ஒரு முதல்வர், அதுவும் வருங்கால பிரதமர் என, விளம்பரப்படுத்தப்படும் நபர், 'குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று, விசாரணை நீதிமன்றம் முடிவு எடுக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தால், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பினரின் கவனமும், அந்த வழக்கின் மீது பதிவது இயல்பானது. ஆனால், முதல்வர், ஜெயலலிதாவுக்கு எதிரான, வருமான வரி ஏய்ப்பு வழக்கில், கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ஏனோ பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை. அதற்கு, அந்த வழக்கு துவங்கிய காலம் ஒரு காரணமாக இருக்கலாம்.
பல நோட்டீசுகள்:
கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன், நான் பட்டய கணக்காளர் ஆன போது, இந்த வழக்கு குறிக்கும் பிரச்னை துவங்கியது. தமிழக முதல்வரும், அவரது தோழி சசிகலாவும், 1990ல், 'சசி என்டர்பிரைசஸ்' என்ற, ஒரு கூட்டு நிறுவனத்தை துவக்கினர். 'இந்த நிறுவனம், 1991 - 92, 1992 - 93 ஆண்டுகளுக்கு, வருமான விவரங்களை தாக்கல் செய்யவில்லை' என, வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. மேலும், 'முதல்வரும், சசிகலாவும், 1993 - 94ம் ஆண்டுக்கான தங்கள் தனிநபர் வருமான விவரங்களையும், வருமான வரி துறையிடம் தாக்கல் செய்யவில்லை' என, குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு, பல நோட்டீசுகளை, வருமான வரி துறை அனுப்பியது. இருப்பினும், அவர்களிடம் இருந்து உரிய பதில் வரவில்லை. பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் பலன் இல்லாததால், வருமான வரி துறையிடம் இருந்த விவரங்களின் அடிப்படையில், 'சசி என்டர்பிரைசஸ்', முதல்வர் மற்றும் சசிகலாவின் வருமானம் நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வரி செலுத்தும்படி, அவர்களிடம், மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
வழக்கே மேல்:
'வரி செலுத்துவதை விட, வழக்கே மேல்' என்று, கருதினார்களோ என்னவோ; முதல்வரும், சசிகலாவும் வருமான வரி தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தனர். ஆனால், தீர்ப்பாயம் அவர்களுக்கு தோதாக இல்லை; 'ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் வருமானம் உள்ளது; அவர்கள் வரி செலுத்த வேண்டும்' என, தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில், ஜெயலலிதாவும், சசிகலாவும், தங்களிடம் இருந்து வருமானத்தை மறைத்ததாக கருதி, வருமான வரித்துறை, அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. அதற்கெல்லாம் சலித்துக் கொள்ளாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில், முதல்வரும், சசிகலாவும் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றமும் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. அதற்கு பிறகே, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். அதை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், கடந்த வாரம் அளித்த தீர்ப்பில், 'ஜெயலலிதா, சசிகலா மீதான கிரிமினல் வழக்கை, விசாரணை நீதிமன்றம் துவங்கலாம். நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்' என, குறிப்பிட்டது.
கிரிமினல் வழக்கு:
முதல்வர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று, விசாரணை நீதிமன்றம் முடிவு எடுக்க, இத்தனை ஆண்டுகளுக்கு பின் தான் அனுமதி கிடைத்து உள்ளது. 'தமிழகத்தில், 1961 முதல், இதுவரை, மூன்று - நான்கு பேர் மீது தான், வருமானத்தை மறைத்த காரணத்தினால், கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு உள்ளது' என்ற செய்தியை, ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஆனால், இத்தனை ஆண்டு இழுத்தடிப்பு ஜெயலலிதாவிற்கு பலன் தருமா என்பது கேள்விக்குறி. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். விசாரணை நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் அவருக்கு எதிரான தீர்ப்பை அளித்துவிட்டால், அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்படக் கூடும். மேல்முறையீடு செய்து, வழக்கு விசாரணையை இத்தனை ஆண்டுகள் தாமதப்படுத்தியபோது, இந்த நெருக்கடியான சூழலை, ஜெயலலிதா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இத்தனை ஆண்டு காலம்:
முதல்வராக இல்லாமல், சாதாரண நபராக இருந்திருந்தால், ஒருவேளை சிறிய அபராத தொகை செலுத்திவிட்டு, இந்த வழக்கை முடித்திருப்பார். அதேவேளையில், சாதாரண நபராக இருந்திருந்தால், 'கிரிமினல் வழக்கு தொடரலாமா, வேண்டாமா' என்ற, முடிவிற்கு கோர்ட் வருவதற்கு, இத்தனை ஆண்டுகாலம் இழுத்தடிக்க வைத்திருக்க முடியாது? தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வந்தாலும், எதிர்ப்பாக வந்தாலும் அரசியலிலும், சட்ட நடைமுறையிலும் ஒரு திருப்பு முனையாகவே கருதப்படும்.
எம்.ஆர்.வெங்கடேஷ்
பட்டய கணக்காளர்
மற்றும் பொருளாதார நிபுணர்
mrv10000@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE