கூட்டணி முடிவாகாதது மற்றும் உளுந்தூர்பேட்டை மாநாட்டை காரணம் காட்டி, விருப்பமனு தாக்கல் செய்யாமல் ஏமாற்றிய, கட்சி நிர்வாகிகளுக்கு கிடுக்கிப்பிடி போட, விருப்பமனு தாக்கல் தேதியை, தே.மு.தி.க., தலைமை நீட்டித்துள்ளது. லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. விருப்ப மனு தாக்கல் செய்வோர், பொது தொகுதிக்கு, 20 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக
நிர்ணயம் செய்யப்பட்டது. முற்றிலும் குறைந்தது மேலும், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும், 10 முதல், 15 பேர் வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மாவட்ட செயலர்களுக்கு, தே.மு.தி.க., தலைமை உத்தரவிட்டது. விருப்ப மனு தாக்கல் மூலம், ஒரு கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜனவரி, 23 துவங்கி, கடந்த, 1ம் தேதி வரை, விருப்ப மனுக்கள் வாங்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டது. முதல் நாளில், 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் போட்டியிடவும், அதிகளவில் விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்பின், விருப்பமனு கொடுப்பது முற்றிலும் குறைந்தது. நாள்தோறும் ஓரிருவர் மட்டுமே, விருப்ப மனு தாக்கல் செய்தனர். விருப்ப மனுக்களை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட, மாநில நிர்வாகிகள், காலை முதல் மாலை வரை காத்திருந்தும் பயனில்லை. கடந்த, 30ம் தேதி அமாவாசை என்பதால், விருப்பமனு தாக்கல் சூடுபிடித்தது. அன்று மட்டும், 150க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அதன்பின், விருப்பமனு தாக்கல், மீண்டும் மந்தம் அடைந்தது. அதனால், நிர்ணயித்த இலக்கான, ஒரு கோடி ரூபாயை வசூலிப்பதில், கட்சித் தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டது.
மாநாட்டு செலவு கூட்டணி பற்றி முடிவு செய்யாததாலும், உளுந்தூர்பேட்டை, தே.மு.தி.க., மாநாட்டு செலவை காரணம் காட்டியும், பலர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்ய, தயக்கம் காட்டியதால், இந்தப் பிரச்னை ஏற்பட்டது. இதையறிந்த, தே.மு.தி.க., தலைமை, தற்போது, நிர்வாகிகளுக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. விருப்ப மனு தாக்கலை, வரும், 9ம்தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, தே.மு.தி.க., மாநாட்டு செலவுகளை ஏற்ற கட்சி நிர்வாகிகள் பலர், விருப்ப மனு தாக்கல் இலக்கை எப்படி பூர்த்தி
செய்வது என, தெரியாமல், கையைப் பிசைந்து வருகின்றனர்.
எங்கே போவது: இதுபற்றி, தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், "கூட்டணி முடிவானால் கூட, கட்சி யில் உள்ள வசதி படைத்தவர்களை நிர்பந்தம் செய்து, விருப்ப மனு தாக்கல் செய்யலாம்; அதுவும் இல்லை. இந்த நிலையில், பணத்திற்கு எங்கோ போவது. தேர்தல் வெற்றிக்கும், ஓட்டுகளைப் பெறவும் இலக்கு நிர்ணயிக்கலாம். விருப்ப மனு தாக்கலுக்கு இலக்கு நிர்ணயிப்பது எப்படி சரியாக இருக்கும். இதை புரிந்து கொள்ளாமல், தலைமை செயல்படுவதை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE