சென்னை: மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, நமது அரசியல் அமைப்புகளை சீர்குலைத்து விட்டது. நாடு முன்னேற்றம் அடைய, காங்கிரஸ் அரசு அகற்றப்பட வேண்டும்,''என, சென்னை அருகே, வண்டலூரில் நேற்று இரவு நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்ருமான, நரேந்திரமோடி அறைக்கூவல் விடுத்தார்.
நரேந்திர மோடி தன் பேச்சை துவக்கிய போது, '' எங்கள் உயிருக்கு மேலான தமிழ் தாய்க்கு என் வணக்கம்; தமிழ் மண்ணே வணக்கம்; தமிழ் நண்பர்களே வணக்கம்...'' என, தமிழ்மொழியில் பேசி அசத்தினார். பின், இந்தியில் தன் உரையை தொடர்ந்தார். அவரது பேச்சை, எச்.ராஜா, தமிழில் மொழி பெயர்த்தார்.
மோடி பேசியதாவது:
இன்று காலை, குஜராத்தில் இருந்து கிளம்பி, மணிப்பூர் மாநிலம், இம்பால் மற்றும் அசாம் மாநிலம், கவுகாத்தியில் பேசி விட்டு, உங்களைக் காண, சென்னை வந்துள்ளேன். 2014 லோக்சபா தேர்தலுக்கு பின், யார் ஆட்சி அமையும் என்ற கேள்விக்கு, கூட்டத்தை பார்த்தால், அனைவருக்கும் புரியும். எந்தப் பக்கம், அலை வீசிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும். நாடு சுதந்திரம் அடைந்து, 60 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த, 10 ஆண்டுகளில், காங்., தலைமையிலான அரசால், நாடு கடும் பிரச்னையை சந்தித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையை, இதுவரை சந்தித்தது இல்லை. அரசு என்பது எதற்காக இருக்கிறது? அரசு, பணக்காரர்களுக்காக இருக்கிறதா; சுகமான வாழ்வு வாழ்பவருக்காக இருக்கிறதா? பணக்காரர்களால், உலகில் எந்த சக்தியையும், விலைக்கு வாங்க முடியும்; ஏழை எங்கு செல்வான்? ஒரு அரசு, ஏழைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இருக்க வேண்டும். டில்லியில் உள்ள அரசுகள், ஏழைகளுக்காக என்ன செய்திருக்கின்றன. தேர்தல் வந்தால், ஜெபமாலையை உருட்டியபடி, ' ஏழை, ஏழை' என, ஜெபம் செய்வது தான் நடந்திருக்கிறது. ஒரு கட்சியின் தலைவர், 'ஏழ்மை என்பது, ஒருவன் மனோநிலையை பொறுத்தது' என்கிறார். இப்படி பேசுவது, ஏழைகளை ஏளனம் செய்யலாமா? இது, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதி. இந்த ஆட்சியால், ஏழைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. டில்லி அரசுக்கு, ஏழையை பற்றி அக்கறை இருந்திருந்தால், தமிழகத்தில் மீனவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை, எந்த நாளும் ஏற்பட்டிருக்காது. இன்று, தமிழக மீனவர்கள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி உள்ளது. இலங்கை சிறையில் அவதிப்படுகின்றனர். குஜராத் மீனவர்கள், பாகிஸ்தான் சிறையில் அவதிப்படுகின்றனர். டில்லியில் உள்ள பலவீனமான அரசால், பிற நாடுகள், இந்தியாவின் பேச்சை கேட்க தயாரில்லை. அண்டை நாடுகளோடு, நமக்கு நல்ல உறவு இருக்க வேண்டும் என்றால், மத்தியில், வலிமையான அரசு இருக்க வேண்டும்.தற்போதைய மத்திய அரசு, அண்டை நாடுகளுடன், உறவை கெடுத்து வைத்துள்ளது. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, மாநில கவர்னர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கவர்னர் அலுவலகத்தை, காங்கிரஸ் அலுவலகமாக மாற்றி உள்ளது; வருமான வரி அலுவலகத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. குஜராத்தில் தொழில் செய்ய வருவோரை துன்புறுத்துகிறது; குஜராத் முன்னேற்றத்திற்கு, தடையாக உள்ளனர். அதேபோல், சி.பி.ஐ., தவறாக பயன்படுத்தப்படுகிறது. லோக்சபாவில் வெற்றி பெற, சி.பி.ஐ., பயன்படுத்தப்படுகிறது. அரசை உருவாக்க பயன்படுத்துகின்றனர். நாட்டை காப்பாற்ற, இவர்களுக்கு உடனடியாக விடை கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய நாட்டை வழிநடத்தி செல்ல, மாற்றம் கொண்டு வர வேண்டும்.
ஏழை மக்கள் நீதிமன்றம் மீது, உச்சநீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், மத்திய அரசு தீர்ப்பை அவமதிக்கிறது. அரசு கிடங்குகளில், வீணாகும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு கொடுக்க கோர்ட் உத்தரவிடுகிறது. ஆனால், மத்திய அரசு, சாராயம் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு, 80 பைசாவிற்கு வீணான உணவு தானியங்களை விற்பனை செய்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, நதிகளை இணைக்க வேண்டும் என கனவு கண்டார். கங்கை காவிரி நதிகளை இணைக்க வாஜ்பாய் அரசு திட்டம் வகுத்தது. ஆனால், இந்த அரசு அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. சுப்ரீம் கோர்ட்,' அந்த திட்டம் என்ன ஆனது?' எனக்கேட்டது. நேரு காலத்தில் திட்டக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், இன்று அதற்கு எந்த மரியாதையும் இல்லை; எந்த திட்டமும் விவாதிக்கப்படுவதில்லை. திரையின் பின்னால் இருந்துபடி, இந்த அரசை ஆட்டி படைக்கின்றனர். அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பல பிரச்னைகளால், பல சூழ்நிலைகளில், அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டது. ராணுவத்தில், மதவாத சிந்தனை இல்லாமல் இருந்தது. ஆனால், மத்திய அரசு 'ராணுவத்தில், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எத்தனை பேர் உள்ளனர்?' என, எண்ணி பார்க்க கூறியது.
அதற்கு ராணுவ நிர்வாகம், 'ராணுவத்திற்குள் மதவாத எண்ணம் புகுவதை அனுமதிக்க மாட்டோம்' என, கூறியது. மத்திய அரசு ஒரு முடிவு எடுக்கிறது. ஆனால், கட்சியில் இருப்பவர் அதை நிராகரிக்க சொல்கிறார். அரசு ஒரு முடிவு எடுக்கிறது. ஆனால், ஆளும் கட்சி தலைவர், பத்திரிகையாளர் கூட்டத்தில், அந்த முடிவை கிழித்து எறிகிறார். இதுபோல், இந்த தேசத்தில் இதற்கு முன் நடந்துள்ளதா?. இவ்வாறு, மோடி பேசினார்.
சிதம்பரம் மீது மோடி கடும் குற்றச்சாட்டு:
அவர் பேசியதாவது:மத்தியில் உள்ள, காங்கிரஸ் அரசு, கூட்டாட்சி முறையை, சீரழித்து வருகிறது. ஊழல் செய்பவர்களுக்கு, மரியாதை கொடுக்கின்றனர். மாநிலத்தில் உள்ள சிறிய கட்சிகளுடன் சேர்ந்து, ஊழல் செய்துள்ளனர். ஊழலால் பயன் அடைந்தவர்கள், தமிழகத்தில், ஏராளமாக உள்ளதால், உங்களுக்கு நான் சொல்லாமலே, அனைத்தும் புரியும்.
இன்றைக்கு, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர், குஜராத் சென்றுள்ளார். அந்த மாநிலத்தை, அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். இந்தியில் ஒருவரை வசைபாட பயன்படுத்தும், கெட்ட வார்த்தைகளை, பேசி உள்ளார். 'ஏமாளி, முட்டாள்' போன்ற வார்த்தைகளுக்கு இணையான வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.மத்தியில், மறு ஓட்டு எண்ணிக்கை அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் தேர்தலில் தோற்று, மறு ஓட்டு எண்ணிக்கையில், வெற்றி பெற்றார். ஆண்டவன் புத்தியை கொடுக்கும் போது, தான் முதலில் நின்று புத்தியை வாங்கியது போல் அவர் நினைக்கிறார்.அகங்காரத்தின் உச்சியில் அமர்ந்து பேசுகிறார். என்னை பற்றி, பலவாறாக தவறாக பேசுகிறார். எவ்வளவு உயரத்திற்கு, சேறு வருகிறதோ, அதை விட உயரத்திற்கு, தாமரை வரும். எனவே தான் நான் அமைதியாக இருக்கிறேன்.அவர், 'பொருளாதாரம் பற்றிய மோடி அறிவை, சின்ன ஸ்டாம்ப் பின்னால் எழுதி விடலாம்' என, கூறி உள்ளார்.காங்கிரஸ் அரசை, பிரபல பொருளாதார நிபுணர், பிரதமராக இருந்து வழி நடத்துகிறார். நிதி அமைச்சரும், அதேபோல், சமமான பொருளாதார நிபுணர் என தன்னை நினைத்து கொள்கிறார்.ஸ்டாம்பு ஒட்டிய பிறகு தான், தாபால் போய் சேரும். நான் என் செயல்பாட்டின் மூலம், அதை நிருபித்து காட்டி உள்ளேன். நாட்டின் பிரதமர், ஒரு பொருளாதார நிபுணர்; நிதி அமைச்சர், ஒரு பொருளாதார நிபுணர். நான் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்தவன்.
இது, இரு நபர்களுக்கு இடையிலான மோதல் அல்ல. நீங்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால், நான் 'ஹார்டு வொர்க்' என்ற கடின உழைப்பின் மூலம் வந்தவன். நாட்டை மேம்படுத்துவது ஹார்வார்டா' அல்லது 'ஹார்டு வொர்க்கா' என, பார்த்து விடலாம்.நாட்டின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை வைத்து மதிப்பிடப்படுகிறது. வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது, 2003 2004ல் வளர்ச்சி வகிதம், 8.06 சதவீதம்.மறுஓட்டு எண்ணிக்கை நிதி அமைச்சர் காலத்தில், 201213ல், நாட்டின் வளர்ச்சி, 4.5 சதவீதம். இது தான், பொருளாதார மேதாவிதனத்தைக் கொண்டு சாதித்ததா?நான், 2001ல், குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலத்தின் பொருளாதாரம், மைனஸ், 4.05 சதவீதம். 201112ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 7.6 சதவீதம். குஜராத் வளர்ச்சி விகிதம், 10.1 சதவீதம். இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை காட்டி உள்ளோம். குறைந்த பொருளாதார அறிவை கொண்டு, இதை சாதித்துள்ளோம்.
குஜராத் மாநில அரசு, நிறைய கடன் வாங்கி உள்ளதாக கூறுகின்றனர். இந்திய அரசின் கடன், 50 லட்சம் கோடி ரூபாய். இதுதான், பொருளாதார நிபுணரின் செயல்பாடு.நிதி பற்றாக்குறை என்பது, நாட்டின் மொத்த வருமானத்தில், 3 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த சட்டத்தை கொண்டு வந்த, மத்திய அரசின், நிதி பற்றாக்குறை, 5.6 சதவீதமாக உள்ளது. மறு ஓட்டு எண்ணிக்கை அமைச்சரே, சென்னை மண்ணில் இருந்து, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்திருப்பது நீங்கள் தான். நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள். பொருளாதார அறிவு என்பது, புத்தகத்தில் இருந்து மட்டும் வருவதில்லை. என் கண் முன்பே, பிரமாண்டமான மக்கள் கூட்டத்தை பார்க்கிறேன். பா.ஜ.,விற்கு, தமிழகத்தில் இந்த அளவுக்கு பிரமாண்டமான ஆதரவு இருப்பதை பார்க்கும் போது, மத்தியில் பா.ஜ., அரசு அமைவதை, யாராலும் தடுக்க முடியாது.நாட்டிற்கு தேவை, நல்லாட்சியும் அனுபவமும். மக்களோடு நெருங்கி பழகும்போது, பிரச்னை இல்லாமல், அரசை நிர்வகிக்க முடியும். இதுதான் முன்னேற்றம்.முன்னேற்றம் என்பதே பா.ஜ., வின் தாரக மந்திரம். 2014 தேர்தலில், முன்னேற்றம், மேம்பாட்டை முன்வைத்து பிரசாரம் செய்வோம்.இவ்வாறு, மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE