கூட்டணிக்கு, ராமதாஸ் விதித்த நிபந்தனைகளை ஏற்க, பா.ஜ., தலைவர்கள் தயக்கம் காட்டுவதால், "அந்தக் கூட்டணியில் சேர வேண்டாம்' என, காடுவெட்டி குரு உட்பட, பலர் யோசனை தெரிவித்து வருகின்றனர். ராமதாசின் மனதை மாற்றவும் முற்பட்டுள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த அன்புமணி, மும்பை சென்று விட்டதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ., கூட்டணியில் சேர வேண்டும் என்பதில், பா.ம.க., இளைஞர் அணி தலைவர், அன்புமணி தீவிரமாக உள்ளார். பா.ஜ., மேலிட தலைவர்களுடன், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய அவர், அதன்பின், மாநில தலைவர்களுடனும் பேச்சு நடத்தி வருகிறார். அவரது ஏற்பாட்டின் பேரில், பா.ம.க., தலைவர், ராமதாசை, பா.ஜ., தலைவர்கள், ரகசியமாக சந்தித்துப் பேச்சு நடத்தினர். அப்போது, பா.ம.க.,வுக்கு, ஒன்பது லோக்சபா தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்புமணிக்கு, ராஜ்யசபா, "சீட்' பெற்றுத் தர வேண்டும் என, ராமதாஸ் நிபந்தனை விதித்தார்.
உடன்படவில்லை : ஆனால், பா.ஜ., தலைவர்களோ, "முதலில் கூட்டணியில் சேரும் முடிவை எடுங்கள்; தொகுதி பங்கீடு உட்பட, மற்ற விஷயங்களை, பின் பார்த்துக் கொள்ளலாம்' என, கூறினார். அதற்கு ராமதாஸ் உடன்படவில்லை. தன் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே, நாளை, மோடி பங்கேற்கும், வண்டலூர் பொதுக்
கூட்டத்தில், பங்கேற்பதாக திட்டவட்ட மாகத் தெரிவித்து உள்ளார். இதனால், என்ன செய்வது என தெரியாமல், பா.ஜ., தலைவர்கள், கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், "பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க வேண்டாம். ஜாதிச் சங்கங்கள் இணைந்த, சமுதாய கூட்ட ணி சார்பிலேயே, லோக்சபா தேர்தலை சந்திக்கலாம். இல்லையெனில், வன்னியர்கள் நம்மை புறக்கணித்து விடுவர்' என, வன்னியர்
சங்கத் தலைவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான, காடுவெட்டி குருவும், அவரின் ஆதரவாளர்களும், ராமதாசிடம் தொடர்ந்து கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான விஷயங் களை அடிக்கடி பேசிப்பேசி, ராமதாஸ் மனதை மாற்ற முற்பட்டு உள்ளதோடு, பா.ஜ., உடன் கூட்டணி பேச்சே வேண்டாம் என்றும் கூறி, குடைச்சல் கொடுத்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில், நேற்று நடந்த திருமண விழாவிற்கும், சிதம்பரம் தொகுதி, பா.ம.க., மகளிர் மாநாட்டிற்கும் சென்ற ராமதாசை, நேற்று மீண்டும் சந்தித்த குருவும், அவரின் ஆதரவாளர்களும், இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.
கட்டுக்கோப்பாக : குரு மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்தச் செயலால், அன்புமணி கடும் அதிருப்தி அடைந்து உள்ளார். "பா.ஜ., கூட்டணியில் இணைந்தால் மட்டுமே, பலவீனமடைந்துள்ள கட்சியை கட்டுக்கோப்பாக மாற்ற முடியும். 2016ம் ஆண்டு, சட்டசபை தேர்தல் இலக்கை பூர்த்தி செய்ய முடியும்' என, ராமதாசிடம் அவர் கூறியுள்ளார். அன்புமணியும், குருவும், கூட்டணி விஷயத்தில், ஆளுக்கொரு பக்கம் இழுப்பதால், எந்த பதிலும் சொல்லாமல், ராமதாஸ் மவுனம் சாதித்து வருகிறார்.
இதற்கிடையே, "கூட்டணியை இறுதி செய்யுங்கள்' என, அன்புமணிக்கு, பா.ஜ., தரப்பில், நெருக்கடி கொடுக்கப்படுவதால், அதை சமாளிக்க, கடந்த இரண்டு நாட்களாக, அவர் மும்பையில் முகாமிட்டுள்ளார் என, பா.ம.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி பற்றி உறுதியான அறிவிப்பை, இன்று ராமதாஸ் வெளியிட்டால், அன்புமணி சென்னை திரும்பலாம் என, நம்பப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE