பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்கும், தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம், சென்னை அருகே வண்டலூரில், வரும், 8ம் தேதி நடக்கிறது. இதற்காக, பிரமாண்ட ஏற்பாடுகளை, தமிழக பா.ஜ., தலைவர்கள் செய்து வருகின்றனர்.
பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, அறிவிக்கப்பட்ட பின், முதல் முறையாக, திருச்சியில் இளந்தாமரை மாநாட்டில், நரேந்திர மோடி பேசினார். அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும், தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அதன்படி, தமிழகத்தின் தலைநகர் சென்னையில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேச உள்ளார்.
உற்சாக வரவேற்பு:
இதற்காக, 8ம் தேதி மாலை, அவர் சென்னை வருகிறார். அன்று காலையில், மணிப்பூரில் நடக்கும், பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசும் மோடி, அங்கிருந்து அசாம் மாநிலம் செல்கிறார். அங்கு கவுகாத்தி பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, சென்னை வருகிறார்.சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக, பொதுக் கூட்டம் நடக்கும், வண்டலூர், வி.ஜி.பி., மைதானத்திற்கு காரில் செல்கிறார். விமான நிலையத்தில், அவருக்கு, தமிழக பா.ஜ., சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வண்டலூர் பொதுக்கூட்டத்தை முடித்து, இரவு சென்னையில் தங்குகிறார். பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி தலைவர்களை, மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்.ஆனால், ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்பட மாட்டாது எனவும், அன்றைய தினம் காலையில் இருந்து, அவர் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, சென்னை வருவதால், மிகவும் களைப்பாக இருப்பார். எனவே, அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக, எந்த ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யவில்லை என, பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.மறுநாள் காலையில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். அப்பல்கலை வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான, பாரிவேந்தரின் தாயார் சிலையை மோடி திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சியை முடித்ததும், நேராக சென்னை விமான நிலையம் செல்லும் மோடி, அங்கிருந்து கேரளா செல்கிறார். கொச்சியில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பிரமாண்ட ஏற்பாடு:
வண்டலூரில், வி.ஜி.பி., மைதானத்தில், பொதுக் கூட்டம் நடத்த, 20 ஏக்கரில் இடம் தேர்வு செய்துள்ளனர். இதில், 80 அடி நீளம், 200 அடி அகலத்தில், மேடையும், மூன்று நுழைவு வாயில்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு, சிறப்பு அழைப்பாளர்கள், பொதுமக்கள் என, தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.கேளம்பாக்கம் சாலை, வண்டலூர், நெல்லிக்குப்பம் ஆகிய சாலையில், வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரண்டு ஐ.ஜி., நான்கு டி.ஜ.ஜி., 15 காவல் கண்காணிப்பாளர்கள் என, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இதுபற்றி பா.ஜ., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களும் வருவர்' என்றனர்.
சிறப்பு ரயில்கள்:
'வெளியூர்களிலிருந்து ரயில்களில், பஸ்களில் சென்னை வரும் தொண்டர்களும், சென்னையில் உள்ளவர்களும், பொதுக்கூட்டம் நடக்கும் வண்டலூருக்கு வந்து செல்ல ஏதுவாக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 8ம் தேதி, கூடுதல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டும்' என, பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கூட்டணி தலைவர்கள் 2 நாளில் முடிவாகும்:
சென்னையில் வாழும் வெளி மாநிலத்தவருக்கான, பா.ஜ., ஆலோசனைக் கூட்டம், சவுகார்பேட்டையில், நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வெளி மாநிலத்தவர்களுக்கான, பா.ஜ., பிரிவு தலைவர் அரவிந்த்குமார், மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழக பா.ஜ., கூட்டணியில், ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. தே.மு.தி.க., மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்த்தோம். இனி கூட்டணியில் இணைவது பற்றி விஜயகாந்த் தான் முடிவெடுக்க வேண்டும். பா.ம.க.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எப்படியும் இரண்டு நாட்களில், தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி உறுதி செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE