தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, வரும், 15, 16ம் தேதிகளில், திருச்சியில் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு வரும்படி, மு.க.அழகிரிக்கு, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் அழைப்பு விடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்மூலம், கட்சியில் நிலவும், சகோதர யுத்தத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்க, கருணாநிதியும், அவரின் குடும்பத்தினரும் தீர்மானித்துள்ளனர்.
தி.மு.க., தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த, அழகிரியின் பிறந்த நாளை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய, சர்ச்சைக்குரிய போஸ்டர் விவகாரத்தினால், அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மன்னன் உட்பட, 11 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மிரட்டல்:
மதுரை மாநகர மாவட்ட, தி.மு.க., கூண்டோடு கலைக்கப்பட்டு, பொறுப்பு குழு அமைக்கப்பட்டு, உட்கட்சி தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அழகிரி, 'உட்கட்சி தேர்தல் முறைகேடு தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவேன்' என, மிரட்டல் விடுத்ததோடு, தன் பிறந்த நாள் விழாவுக்கு, அதிக அளவில், ஆதரவாளர்களை வரவழைத்து, தி.மு.க., மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்தார். அதனால், அழகிரியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கலாம் என, ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட முடிவில், தி.மு.க., தலைமை மாற்றம் செய்துள்ளது. அத்துடன், அழகிரி - ஸ்டாலின் இடையே, பகைமையும், மோதலும் நீடிப்பதை, கருணாநிதியும், அவரின் குடும்பத்தினரும் விரும்பவில்லை. இதனால், கட்சிக்கு பெரிய அளவில் பாதகம் ஏற்படும் என்றே நம்புகின்றனர். அதனால், இருவர் இடையே, சமரசம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில், அழகிரியின் மனைவி காந்தியும், கருணாநிதியின் மகள் செல்வியும் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, இருவரும் பல முறை தொலைபேசியில் பேசியுள்ளனர்.
நேருக்கு நேர்:
அப்போது, 'நமது குடும்பத்தினர், இப்படி சண்டை போட்டுக் கொண்டிருப்பது, மற்றவர்களுக்கு தான், லாபமாக இருக்கும். அதனால், அண்ணன், தம்பிகள் ஒன்றாக இணைந்து, பணியாற்றும்படி செய்ய வேண்டும். யாராவது ஒருவரை விட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்த வேண்டும். மேலும், இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேச, நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால், பிரச்னை சுமுகமாக முடிந்து விடும்' என, ஒருவருக் கொருவர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அழகிரியை பொறுத்தவரையில், அவர் சமாதானத்திற்கு தயாராகவே உள்ளார். தன் சஸ்பெண்டை மட்டுமின்றி, தன் ஆதரவாளர்கள், சஸ்பெண்டையும் ரத்து செய்ய வேண்டும் என்பதிலும், பிடிவாதமாக உள்ளார்.
மேலும், கட்சியில் தனக்கு, தற்போது உள்ளதை விட, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.அவரின் இந்த விருப்பங்களை, செல்வியிடம் பேசிய போது, காந்தி அழகிரி தெரிவித்துள்ளார். அதை அப்பாவிடம் சொல்லி, நிறைவேற்றுவதாகவும், செல்வி உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.அதனால், விரைவில், குறிப்பாக, திருச்சி, தி.மு.க., மாநாட்டிற்கு முன்னதாக, அழகிரிமற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான, சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். அத்துடன், யாரும் எதிர்பாராத வகையில், அண்ணன் அழகிரியை - ஸ்டாலின் சந்தித்து, திருச்சி மாநாட்டு அழைப்பிதழை கொடுத்து, மாநாட்டிற்கு கண்டிப்பாக, ஆதரவாளர்களுடன் வரும்படி கேட்டுக் கொள்ளலாம் என்றும் நம்பப்படுகிறது. கருணாநிதியும் இதையே விரும்புகிறார்.அனேகமாக, இந்தச் சந்திப்பு வரும், 9ம் தேதி நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அன்று, மதுரையில் தி.மு.க., பிரமுகர்கள் இருவரின் இல்ல நிகழ்ச்சிகளில், அழகிரியும், ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளனர். அந்த நேரத்தில், இந்தச் சந்திப்பு நடக்கலாம் என, எதிர்ப்பார்க்கப் படுகிறது. அப்படி ஸ்டாலின் அழைப்பு விடுத்தால், மதுரையில் பிறந்த நாள் விழாவிற்கு, தன் ஆதரவாளர்களை பெருமளவில் வரவழைத்து, கட்சித் தலைமையை அதிர வைத்ததை விடஅதிகமாக, மாநாட்டில், தன் ஆதரவாளர்களுடன் வந்து கலக்கவும், அழகிரி மெகா திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE