பண்ணைக்குட்டை அமைக்க அழைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணைக்குட்டை அமைக்க அழைப்பு

Added : செப் 23, 2010
Share
நாமக்கல் : "பண்ணைக்குட்டை அமைத்து மழைநீரை தேக்கி சுழற்சி செய்தால், மானாவாரி நிலத்திலும் பசுமைப்போர்வை உருவாக்கலாம்' என, உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : விளை நிலங்களிலும் மற்றும் தரிசு நிலங்களிலும் பண்ணைக்குட்டை மழைநீர் சேமிப்புக்கும், மண் அரிப்பை தடுக்கவும்  ஏற்றது. பண்ணைக்குட்டை அமைப்பதால்

நாமக்கல் : "பண்ணைக்குட்டை அமைத்து மழைநீரை தேக்கி சுழற்சி செய்தால், மானாவாரி நிலத்திலும் பசுமைப்போர்வை உருவாக்கலாம்' என, உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : விளை நிலங்களிலும் மற்றும் தரிசு நிலங்களிலும் பண்ணைக்குட்டை மழைநீர் சேமிப்புக்கும், மண் அரிப்பை தடுக்கவும்  ஏற்றது. பண்ணைக்குட்டை அமைப்பதால் பசுமை போர்வை எளிதில் ஊக்குவிக்கப்பட்டு பூமி வெப்பமாதலை தணிக்க உதவுகிறது.  அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளமும், மண் அரிமானமும், மண் அரிமானத்தால் மண் வளம் பாதிப்பும் தவிர்க்க முடியாதது. சரியான இடத்தில் பண்ணைக்குட்டை அமைத்து மழைநீரை தேக்கி சுழற்சி செய்தால், மானாவாரி நிலத்திலும் பசுமைப்போர்வை உருவாக்கலாம். பண்ணைக்குட்டை வெள்ள சேதத்தைக் குறைக்கவும், வறட்சியை சமாளிக்கவும் வழிகோலும் தொழில் நுட்பம்.


ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பளவில் 8 மீ., 5 மீ., அல்லது 10 மீ., 4 மீ., அல்லது 20 மீ., 2 மீ., நீளம்- அகலத்தில் 1.5 மீ., ஆழத்துக்கு குழி வெட்ட வேண்டும். சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு உள்ள நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து வெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும் பகுதியை வயல் பரப்பினை பலப்படுத்தவும் சுற்றி அணை கட்டவும் மிகுதியை தேவைப்படும் இடங்களில் வயலை சமப்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பரளவில் அமைக்கப்படும் பண்ணைக்குழியின் கொள்ளளவு 60 ஆயிரம் லிட்டர். பண்ணைக்குழியை குறைந்த செலவில் அமைக்க ஜே.சி.பி., பொக்லையன் இயந்திரத்தை பயன்படுத்தலாம்.


தென்னை, கரும்பு, வாழை வயலில் பண்ணைக்குட்டை அமைக்கலாம். நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் நிலத்திலும் வெட்டலாம். பண்ணைக்குட்டை அமைப்பதால் நிலத்தில் விழும் ஒவ்வொரு துளியும் வீணாகாமல் சேமிக்க உதவுகிறது. பண்ணைக்குட்டை உள்ள ஒவ்வொரு வயலும் சிறிய நீர் தேக்கமாக செயல்படுகிறது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். பசுமைப்போர்வையால் பூமி குளிர்ந்து, வாயு குளிர்ந்து மழை கொடுக்கும்.குழியின் நடுவில் அல்லது விளிம்பு பகுதி சுற்றிலும் பகுதிக்கேற்ப இலந்தை, நெல்லி, மா, பலா, எலுமிச்சை, சப்போட்டா, தேக்கு, இலவு, மூங்கில், வேம்பு, கருவேல், புங்கம், குமிழ் தென்னை, சந்தனம் போன்ற மரக்கன்றுகளை தேர்வு செய்து நட்டு பயன்பெறலாம்.


புஞ்செய் நில பகுதியில் பண்ணைக்குட்டை அமைப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிக மழைபெறும் நாட்களில் வழிந்தோடும் மழைநீர் சேமிப்பும், அதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வும் உறுதி செய்யப்படுகிறது. இதை அனைத்து விவசாயிகளும்  ஏற்று செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X