கடந்த லோக்சபா தேர்த லில், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய, கொ.மு.க., இப்போது, மூன்றாக உடைந்திருப்பதால், அப்போது, 12 தொகுதிகளில் கிடைத்த, ஆறு லட்சம் ஓட்டுகள், வரும் தேர்தலில், யாருக்குக் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெரும்பான்மையை கவர:
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் உட்பட, பல மாவட்டங்களில், கணிசமாக வசிக்கும், கொங்கு வேளாளர் (கவுண்டர்) சமுதாயத்தைக் குறி வைத்து, 2009 லோக்சபா தேர்தலுக்கு, சில மாதங்களுக்கு முன், 'கொங்குநாடு முன்னேற்றப் பேரவை' உதயமானது. கொங்கு வேளாளர் சமுதாயத்துக்காக இயங்கி வந்த, பல அமைப்புகளும், கொ.மு.பே., என்ற ஒரே குடையின் கீழ் வந்ததால், மேற்கு மாவட்டங்களில் உள்ள, ஒரு கோடி ஓட்டுகளில், பெரும்பான்மை ஓட்டுகளைக் கவர்ந்து விடலாம் என்று கணக்குப் போட்டனர், கொங்கு சமுதாய தலைவர்கள். அதற்கேற்ப, கொ.மு.பே., உதயமானபோது திரண்ட மக்கள் வெள்ளம், பெரிய கட்சிகளையே மிரள வைத்தது; கடந்த லோக்சபா தேர்தலின் போது, கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கூடிய கூட்டம், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் வயிற்றிலும் புளியைக் கரைத்தது.
ஒரு லட்சத்திற்கும் அதிகம்:
கொங்கு மாவட்டங்களை புறக்கணிக்கும் தேசிய, திராவிடக் கட்சிகள் என்ற பகிரங்க குற்றச்சாட்டுடன், தொழில் வளம், விவசாய மேம்பாடு, கொங்கு மாநிலம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன், நீலகிரி தனி தொகுதி உட்பட, 12 தொகுதிகளில், இக்கட்சியின் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களில், கட்சியின் தலைவரான பெஸ்ட் ராமசாமி, பொள்ளாச்சி தொகுதியிலும், செயலரான ஈஸ்வரன், கோவை தொகுதியிலும் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றனர். கட்சி துவங்கிய, 100 நாட்களுக் குள், 12 தொகுதிகளிலும் சேர்த்து, 5.82 லட்சம் ஓட்டுகளைப் பெற்று, அக்கட்சி சாதனை படைத்தது. கடந்த, 2011 சட்டமன்றத் தேர்தலின் போது, 'கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்' என, பெயர் மாற்றப்பட்ட, கொ.மு.பே., தன் கொள்கையை மாற்றி, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது. மாநிலம் முழுவதும், தி.மு.க., ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை இருந்தபோது, அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததால், கொங்கு நாடு முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு, தேர்த லில் பலத்த அடி கிடைத்தது. தோல்விக்குப் பின், அதற்கான காரணம் பற்றி ஆய்வுகள் நடந்தன; தலைவர்களுக்குள், 'ஈகோ' தலை தூக்கியது; பொதுச் செயல ரான ஈஸ்வரன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என்று தனிக்கட்சி துவக்க, அதற்குப் பின், பொதுச் செயலரான நாகராஜ், கொங்கு நாடு ஜனநாயகக் கட்சி என்ற கட்சியையும் துவக்கி விட்டார்.
ஆதிக்கங்களைத் தாண்டி:
கொங்கு நாடு முன்னேற்ற கழகம், மூன்றாக உடைந்து விட்டதால், கடந்த லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சிகளின் ஆதிக்கங்களைத் தாண்டி, சமுதாயத்துக்கென கிடைத்த, சுமார் ஆறு லட்சம் ஓட்டுகள், இப்போது யாருக்குக் கிடைக்குமென்பதுதான் கேள்வியாக உள்ளது; இந்த கேள்வியின் அடிப்படையில்தான், கூட்டணிக்கான பேரமும் வலுத்து வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE