தி.மு.க.,வில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, நியமிக்கப்பட்டுள்ள குழுவில், அனுபவம் உள்ளவர்கள் இடம் பெறாததால், கடும் அதிருப்தி உருவாகியுள்ளது.
தி.மு.க.,வில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சிகளுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்டுள்ள, ஐவர் குழுவில், பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஆலந்தூர் பாரதி, கல்யாணசுந்தரம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவில், டி.ஆர்.பாலு, கனிமொழி, ராஜா, சற்குணபாண்டியன், டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் ராமசாமி ஆகிய, ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுக்களில், கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்துவோர், அரசியல் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அத்துடன், மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலம், பலவீனம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். அதனால், இதுபோன்ற குழுக்களில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், தற்போதைய எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, முன்னணி தலைவர்கள் இடம் பெற்றிருந்தால் நன்றாக இருக்கும். அதை விடுத்து, நகராட்சி தலைவராக இருந்தவர், கவுன்சிலராக இருந்தவர் எல்லாம், கூட்டணி பேச்சு குழுவில் இடம் பெற்றால், எப்படி இருக்கும். இதை தலைமை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE