புதுடில்லி : விதிமுறைகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், அக்கட்சி தலைவர்கள், விதிமுறைகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும், டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு மீதான முந்தைய விசாரணையின் போது, 'நிதி சேர்ந்த விவரம், வங்கி பண பரிமாற்றம் குறித்த ஆவணங்களை தர வேண்டும் என, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு பலமுறை கடிதம் எழுதியும், பதில் அளிக்கவில்லை' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி, பிரதீப் நந்திராஜோக் முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், ''மத்திய அரசின் கடிதங்களுக்கு, எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது பொய். அரசு தரப்பில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், அவ்வப்போது, முறையான பதில் அளித்து உள்ளோம்,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ராஜிவ் மெஹ்ரா கூறுகையில், ''எந்த பதிலும் அளிக்கவில்லை என்று, நாங்கள் கூறவில்லை. வங்கி ஆவணங்களை அளிக்கவில்லை என்று தான் கூறினோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE