"முதல்வரின் பாதுகாப்புக்காக, ரோட்டில் பல மணி நேரம் நிற்கும், போலீசாரைப் பார்த்து, மனசு கஷ்டப்பட்டிருக்கிறது. ஆனால், போலீசார் விஷயத்தில், இனி கரிசனம் காட்ட மாட்டேன். இனி, நானோ, என் பையனோ போலீசாக நடிக்க மாட்டோம். தே.மு.தி.க., மாநாட்டுக்கு, போலீஸ் எஸ்.பி.,யில் ஆரம்பித்து, டி.ஜி.பி., வரையில், அனுமதி கொடுக்க மறுத்தனர். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படும், போலீஸ் மீது மரியாதை போய்விட்டது' என, உளுந்தூர்பேட்டை, தே.மு.தி.க., மாநாட்டில், போலீசாருக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்தார் விஜயகாந்த். அதே மாதிரியான கருத்தையே, மு.க.ஸ்டாலினும், "பேஸ் புக்' மூலம் பதிவு செய்துள்ளார். அதனால், தமிழக போலீசார், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகின்றனரா என்பது குறித்து, மாறுபட்ட கருத்துக்களுடன், அரசியல் தலைவர்கள் இருவர், வார்த்தைகளில் போட்டுக் கொண்ட டிஷ்யூம்:
உளுந்தூர்பேட்டையில் நடந்த, தே.மு.தி.க., மாநாட்டிற்கு அனுமதி கோரும் கடிதத்தை, மாநாட்டு பொறுப்பாளர் என்ற முறையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம், ஜனவரி, 11ம் தேதி கொடுத்தேன். இதன் மீது, ஜனவரி, 30ம் தேதி வரை, நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக, "மாநாட்டுக்கு கொடி கட்டக் கூடாது, தோரணம் அமைக்கக் கூடாது, பேனர் வைக்கக் கூடாது' என, 2009 மற்றும் 2011ம் ஆண்டு சட்ட விதிகளை குறிப்பிட்டு, எச்சரிக்கை விடுத்தனர்.
உள்ளாட்சி அமைப்புகள், தேசிய நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை ஆகியவற்றிடம், 30 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். அதற்குரிய வாடகையையும் செலுத்த வேண்டும் என, பத்திரிகைகள் வாயிலாக மாவட்ட கலெக்டர் அறிவுறித்தினார். ஆனால், மாநாடு நடத்த அனுமதி கோரிய
எங்களிடம், எந்த தகவலையும் சொல்லவில்லை. இருந்தும், கலெக்டரின் அறிவுறுத்தல்படி, சில இடங்களில் அனுமதி வாங்கியும், பேனர், தோரணங்கள் அமைக்க முடியவில்லை. பேனர், போஸ்டர்கள் வைக்க அமைத்திருந்த, மூங்கில் சாரங்களை போலீசார் உடைத்தெறிந்ததோடு, தொண்டர்களை, பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் அடைத்து விட்டனர். "மாநாட்டுக்கு, வாடகை வேன் மற்றும் கார்களை அளிக்கக் கூடாது; மீறி அளித்தால், வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும், எச்சரித்தனர்.
மாநாடு தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணத்தில், போலீசாரை தன் கைப்பாவையாக, முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தினார். எங்களுக்கு சொல்லும் அரசு விதிகளின்படி தான், முதல்வரை வரவேற்றும், வாழ்த்தியும், அ.தி.மு.க.,வினர் பேனர் வைக்கின்றனரா? இதுகுறித்து, வழக்குத் தொடரவும் முடிவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகள் மீதான, போலீசாரின் கெடுபிடிகள், "மினி எமர்ஜன்சி' போல உள்ளன.
வெங்கடேசன் , விழுப்புரம் மாவட்ட செயலர், தே.மு.தி.க.,
தமிழகத்தில், "மினி எமர்ஜன்சி' உள்ளது என கூறுவதை, ஏற்க முடியாது. எமர்ஜன்சி அமலில் இருந்தால், எந்த பொது நிகழ்ச்சியையும் நடத்த முடியாது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், கூட்டங்களையும், மாநாட்டையும் நடத்த முடியாத நிலையிலா உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள், தொடர்ந்து கூட்டங்களையும், போராட்டங்களை யும் நடத்தியே வருகின்றனர். இவற்றுக்கான அனுமதியை, போலீசார் வழங்கி தான் வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்றால், இதுபோன்ற போராட்டங்களை நடத்தவே முடியாது. ஒரு பொது நிகழ்ச்சியை நடத்த வேண்டுமானால், அப்பகுதியில் உள்ள போலீசாரை அணுக வேண்டும். கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள், சில நிபந்தனைக் கூறி, அனுமதி மறுத்தால் கூட, உயர் அதிகாரிகளிடம் விவரித்து, அனுமதி வாங்கிக் கொள்ளலாம். இது, நடைமுறையில் உள்ள எதார்த்தமே.
பொதுவாக, பொது நிகழ்ச்சிகளை நடத்தும்போது, அங்கு கூடும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது;
உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வாகனங்கள் அதிகம் வரும் போது, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது என, போலீசார் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது அவசியமான ஒன்று. போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கைகளின் போது, மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது. அதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாங்களே எடுத்துள்ளோம் என, நிகழ்ச்சி நடத்துபவர்கள், போலீசாருக்கு தெளிவுபடுத்தும் போது, நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கின்றனர். அனுமதி கொடுப்பதில், போலீசார் தாமதப்படுத்துவது பற்றி, முழுமையாகத் தெரியாமல் கருத்து சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சிகள் செயல்படக் கூடாது என, மாநில அரசு நடவடிக்கை எடுக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோன்ற சம்பவங்கள் இந்த ஆட்சியில், நடந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை.
மகேந்திரன், துணை செயலர், இந்திய கம்யூனிஸ்ட்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE