Jayalalithaa changes his position over PM candidate | தேர்தலுக்கு முன் பிரதமர் கோஷமில்லை: முடிவை மாற்றினார் ஜெ., - Jayalalitha | Dinamalar

தேர்தலுக்கு முன் பிரதமர் கோஷமில்லை: முடிவை மாற்றினார் ஜெ.,

Updated : பிப் 04, 2014 | Added : பிப் 04, 2014 | கருத்துகள் (104)
தேர்தலுக்கு முன் பிரதமர் கோஷமில்லை: முடிவை மாற்றினார் ஜெ.,

''பிரதமர் யார் என்பதை, லோக்சபா தேர்தலுக்கு முன் விவாதிப்பதில்லை; தேர்தல் முடிந்த பின்னரே, பிரதமர் யார் என்ற கேள்வி எழும்,'' என, முதல்வர் ஜெயலலிதா, நேற்று திடீரென அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன்மூலம், 'அடுத்த பிரதமர் ஜெயலலிதா' என்ற, அ.தி.மு.க.,வினரின் கோஷம், பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல்வர், ஜெ.,யை, நேற்று முன்தினமும், நேற்றும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசிய போது, தமிழகத்தில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதித்துள்ளதோடு, தேசிய அளவில், அமைக்கப்பட உள்ள, மூன்றாவது அணியில், அ.தி.மு.க., இடம் பெற வேண்டும் எனவும், வலியுறுத்தியுள்ளனர்.


நிபந்தனைகள்:


அவர்கள் சொல்லியதை எல்லாம் காதில் வாங்கிய, ஜெயலலிதா, மூன்றாவது அணியில், அ.தி.மு.க., இடம் பெற, பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, கம்யூ., கட்சிகளின் வட்டாரங்கள் கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் வேட்பாளராவதில், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சம்மதமே; அவருக்கு எங்களின் பரிபூரண ஆதரவும் உண்டு.அதேநேரத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, பீகார் முதல்வர், நிதிஷ்குமார், சமாஜ்வாதி தலைவர், முலாயம்சிங் ஆகியோரும், பிரதமர் கனவில் உள்ளனர். அதனால், மூன்றாவது அணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை, முதலிலேயே எழுப்பினால், அணி அமைவதே குழப்பமாகி விடும். எனவே, மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இப்போதைக்கு அறிவிக்கக்கூடாது என, ஜெயலலிதா விரும்புகிறார்.லோக்சபா தேர்தலில் யார், அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ, அந்தக் கட்சியின் தலைவரை, பிரதமராக அறிவிக்க வேண்டும் என, தன்னை சந்தித்த, கம்யூ., தலைவர்களிடம், ஜெ., கூறியுள்ளார்.


சம்மதிக்கவில்லை:


மேலும், டில்லியில், வரும், 5ம் தேதி நடக்கும், மூன்றாவது அணி ஆலோசனை கூட்டத்தில், ஜெயலலிதா பங்கேற்க வேண்டும் என்றும், கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு, அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, வரும், 9 அல்லது 10ம் தேதி, மீண்டும் நடைபெற உள்ள, மூன்றாவது அணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திலாவது, ஜெயலலிதா பங்கேற்க வேண்டும் என, கம்யூனிஸ்ட் தலைவர்கள் கேட்டுள்ளனர்.அதற்கு, வரும், 5ம் தேதி நடைபெறும், மூன்றாவது அணி தலைவர்கள் கூட்டத்தில், என் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், இரண்டாவது கூட்டத்திற்கு, தன் கட்சிப் பிரதிநிதிகளை அனுப்புவது பற்றி பரிசீலிப்பேன் என, தெரிவித்துள்ளார்.முதல்வரின் இந்த நிபந்தனைகளை கேட்ட, கம்யூனிஸ்ட் தலைவர்களும், 'நீங்கள் சொல்வது எல்லாம் சரியே' என, 'ஆமாம்' சாமி போட்டுள்ளனர். இதுதொடர்பாக, மற்ற மூன்றாவது அணி தலைவர்களிடம் பேசிய பின், பதில் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.இவ்வாறு, கம்யூ., கட்சிகளின்
வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்தியில் அமையும், மூன்றாவது அணியில் இடம் பெறும் சில மாநில கட்சிகள், அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குப் பெற்றவை. அவை அதிக இடங்களைப் பிடித்தால், 'பிரதமர் பதவி தனக்கே வேண்டும்' என, கேட்க முடியாமல் போகலாம் என்ற நினைப்பில், ஜெ., தன் முடிவிலிருந்து, பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


மற்றொரு கம்யூ., கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டு:


லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அதனால், அந்தக் கட்சி கூட்டணியில் இடம் பெறுவது உறுதியானது.இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலர், பிரகாஷ் கராத், மாநில செயலர், ராஜ்யசபா எம்.பி., - டி.கே.ரங்கராஜன் ஆகியோர், முதல்வர், ஜெயலலிதாவை, அவரின் போயஸ் தோட்டம் இல்லத்தில், நேற்று பிற்பகல், 2:45 மணி அளவில் சந்தித்து, லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பேசினர்.
பதினைந்து நிமிடங்கள் நீடித்த, பேச்சுக்குப் பின், ஜெயலலிதா கூறுகையில், ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன், லோக்சபா தேர்தல் உடன்பாட்டை எட்டியுள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்ற பின், அடுத்த பிரதமர் யார் என்பதை, முடிவு செய்வோம்,'' என்றார்.
மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் பிரகாஷ் கராத் கூறுகையில், ''தேசிய அளவில், காங்கிரஸ், பா.ஜ., அல்லாத மாற்று அணியை உருவாக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன் இணைந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது என, முதல்வர் ஜெயலலிதாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X