தி.மு.க., நாளேடான முரசொலியில், 'பண்பாட்டு படையெடுப்பு' என்ற தலைப்பில், திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி கட்டுரை எழுதி உள்ளார். அதில், அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள, மத சுதந்திர உரிமைப் பிரிவுகள், 25, 26ஐ நீக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்கு வகை செய்யவும், மதச் சார்பின்மையை உண்மையாக்கவும், இந்தத் திருத்தத்தை செய்ய வேண்டும் என்ற, தீர்மானத்தை. ஈ.வே.ரா., நிறைவேற்றினார் என, வீரமணி குறிப்பிட்டு உள்ளார். இந்த கருத்தை விமர்சிக்கும் வகையில், ஜாதி ஒழிப்புக்கு அரசியல் சட்டத்தைத் திருத்தச் சொன்ன, ஈ.வெ.ரா., இடஒதுக்கீட்டை எப்படி வலியுறுத்தினார் என்ற கேள்வி, வலம் வருகிறது. அதேபோல, ஈ.வே.ரா.,வின் கருத்துக்கு ஆதரவாகவும் பலர் இருக்க, நேர் எதிர் துருவங்களாக உள்ள இருவரின் வாத, பிரதிவாதங்கள் இங்கே:
ஒருபுறம் ஜாதியை ஒழிக்கக் கோரிய தும், மறுபுறம் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரியதும் ஈ.வெ.ராமசாமியின் இரட்டை வேடம். ஆங்கிலேயர்கள், இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சியாக, வகுப்பு வாரி பிரதிநிதித்துவம், மொழி, பிராந்திய வேறுபாடுகள் போன்ற வற்றை பின்பற்றினர். இதை, ஈ.வெ.ரா., ஆதரித்தார். ஐரோப்பிய கலாசாரத்தை, தமிழகத்தில் புகுத்தவே, அவர் செயல்பட்டார். காங்கிரசிலிருந்து அவர் வெளியேறியது கூட, தீண்டாமையை முன்னிறுத்தி அல்ல. வகுப்பு வாரியான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று தான். காங்கிரசில் அவர் இருந்தபோது, காந்தியடிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தான், வைக்கம் சென்று, தீண்டாமை ஒழிப்பிற்காக போராடி, சிறை சென்றார். காங்கிரசிலிருந்து அவர் வெளியேறியதும், ஜாதி அமைப்புகள் வலுப்பெற உதவி செய்தார். சமுதாய சங்கங்கள், ஜாதி சங்கங்களாக உருவெடுத்து, பின், ஜாதி கட்சிகளாக மாறுவதற்கு, ஈ.வெ.ரா.,வே காரணம். தமிழ் மொழியை காட்டு மிராண்டி மொழி என, கூறியவர் அவர். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாளராக இருந்தவர். நாடு விடுதலை பெறுவதைக் கூட, அவர் விரும்பவில்லை. ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். இடஒதுக்கீட்டின் மூலம், சமத்துவத்தை ஏற்படுத்தி, ஜாதிகளை ஒழித்து, தீண்டாமையைப் போக்க வேண்டும் என, அவர் எண்ணியதே இல்லை. 'பாலுக்கும் காவல், பூனைக் கும் தோழன்' என்ற போக்கையே, ஈ.வெ.ரா., கடைப்பிடித்தார். அவரால், தமிழ் சமூகம் எந்தப் பயனும் பெறவில்லை. தமிழ் சமுதாயத்தின் இழிவை, அவர் ஒழிக்கவில்லை. மாறாக, தமிழ் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். எனவே, ஜாதி ஒழியவேண்டும் என, ஒருபுறம் கோரிக்கையும். ஜாதிகளை வளர்க்க, மறுபுறம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் கடைப்பிடித்து, இரட்டை வேடத்தை, ஈ.வெ.ரா., தரித்திருந்தார்.
அர்ஜுன் சம்பத், தலைவர், இந்து மக்கள் கட்சி
சக மனிதனை தொட்டால் தீட்டு என, சொன்னவர்களும்; செருப்புப் போட்டு கீழ் ஜாதிக்காரன் நடக்கக் கூடாது என, சொன்னவர்களும்; ஆத்திகரா, நாத்திகரா. 'அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா. கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா. இதிகாசம், புராணங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ள தமிழை, காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ரா., கணினியில் தமிழை பயன்படுத்தும் அளவுக்கு எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர். வைக்கம் போராட்டத்தை நிறுத்தி விடுங்கள் என, ஈ.வெ.ரா.,வுக்கு கடிதம் எழுதியவர் காந்தியடிகள். ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்து, வெற்றி கண்டார் ஈ.வெ.ரா., 'வைக்கம்' போராட்ட வரலாறு அறிந்தவர்களுக்கு தான், இது தெரியும். நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், சம்பகம் ராமசாமி என்ற பிராமணர், தன் மகளுக்கு அனைத்து தகுதி யும் இருந்தும், மருத்துவ கல்வி சேர்க்கை கிடைக்கவில்லை என, பொய்யான வழக்கை, தொடர்ந்தார். இந்த வழக்கின் மூலம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன்பின், ஈ.வெ.ரா., நடத்திய போராட்டத்தின் விளைவாகத் தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது, செயினை பறித்து செல்லும், திருடனிடம் அதை மீட்பது போன்றது. குறிப்பிட்ட சமூகங்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் பல ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதால், அவர்களையும், பிற சமூகத்தினரைப் போல, சமத்துவப்படுத்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், சமூகநீதியை நிலைநாட்டி, சமூகங்களுக்கு இடையே உள்ள இழிவைப் போக்குவதே நோக்கம். இதை தான் ஈ.வெ.ரா., செய்தார்.
பாமரன், எழுத்தாளர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE