேரை வரவழைத்து, அதன் மூலம், தன் பலத்தை காட்டியுள்ளார் விஜயகாந்த். இனி, அவரும், அவரது மனைவி, பிரேமலதாவும், தங்களின் அரசியல் பேரத்தை துவக்கி விடுவர். தே.மு.தி.க.,விற்கு, அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன், 'டீலிங்' முடித்து அறிவிப்பை வெளியிட்டு விடுவர். கட்சித் தொண்டர்களும், இவர் கைகாட்டும் கட்சிகளுக்கு, ஓட்டுகளைப் போட்டு, தங்கள் விசுவாசத்தை காட்டி விடுவர். அதன் மூலம் கிடைக்கும், முழுப் பலனையும் அடையப் போவது, விஜயகாந்த் குடும்பமே.அதே நேரத்தில், மாநாட்டு முடிவில், கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என, எதிர்பார்த்த தொண்டர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். கூட்டணிக்கு காவடி தூக்கிய கட்சிகள், கவலை அடைந்துள்ளன. இவ்வாறு, அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை:
உளுந்தூர்பேட்டை மாநாட்டில், பங்கேற்ற பின், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு சென்னை திரும்பினார் விஜயகாந்த். நேற்று காலை 10:30 மணிக்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ள, கட்சி அலுவலகம் வந்த அவர், கட்சியின் மாநில நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சி மாநாடு குறித்து, தே.மு.தி.க., நிர்வாகிகளும், மற்ற கட்சியினரும் என்ன பேசிக் கொள்கின்றனர்; மாநாட்டிற்கு எவ்வளவு கூட்டம் வந்ததாக, உளவுத்துறை தரப்பில், அரசுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்களை கேட்டார். இதற்கு பதில் சொல்ல முடியாமல், மாநில நிர்வாகிகள் விழித்துள்ளனர். அத்துடன், லோக்சபா தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்டு, எத்தனை பேர், விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்; எப்போது, நேர்காணலை நடத்துவது என்பது குறித்தும் கேட்டறிந்து உள்ளார்.மாநாடு ஏற்பாடு குழுவில், இடம் பெற்றிருந்த நிர்வாகிகளும், கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினரும், நீண்ட நாட்களுக்கு பின், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள், சென்னை திரும்பியதும், மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக, விஜயகாந்த் சார்பில் விருந்து வைக்கப்படும் என, கூறப்படுகிறது.
நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE