ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி, சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, ' அரசியலில் பணம் விளையாடுவது என்பது, தென் மாநிலங்களில் அதிகரித்து விட்டது. 'ஓட்டுக்கு துட்டு' என்பதற்கு, பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும், அசாம் மாநிலத்திலேயே கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. ஆனால், படித்த மக்கள் நிறைந்த, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், ஓட்டுக்கு பணம் வாங்குவது அதிகரித்துள்ளது' என, குறிப்பிட்டு இருந்தார். லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் அதிகாரியின் இக்கருத்து, முக்கியத்துவம் பெற்றுள்ளது. 'ஓட்டுக்கு ஓட்டு' என்ற தமிழகத்தின் அண்மை கால கலாசாரம் குறித்து, முன்னாள் தேர்தல் அதிகாரி மற்றும் தேசிய கட்சி தலைவரின் கருத்துப் போர் இதோ:
'ஓட்டுக்கு காசு கொடுப்பது கிரிமினல் குற்றம். இங்கு யாரும் துட்டுக்கு ஓட்டை விற்கவில்லை' என, அசாம் மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், துட்டுக்கு ஓட்டை விற்கின்றனர் என, தேர்தல் அதிகாரி கூறியிருப்பதிலிருந்து, தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். அதாவது, அரசியல்வாதி எவ்வளவு கொள்ளையடிக்கிறார் என்பது தெரிந்து, அதிலிருந்து தங்களது பங்கை, லஞ்சமாக ஓட்டளிக்க கேட்கின்றனர். தமிழகத்தில், ஓட்டுக்களை மனதில் வைத்தே, இலவசங்கள் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படுகின்றன. ஓட்டுக்கு துட்டு என்பது, மறைமுகமாக வழங்கப்படுகிறது. இலவசங்கள், மக்கள் செலுத்தும் வரிப் பணத்திலிருந்து நேரடியாக அளிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் பணத்தை, சந்தையில் விற்கும் பொருட்கள் மூலமாக, லஞ்சம் கொடுத்தவர்கள் வசூலித்து விடுகின்றனர். அதுவும், மக்களின் தலையில் தான் விழுகிறது. இதை, புரிந்து கொண்டும், ஒட்டுக்கு துட்டு வாங்குகின்றனர் என்பது, ஆச்சரியமாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் வைக்கவும், பொங்கல் பரிசாக, 100 ரூபாயையும், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும், அரசு அளிக்கிறது. இதை கூச்சப்படாமல் அனைவரும் வாங்கிக் கொள்கின்றனர். இந்த அன்பளிப்பு, மக்கள் வரிப்பணத்திலிருந்து தான், வழங்கப்படுகிறது. ஆந்திரா, கர்நடாக மாநிலங்களை விட, தமிழகத்தில் தான், ஒட்டுக்கு துட்டு கொடுக்கும் செயல், அதிகளவில் நடக்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எப்படி செயல்படுத்தலாம் என்பதை, ஒரு குழு அமைத்து, அரசியல் கட்சிகள் யோசிக்கும் அவலம், தமிழகத்தில் தான் நடக்கிறது. ஒட்டுக்கு காசு கொடுப்பவர்கள், அத்தொகையை, அரசு திட்டங்களிலிருந்து கொள்ளையடிக்கின்றனர். இதனால், நமக்குக் கிடைக்க வேண்டிய சேவை தரம் குறைகிறது.
கோபால்சாமி, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்
ஏழைகள் அதிகம் வாழும் இந்தியா போன்ற நாடுகளில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் இல்லை. மேலை நாடுகளில், குறிப்பாக வளர்ந்த நாடுகளில் கூட, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை, வயதானவர்களுக்கு ஓய்வூதியம் போன்றவை அளிக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற பாதுகாப்புத் திட்டங்கள் இல்லை. இதற்காக, போராட்டம் நடந்து வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டம் என்பது, மக்களின் உரிமை. அதை இலவசம் என, கொச்சைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தேர்தலோடு, சமூக பாதுகாப்புத் திட்டங்களை, முடிச்சுப் போடக் கூடாது. இலவச அரிசி போன்ற திட்டங்கள், வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அளிக்கப்படுபவை. இத்திட்டங்களை இலவசம் என, கூறுவது, மக்களுக்கு பிச்சை போடுகின்றனர் என, கூறுவதற்கு சமம். மக்களை பிச்சைக்காரர்களாக அசிங்கப்படுத்தக் கூடாது. ஆனால், ஓட்டுக்கு காசு கொடுக்கின்றனர் என, பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது. தேர்தல் நேரங்களில், தேர்தல் ஆணைய அதிகாரிகள், பல இடங்களில், பணத்தை கைப்பற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன. காசு கொட்டுத்து, ஓட்டு வாங்கி, தேர்தலில் வெற்றி பெறுவது என்பது, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. அதேநேரத்தில், மக்கள் காசு வாங்கிக் கொண்டு, ஓட்டுப் போடுவதால் தான், அரசியல் கட்சிகள் வெற்றி பெறுகின்றன என்றும் கூறிவிட முடியாது. பல தேர்தலில், ஆச்சரியம் அளிக்கும் வகையில் செலவு செய்த வேட்பாளர்கள் பலர், தோல்வியைத் தழுவியதும் உண்டு. கட்சிகள், வேட்பாளரின் தேர்தல் செலவுக்கு அரசு செலவிடும் முறை, வாக்காளர் பட்டியலை இலவசமாகத் தருவது, தேர்தல் பிரசாரங்களை வானொலி, தொலைக்காட்சிகளில் மேற்கொள்ள, ஒவ்வொரு கட்சிக்கும், நேரம் ஓதுக்குவது போன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்தால், துட்டுக்கு ஓட்டு என்ற நிலை மாறும்.
ராஜா, தேசிய செயலர், இந்திய கம்யூனிஸ்ட்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE