தமிழக டி.ஜி.பி.,யாக உள்ள, ராமானுஜத்திற்கு, அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும், இரண்டு ஆண்டு, எட்டு மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இப்படி நீண்ட காலம் ஒரே பணியில் இருப்பவர்களை, தேர்தல் பணியில் பயன்படுத்தக்கூடாது. லோக்சபா தேர்தலின் போது, அவர், டி.ஜி.பி.,யாக பதவியில் நீடித்தால், தன் பணியில், நேர்மையாகவும், நியாயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவாரா என்பதுசந்தேகமே. அதனால், டி.ஜி.பி., ராமானுஜத்தை, வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என, தேர்தல் கமிஷனில், தி.மு.க., புகார் மனுஅளித்துள்ளது. டி.ஜி.பி.,யை மாற்றக்கோரும், தி.மு.க.,வின் வாதம் சரியா, தவறா என, இரு பிரபலங்கள் முன் வைத்த வாதங்கள் இதோ:
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், டி.ஜி.பி., பதவி காலியானது. அப்போது, டி.ஜி.பி.,யாக ஒருவரை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில், அந்தளவுக்கு, டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் இல்லாமல் இல்லை. ஆனால், டி.ஜி.பி.,க்கு அடுத்த நிலையில் இருந்த ராமானுஜத்தை, டி.ஜி.பி., பொறுப்பு என, நியமித்து, காவல் துறையை வழிநடத்த அவருக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது. டி.ஜி.பி.,யாக ராமானுஜத்தை நியமித்தால், அவரை விட, பணி மூப்பில் உள்ளவர்கள், வழக்கு தொடர்வர். அதன்மூலம், ராமானுஜம், டி.ஜி.பி.,யாக நீடிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால், அவருக்கு டி.ஜி.பி., பொறுப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் ஓய்வுபெற்ற பிறகாவது, புதிய டி.ஜி.பி.,யை, தமிழக அரசு நியமித்திருக்க வேண்டும். அதையும் செய்யாமல், ராமானுஜத்துக்கு பணி நீட்டிப்பு வழங்கி, அரசாணை வெளியிட்டு, டி.ஜி.பி.,யாக தொடர செய்துள்ளது. ராமானுஜத்தை இந்தளவுக்கு, தக்கவைத்துக் கொள்ள, தமிழக அரசுக்கு அப்படி என்ன நிர்பந்தம் என்பது தான், எங்களது கேள்வி.மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு, ஓய்வு பெற்ற பின், பணி நீட்டிப்பு அளிக்க விரும்பினால், அதற்கான அனுமதியை, அவர் பணி ஓய்வு பெறுவதற்கு முன்னதாகவே பெற வேண்டும். அப்படி, மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லை எனில்,
அவர் பணி நீட்டிப்புக்குதகுதியற்றவராவார்.எனவே, இவ்வளவு ஆதாயங்களைப் பெற்ற ராமானுஜம், ஆளும் கட்சிக்கு சார்பாக செயல்படுவார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏற்காடு இடைத் தேர்தலிலும், அவரது தலைமையிலான போலீசார், ஆளும் கட்சி சார்பாகவே செயல்பட்டனர். எனவே, லோக்சபா தேர்தலிலும், இந்நிலை நீடிக்கும் என்பதால், நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த, அவரை இடமாற்றம் செய்ய கோருகிறோம்.
டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க., - எம்.பி.,
லோக்சபா தேர்தல் தோல்விக்கு இப்போதே, காரணம் தேடும் வேலையை, தி.மு.க., துவக்கி விட்டது. அதனால் தான், தமிழகத்தில், சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடக்குமா என்ற, சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழக காவல் துறை தலைவராக இருக்கும், ராமானுஜம், ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வாரோ என, அஞ்சுகிறது. அதனால், அவரை வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையத்தில், அந்தக் கட்சியினர் மனு கொடுத்துள்ளனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின், அவர்களுக்கு பணி நீட்டிப்பு அளிப்பது என்பது புதிதல்ல. தி.மு.க., ஆட்சியின் போதும், பல, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு குறிப்பிட்ட பதவியில், அவர்கள் நீடிக்கவும்அனுமதித்து உள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, ராமானுஜத்துக்கு பணி நீட்டிப்பு அளித்துள்ளது குற்றமல்ல. தி.மு.க., ஆட்சியில், லத்திகா சரண் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அவரை விட, மூத்த அதிகாரிகளின் பணி மூப்பை கவனத்தில் கொள்ளாமல், லத்திகா சரணுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டதை, யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ராமானுஜத்தின் ஓய்வுக்குப் பின், பணி நீட்டிப்பு அளித்தது, விதி மீறல் என்றோ, சட்டத்திற்கு புறம்பானது என்றோ கருதினால், தமிழக அரசின் முடிவை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ராமானுஜத்தின், பணி நீட்டிப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இதை யாரும் தவறு என, சொல்லமாட்டார்கள். அதை விட்டு விட்டு, லோக்சபா தேர்தலையும், ராமானுஜம் பதவி நீட்டிப்பையும் இணைத்துப் பேசுவது சரியல்ல. அத்துடன், தேர்தலில் பெரும் ஆபத்து நேர்ந்து விடும் என, கற்பனை செய்து, புகார்கள் அளிப்பதும் தேவையில்லாத ஒன்று. தி.மு.க.,வின் இந்த அணுகுமுறை முறையானதல்ல.
சவுந்திரராஜன், சட்டசபை மார்க்சிஸ்ட் தலைவர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE