பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில், பா.ம.க., மகளிரணி அரசியல் எழுச்சி மாநாடு, நேற்று நடந்தது. மாநாட்டில், வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான, குரு பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், இலவசமாக ஆடு, மாடுகளை வழங்குகின்றனர். இனி வரும் காலங்களில், பன்றி வழங்க உள்ளனர். நீங்களும், உங்கள் குழந்தைகளும், குடும்பத்துடன் பன்றி மேய்க்க வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் ஆசை.
இலவச கல்வி:
நாங்கள் தற்காலிக தீர்வை கேட்கவில்லை. கல்வியை, மருத்துவத்தை இலவசமாக தாருங்கள் என்ற, நிரந்த தீர்வையே கேட்கிறோம். மனிதர்களைப் பற்றி கவலைப்படாமல், யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துகிறார். இதற்கு யானைகளுக்கு மதம் பிடித்து விட்டது என்று கூறுகிறார்; ஜெயலலிதாவுக்கு தான் மதம் பிடித்துவிட்டது.
ஜாதி உணர்வு:
தமிழகத்தில் ஆட்சி நடத்தியே, ஒன்றும் செய்யாத ஜெயலலிதா, பிரதமராகி என்ன செய்யப்போகிறார். வன்னியர்களுக்கு ஜாதி உணர்வு இல்லை. வன்னியர்களுக்கு ஜாதி வெறி வரவேண்டும். ஓட்டுப்போடும் அன்றும், ஜாதி வெறி அதிகம் வர வேண்டும். கொடி பிடிக்க, ஓட்டுக்கேட்க தெரிந்த வன்னியர்கள், இப்போது குடிகார ஜாதியாக மாறியிருக்கின்றனர். தமிழகத்தில், ஜெயலலிதா என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு, குரு ஆவேசமாக பேசினார்.
கலாசார சீரழிவு:
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில், நேற்று முன் தினம் நடந்த, பா.ம.க., மகளிர் எழுச்சி அரசியல் மாநாட்டில், அவர் பேசியதாவது: இந்த ஆட்சியில், காவிரியில் தண்ணீர் இல்லை; வாங்கிய கடனை செலுத்த விவசாயிகளுக்கு வழியில்லை. சினிமாவால் தான் தமிழ் கலாசாரம் சீரழிந்தது. 'தமிழக பெண்கள் கற்புடன் இல்லை' என, ஒரு நடிகை கூறினார். அதற்கு கருணாநிதி கோபப்படவில்லை. அந்த நடிகை தான், தற்போது, தி.மு.க.,வின் கொள்கையைப் பரப்பி வருகிறார். நான், நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டேன். இந்த அடக்கு முறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். ஜெ., முதல்வராக இருக்கும் வரை, நான் சிறையிலிருக்க தயார்.
அதுவும் கொலை தான்:
மரக்காணம் சம்பவத்திற்கு பின் நடந்த போராட்டத்தில், வட இந்தியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதால், தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டதாக ஜெ., புலம்பினார். ஆனால், தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில், ஜெ.,விற்காக மூன்று மாணவியரை உயிரோடு கொளுத்தினர். கும்பகோணத்தில் மகாமக திருவிழாவில் ஜெ., குளித்த போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 300க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதற்கெல்லாம் கவலைப்படாத ஜெயலலிதா, வட இந்தியர் கொல்லப்பட்டனர் என்று கவலைப்படுகிறார். கொலை செய்தாலும், அதற்கு உடந்தையாக இருந்தாலும் அதுவும் கொலை குற்றம் தான். அப்படியென்றால் இதற்கெல்லாம் பொறுப்பேற்று ஜெ., கைதாக வேண்டியதுதானே. இவ்வாறு, குரு எம்.எல்.ஏ., பேசினார்.
உரம், டிராக்டர் இலவசம்:
திட்டக்குடியில் நடந்த மாநாட்டில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: கருணாநிதி கொடுத்த ஓடாத இலவச கலர், 'டிவி'க்களின் நிலைதான் ஜெ., வழங்கும் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளுக்கும். இப்படி இலவசத்தைக் கொடுத்து நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியிருக்கின்றனர். தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. வெளியூர் டீ கடைகளில், டீ சாப்பிடும் போது பிரச்னை ஏற்பட்டால் கூட, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பா.ம.க., வெற்றி பெற்றால், விவசாயத்திற்கு உரம், பூச்சிக்கொல்லி, டிராக்டர் இலவசமாக வழங்குவோம். இவ்வாறு, ராமதாஸ் பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE