முற்பட்ட வகுப்பினரிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் உள்ளனர். அதனால், "சாதி அடிப்படையிலான, இடஒதுக்கீட்டிற்கு, முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து சாதியினரும், பயன் பெறும் வகையில், பொருளாதார அடிப்படையில், இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, ஒரு தரப்பினர், கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், அதை, அரசியல் கட்சியினர் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், "சாதி அடிப்படையிலான, இடஒதுக்கீட்டிற்கு முடிவு கட்ட வேண்டும்' என, ராஜ்யசபாவில், காங்கிரஸ் மூத்த தலைவர், ஜனார்த்தன் திவேதி பேசியது, பலத்த சர்ச்சையை கிளப்பி விட்டது. உடன், காங்கிரஸ் தலைவர் சோனியாவே, திவேதியின் கருத்து, அவரின் சொந்தக் கருத்து எனக்கூறி, முற்றுப்புள்ளி வைத்து விட்டார். பொருளாதார அடிப்படையில், இடஒதுக்கீடு வழங்குவது சரியா, தவறா என, இரு பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள்:
காங்கிரசில், சோனியா குடும்பம் நினைப்பதைத் தான் அமல்படுத்த முடியும். மாறாக கருத்து சொன்னால், அங்கு எடுபடாது. கிரிமினல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற அரசியல் வாதிகள், பதவியிழக்க நேரிடும் என்ற, தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.
ஆனால், "இந்த முடிவு முட்டாள் தனமானது' என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் கண்டித்தார். பிரதமர் தலைமையிலான அமைச்சரவை என்று கூட மரியாதை தராமல், ராகுல் கண்டனம் தெரிவித்தார். பிரதமரும், அதற்கு கருத்துத் தெரிவிக்கவில்லை. மானிய விலை சிலிண்டர்களை ஒன்பதிலிருந்து, 12 ஆக உயர்த்த வேண்டும் என, அனைத்து தரப்பின ரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு செவி சாய்க்காத மத்திய அரசு, ராகுல் சொன்னதும், மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை, 12 ஆக உயர்த்துகிறது. எனவே, ஆட்சியின் கொள்கை மற்றும் நிர்வாக முடிவு களை சோனியாவும், அவரது குடும்பமும் தான் எடுக்கிறது.
"பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு' என்ற கருத்தை வெளியிட்ட ஜனார்த்தன் திவேதிக்கு, சோனியா எந்த கண்டனத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அவரது கருத்தால், ஓட்டு வங்கி பாதித்துவிடுமோ என்ற அச்சத்தில், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தான் செயல்படுத்தப்படும் என, கூறுகிறார். திவேதி கூறிய கருத்தை மறுக்கும் சோனியா, அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தெளிவற்ற கொள்கைகள் மற்றும் மக்கள் விரோத செயல்களால் திண்டாடிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், முதல் முறையாக திருத்தப்பட்டது, இட ஒதுக்கீடு அளிக்கும் சமூக நீதிக்குத் தான் என்பதை, காங்கிரசார் மறந்து விட்டனர் போல தெரிகிறது. அதனால் தான், இது போன்ற பிதற்றல்கள்.
மாசிலாமணி, பொருளாளர், ம.தி.மு.க.,
"பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான, ஜனார்த்தன் திவேதி தெரிவித்த கருத்து காங்கிரசின் கருத்தல்ல. பொருளாதாரம் என்பது, நிலையான ஒன்றல்ல. இன்றைக்கு பணக்காரனாக இருப்பவன், நாளைக்கு ஏழையாகவும், இன்றைக்கு ஏழையாக இருப்பவன், நாளைக்கு பணக்காரனாகவும் மாறும் நிலையே, சமூகத்தில் நிலவுகிறது. அதனால், பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீடு அளிக்க முடியாது; அப்படி அளிப்பது சரியாகவும் இருக்காது.
எனவே, ஏற்கனவே அமலில் உள்ள, ஜாதி அடிப்படையில் தான், இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற கட்சியின் நிலையை, சோனியா தெளிவுபடுத்தியுள்ளார். சமூகத்தில், ஜாதிகள் முற்றிலும் ஒழியும் வரை, ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தான், இந்தியா போன்ற பன்முக கலாசாரம் உடைய நாட்டிற்கு ஏற்றது. சமூகத்தில், ஜாதியின் அடிப்படை யில் தான், ஒரு மனிதனை நடத்து கின்றனர் என்கிறபோது, அவனை கை தூக்கிவிட, ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடே ஏற்புடையது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள், அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு, பின் மறுக்கின்றனர் என, கூறுவது சரியல்ல. பல நேரங்களில், கட்சித் தலைவர்கள் கூறும் கருத்துக்களை, மேம்போக்காக ஆராய்ந்து செய்திகள் வெளியிடுவதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கட்சித் தலைவர்கள் கூறும் கருத்தின், உள் அர்த்தம் என்ன; அவர் கூறும் சூழ்நிலை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்றபடி விமர்சனம் செய்தால், இதுபோன்ற பிரச்னைகள் எழாது. காங்கிரசை பொறுத்தவரை, கல்வி, வேலைவாய்ப்பில், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தான் அமலில் இருக்க வேண்டும். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளாது.
விஜயதாரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE