சென்னை அடுத்த வண்டலூரில், நேற்று நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சி பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்க, பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து, வண்டலூர் வரை, வழிநெடுகிலும், மோடிக்கு, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் மற்றும் மூன்றாவது அணி கட்சிகளைத் தாக்கி பேசினார்.
சென்னை அடுத்த வண்டலூரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்ற, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், நேற்று நடந்தது. தமிழகத்தில், திருச்சிக்கு பிறகு, மோடி பங்கேற்கும், இரண்டாவது பொதுக்கூட்டம் என்பதால், சென்னையில் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னை, விமான நிலையத்தில் இருந்து, வண்டலூர் வி.ஜி.பி., மைதானம் வரை, 30 கி.மீ., தூரத்திற்கு, சாலையின் இரு புறங்களிலும், மோடியை வரவேற்று, பா.ஜ., கொடி, தோரணம் கட்டப்பட்டு வரவேற்பு தட்டிகள் வைக்கப்பட்டுஇருந்தன.பா.ஜ., உடன் கூட்டணி வைக்க, உடன்பாடு எட்டியுள்ள, ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், மக்கள் தமிழகம் கட்சிகள் சார்பிலும், மோடியை வரவேற்று, கொடி மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கூட்டணி கட்சித் தலைவர்கள், மோடி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர்கள் படங்களுடன், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வண்டலூரில், 15 ஏக்கர் பரப்பளவில், பார்லிமென்ட் வடிவில், மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மூன்று பிரிவுகளாக, மேடை பிரிக்கப்பட்டு இருந்தது. பா.ஜ., தலைவர்கள், மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள், பா.ஜ., கட்சியின், தேசிய பிரதிநிதிகள், அமரும் வகையில், மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையில்இருக்கைக்கு பின்புறம், மிகப்பெரிய திரை அமைக்கப்பட்டு, மேடையில் நடக்கும் நிகழ்வுகள், பொதுக்கூட்ட காட்சிகள், ஒளிபரப்பப்பட்டன. நீண்ட தூரத்தில் இருந்து, மேடையை பார்ப் போருக்கு, மேடையில் நடக்கும் நிகழ்வு தெரிவதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மைதானத்திலும், ஆங்காங்கே, 'டிவி'க்கள் பொருத்தப்பட்டு, பொதுக் கூட்ட காட்சிகள், ஒளிபரப்பப்பட்டன.
குவிப்பு:மோடி பொதுக்கூட்டத்திற்கு, காலை முதலே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பா.ஜ., தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர், வந்தபடி இருந்தனர்.பகல், 12:00 மணியில் இருந்து, பொதுக்கூட்ட மைதானத்தில்,
தொண்டர்களின் கூட்டம், குவியத் துவங்கியது.ம.தி.மு.க.,வின் மல்லை சத்யா, எம்.பி., கணேசமூர்த்தி; புதிய
நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்; கொங்குநாடு தேசிய கட்சித் தலைவர்
ஈஸ்வரன்; இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர், மாலை, 5:00
மணிக்கு, மேடைக்கு வந்தனர்.மோடி வருவதற்கு முன், கட்சியின் முக்கிய
நிர்வாகிகள், பேசி முடிப்பதற்கு வசதியாக, மாலை, 5:20 மணிக்கு, தமிழக பா.ஜ.,
தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார்.அசாம்
மாநிலம், கவுகாத்தியில் நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
பேசிய மோடி, இரவு, 7:00 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.இரவு,
லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், பேசியமோடி, காங்கிரஸ் மற்றும் மூன்றாவது அணி கட்சிகளைத் தாக்கி பேசினார்.கூட்டத்தில், இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், லட்சுமணன், ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பல கி.மீ., தூரம் நடந்த மக்கள்: வண்டலூரில் நடந்த, நரேந்திர மோடி கூட்டத்திற்கு, லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தென் மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள், கூட்டம் நடந்த இடத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, காட்டாங்கொளத்தூரில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து தொண்டர்கள் நடந்தே, கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றனர்.
போக்குவரத்து மாற்றம்:பகல், 12:00 மணியில் இருந்து, கூட்டம் வரத் துவங்கியதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில், 5,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர். நான்கு திசைகளில் இருந்தும், வாகனங்கள் குவிந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்க, போலீசார் வாகனங்களை, மாற்று வழியில், திருப்பி விட்டனர்.
ஓங்கி ஒலித்த பாடல்கள்:
* 'மோடி ஆட்சிக்கு வந்தால், இலங்கை கடற்படை, தவிடுபொடியாகும்!'
* புதிய கல்விக் கொள்கை வகுப்போம்.
* தமிழக மீனவர் வாழ்வு வளமாக, மோடியை பிரதமராக்குவோம்.
* பரம்பரை ஆட்சி வேண்டாம்; பாமரன் ஆட்சி வேண்டும்.
* நல்லவர் ஆட்சி அமைய, நயவஞ்சகர்களை ஓட விடுவோம்.* தமிழக மீனவர் பிரச்னையில், தவறு செய்தது, இலங்கை தலை; கண்டு கொள்ளாமல் இருப்பது, காங்கிரஸ் தலை.
*
இலங்கை கடற்படை பொடிபட, மோடி விரைவில் வந்திடணும் உள்ளிட்ட பல்வேறு
கருத்துக்கள் அடங்கிய கொள்கை விளக்கப் பாடல்கள், கூட்டத்தில்
ஒலிபரப்பப்பட்டன.
மோடி டீ;பிளாஸ்டிக் விசிறி:
* வழிநெடுகிலும், முக்கிய இடங்களில், 'மோடி 'டீ' ஸ்டால் வைத்து, தொண்டர்களுக்கு, இலவசமாக டீ வழங்கப்பட்டது.
* கூட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்கு, தாமரைப் பூ வடிவில், பிளாஸ்டிக் விசிறிகள் வழங்கப்பட்டன.
* மோடி வருகையையொட்டி, ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போலீசாருக்கு தொண்டர்கள் கோரிக்கை: மாநாடு மேடையில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை வரை, எங்கு பார்த்தாலும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல ஆயிரம் தொண்டர்கள், மாநாடு திடலுக்குள் வர முடியாமல், வெளியே தவித்துக் கொண்டிருந்த தகவல், பா.ஜ., தேசிய செயலர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, தெரிய வந்தது.உடனே, அவர் மைக்கை பிடித்து, ''போலீசாருக்கு ஒரு கோரிக்கை. மாநாடு திடலுக்கு வெளியே உள்ள, ஆயிரக்கணக்கான மக்களை, மாநாடு திடலுக்குள் அனுப்பி வைக்காமல், தடுத்து நிறுத்தியதாக, எங்களுக்கு தகவல் வந்துள்ளது; இது தவறான நடவடிக்கை. உடனடியாக, அனைவரையும், மாநாடு திடலுக்குள், அனுப்பி வைக்க வேண்டும்,'' என்றார்.அவர் பேசியதும், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் எழுந்து நின்று, போலீசாரை நோக்கி, 'தொண்டர்களை உள்ளே அனுப்புங்கள்' என, ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர்.
- நிருபர் குழு -