அண்ணன் - தம்பி தகராறு, "2ஜி' விவகாரம் என, நெருக்கடி சூழலில் சிக்கியுள்ள, தி.மு.க.,வுக்கு, அக்கட்சியை சேர்ந்த, "மாஜி'க்கள், தங்கள் வாரிசு களுக்கு, "சீட்' கேட்டு, மேலும் நெருக்கடி கொடுக்கத் தயாராகி வருகின்றனர். திருச்சி மாநாட்டுக்கு பின், இந்த பிரச்னை, கட்சியில் பெரிதாக வெடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க.,வில், லோக்சபா தேர்தலில், சீட் கேட்டு, 1,400 பேர் விண்ணப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கான நேர்காணல், திருச்சி மாநாட்டுக்கு பின், நடத்தப்பட உள்ளது. முதலில், மாநாட்டில், வேட்பாளர் பட்டியலை வெளியிடும் நோக்கத்தோடு, விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், அதில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால், மாநாடு முடிந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறி விட்டார்.
வரும், 15, 16ம் தேதிகளில், திருச்சி யில் தி.மு.க., மாநில மாநாடு நடக்கிறது. அது முடிந்த, இரண்டு நாட்களில், அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நிகழ்ச்சி துவங்கும் என, கூறப்படுகிறது. தொகுதி வாரியாக, விண்ணப்ப மனு கொடுத்தவர்கள், அழைக்கப்பட்டு, கருணாநிதியும், ஸ்டாலினும் நேர்காணல் நடத்த உள்ளனர். தொகுதிகளை பெறுவதில், கட்சியினருக்குள் கடும் போட்டி எழுந்துள்ளது. குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர்.பாலு, தஞ்சாவூர் தொகுதியை குறிவைத்துள்ளார். அதே தொகுதியை, அந்தத் தொகுதியின், தற்போதைய எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான, பழனி மாணிக்கமும் கேட்டுள்ளார். இதில், யாருக்கு தொகுதி என்பதில், கடைசி வரை சர்ச்சை நீடிக்கும் என, கூறப்படுகிறது.
இதற்கிடையில், கூட்டணி கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரண்டு தொகுதி களை கேட்டு வருகிறது. சிதம்பரம் தொகுதிஎம்.பி.,யான, திருமாவளவன், மீண்டும் அங்கு போட்டியிட விரும்புகிறார். அதுபோக, விழுப்புரம் தொகுதியையும் கேட்டுள்ளார். அதற்கு, முன்னாள் அமைச்சர், பொன்முடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், தன் ஆதரவாளர், புஷ்பராஜனை நிறுத்த முயற்சித்து வருகிறார்.
இந்த பிரச்னையை விட, முன்னாள் அமைச்சர்கள் சிலர், தங்கள் வாரிசுக்கு, 'சீட்' கேட்டு கொடி தூக்கியுள்ள விஷயம், பெரிதாக வெடிப்பது உறுதியாகி உள்ளது. துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்துக்காக, வேலூர் தொகுதி கேட்டு, 130 விண்ணப்ப மனுக்கள் கொடுக்க வைத்துள்ளார். கூட்டணியில் உள்ள, முஸ்லிம் லீக் கட்சியும், இதே தொகுதியை கேட்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர், ஐ.பெரியசாமி, தன் மகன் செந்தில் குமாருக்காக, திண்டுக்கல் தொகுதியையும், பொங்கலூர் பழனிச்சாமி, தன் மகன் பாரிக்காக, கோவை தொகுதியையும், தூத்துக்குடி மாவட்ட செயலர் பெரியசாமி தன் மகன் ஜெகனுக்காக, தூத்துக்குடி தொகுதியையும் கேட்டுள்ளனர்.
இப்படி, 'மாஜி'க்கள் எல்லாரும் தங்கள் வாரிசுகளை களம் இறக்க முயற்சிப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி தொகுதியில், தொழில் அதிபர், தேவதாஸ் சுந்தரம் போட்டியிட சீட் கேட்டுள்ளார். அவருக்கு தலைமை ஆதரவு இருப்பதாக செய்திகள் வெளியானதால், நெல்லை தி.மு.க.,வில் எதிர்ப்பு பிரசாரம் இப்போதே கிளம்பி விட்டது.
இதுபோன்ற பல பிரச்னைகள், தி.மு.க.,வில் வெடிக்க விருப்பதால், மாநாட்டுக்கு பின், துவங்கவிருக்கும் நேர்காணல் நிகழ்ச்சியில் அனல் பறக்கும் என, அறிவாலய வட்டாரம் தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE