'லோக்சபா தேர்தல் வேட்பாளர்களுக்கு, தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு குறித்த துல்லியமான தகவல் கொடுக்கப்படும்' என, சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான துப்பறியும் நிறுவனத்தின் விளம்பரம், பலரின் மனதில், அது குறித்து மேலும் தெரிந்துகொள்ள ஆர்வத்தை உருவாக்கி உள்ளது.
சென்னையில் 'டிடெக்டிவ் இன்டர்நேஷனல்' எனும் அந்த துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் குலோத்துங்க சோழனிடம், அந்த விசித்திர விளம்பரம் குறித்து பேசினோம்.
தேர்தலில் துப்பறியும் பணிகளை துவங்கியது எப்படி?
துப்பறியும் பணியில், 33 ஆண்டுகளாக இருக்கிறேன். அரசியல் கட்சி கள் கேட்டுக் கொண்டதை அடுத்து, கடந்த 18 ஆண்டுகளாக தொகுதிகளின் நிலையை அறிய துப்பறியத் துவங்கினேன். இதுவரை ஏழு தேர்தல்களில் தொகுதி நிலவரங்களை அறிந்து, வெற்றி வாய்ப்பு குறித்து, எங்களை அணுகும் கட்சிகளுக்கு ரகசியமாக அறிக்கை அளித்து வருகிறோம்.
தொகுதிகளின் நிலையை அறிய எப்படி செயல்படுகிறீர்கள்?
நாடு முழுவதும் எங்களுக்கு தகவல் கொடுப்பவர்கள் (இன்பார்மர்) உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்டோர் தகவல் சேகரித்து அளிக்கின்றனர். இவர்களை கொண்டே தேர்தல் கருத்து கணிப்பிற்கான பணியை மேற்கொள்கிறேன். ஒவ்வொரு தொகுதி யிலும் குறைந்தபட்சம், 1.50 லட்சம் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை சரியாக கணிக்கிறோம்.
வாக்காளர்களிடம் நீங்கள் கருத்து கேட்கும் விதம்...
தொகுதிகளில் வீடு, வீடாக எங்களது 'இன்பார்மர்'கள் சென்று கருத்து கேட்பர். இதில் எங்கள் பாணியே தனி. எங்களது 'இன்பார்மர்', ஒவ்வொரு வீட்டிலும் வாக்காளர்களிடம் மெல்ல பேச்சு கொடுப்பர். அரசின் திட்டங்களை சொல்லிப் பார்ப்போம். வீட்டில் அரசியல்தலைவர்கள் படங்கள் இருந்தால், அதைப்பற்றி விசாரிப்போம்.கட்சியில் இருப்பவர்களாக இருந்தால், அடுத் தடுத்த வீடுகளில் விசாரிப்போம். தேவைப்பட்டால் சில வீடுகளில் கருத்து சொல்பவரையே 'இன்பார்மர்' ஆக்கிவிடுவோம்.
தகவல் கொடுப்பவர்களுக்கு அடுத்தடுத்த கட்டளைகள் பிறப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு ஒரு முகவர் எனவும், அவருக்கு கீழே எஸ்.பி., ரேங்கில் சிலரும், அவர்களின் மேற்பார்வையில் 'இன்பார்மர்'கள் களப்பணி ஆற்றுவர். தகவல்கள் அளிப்பதுடன் குறிப்பிட்ட கட்சியை வெற்றியடைய செய்யும் பணியையும், இவர்களை கொண்டே செயல்படுத்துகிறோம்.
என்ன! நீங்களே வெற்றியடைச் செய்து விடுவீர்களா?
ஆமாம். எங்களை பொறுத்தவரை, தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., காங்., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்து, 37 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே உள்ளன. நடுநிலையாளர்களை பொறுத்தவரை - 45 சதவீதம் உள்ளனர், ஓட்டு அளிக்காதவர்கள் - 18 சதவீதம் உள்ளனர்.குறிப்பிட்ட தொகுதியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற வேட்கையில் எங்களை ஒரு கட்சி அணுகும் பட்சத்தில், அந்த கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு சாதகமாக, அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, நடுநிலையாளர்களை ஓட்டளிக்க வைக்கும்படி மனமாற்றம் செய்கிறோம். நடுநிலையாளர்களில் 10 முதல் 20 சதவீதம் பேர் மனமாற்றம் அடைந்தாலே எங்களிடம் பணம் செலுத்திய கட்சிக்கு வெற்றி உறுதி.
அது என்ன அதிநவீன தொழில்நுட்பம்?
நாங்கள் நடுநிலையாளர்களை மனமாற்றம் செய்ய, 10 வகையான வழிகளை பின்பற்றுகிறோம். அந்த முறைகள் அனைத்தும் சொல்லக்கூடாத ரகசியம்.
தொகுதி நிலையை அறிய எவ்வளவு தொகை வாங்குகிறீர்கள்?
சுமார் 20 முதல் 25 லட்சம் வரை செலவாகும். எங்களிடம் செலுத்தும் தொகை, வேட்பாளர் செலவு கணக்கில் வராது என்பதால், பிரச்னை இருக்காது. எங்களை அணுகியவர்கள் விவரமும் ரகசியமாக காக்கப்படும்.
இதுவரை நீங்கள் கணித்ததில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு - 22 தொகுதிகள், தி.மு.க.,விற்கு - 10க்கும் குறைவான தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைக்கும் பட்சத்தில் 35 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
யார் பிரதமராக வாய்ப்பு உள்ளது?
மத்தியில், பா.ஜ., கூட்டணிக்கு, அதிகபட்சமாக 210 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். காங்கிரசுக்கு, 60 தொகுதிகள் கிடைத்தாலே பெரிய விஷயம். மூன்றாவது அணிக்கே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த அணியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் பதவிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE