உளுந்தூர்பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தி, அரசியல் கட்சியினருக்கு தன்னுடைய பலத்தைக் காட்டியிருக்கிறார் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த். 'மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களிடம், கூட்டணி அமைப்பது தொடர்பாக கருத்து கேட்டு, அதன்பின் முடிவை அறிவிக்கிறேன்' என, கூட்டணிக்கு அழைப்பு விடுத்த கட்சிகளிடம் எல்லாம், அதற்கு முன் சாக்குப் போக்கு சொல்லியிருந்தார். ஆனால், மாநாட்டில், கூட்டணி சேரலாமா, கூடாதா என, தொண்டர்களிடம் கேட்க, அவர்களோ, 'கூட்டணி வேண்டாம். தனித்து போட்டியிடலாம்' என்று பதிலளித்து விட்டனர். இதனால், கடுமையான குழப்பத்தில் இருக்கிறார், விஜயகாந்த். தொண்டர்களின் யோசனைப்படி, வரும் லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டால் வெற்றியடையுமா என்பது குறித்து, மாறுபட்ட நிலைபாட்டில் இருக்கும், இரண்டு அரசியல் பிரபலங்கள் நடத்திய கருத்து மோதல் இதோ:
'விஜயகாந்த் தலைமையில், புதிய அரசியல் சக்தி, தமிழகத்தில் உருவாக வேண்டும்' என, அவரது கட்சிக்காக சொத்துக்களை விற்று செலவு செய்தேன். தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டபோது, விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வோடு கூட்டணி சேர்ந்ததால் தான், 29 சட்டசபை தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெற்றது. தே.மு.தி.க.,வுக்கு, 10 சதவீதம் ஓட்டு வங்கி இருந்தது. சட்டசபையில், விஜயகாந்த் நடந்து கொண்ட விதம், காரணமே இல்லாமல், அ.தி.மு.க., ஆட்சியை குறை கூறியது மற்றும் அவரது அரசியல் நிலைபாடுகளால், தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. கட்சி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் யாரும், விஜயகாந்தோடு இப்போது இல்லை. அவரது மனைவியும், மைத்துனருமே முடிவெடுக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., எத்தனை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தாலும், வெற்றிபெற முடியாது. பா.ஜ., அல்லது காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்த் விரும்பலாம். அவ்விரு கட்சிகளின், நிலை தமிழகத்தில் பரிதாபமாக உள்ளது. வேட்பாளருக்கு ஓட்டு கேட்கக் கூட, அவர்களுக்கு ஆளில்லை. இதுவரை, தே.மு.தி.க.,வுக்கு ஓட்டளித்த மக்கள், இப்போது அக்கட்சிக்கு ஓட்டளிக்க தயாராக இல்லை. ஒட்டளித்த மக்களுக்கு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆளும் கட்சியுடன் சண்டையிட்டு, யார் பெரியவர் என, காட்ட முயற்சித்தார். அதனால், இணக்கமான நிலையை உருவாக்காமல், மக்களின் எதிர்பார்ப்புகளை சீரழித்து விட்டார். தொண்டர்களைக் கேட்டு, கூட்டணி அமைப்பேன் எனக்கூறி, கை தூக்கி கணக்கெடுகிறார். திடீரென, 'தலைவர் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வர்' என, கூறுகிறார். எனவே, லோக்சபா தேர்தலுக்கு, அவர் எடுக்கும் முடிவை கட்சி மீது திணிக்கப் போகிறார். ஆனால், தொண்டர்கள் முடிவெடுத்தனர் என, கூறுவார்.
சாந்தி, அதிருப்தி எம்.எல்.ஏ.,- - தே.மு.தி.க.,
தே.மு.தி.க.,விலிருந்து வெளியேறியவர்கள், எந்த லாபத்துக்காக சென்றனர் என்பது நாடறிந்த ஒன்று. அவர்களின் வெளியேற்றத்தால், கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை. கட்சித் தலைவர் விஜயகாந்தைப் பொறுத்தவரை, 'நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும்; லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்' என்பதே கொள்கை. அதற்கேற்ற வகையில், அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தே.மு.தி.க., சார்பில் நடத்தப்பட்ட, ஊழல் எதிர்ப்பு மாநாடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மேல், பெரிய ஆதரவு, இந்த மாநாட்டின் மூலம் கிடைத்துள்ளது. லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., யாருடனும் இதுவரை கூட்டணி அமைத்ததில்லை. தே.மு.தி.க.,வுக்கு, மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கைப் பார்த்து, எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என, தமிழக கட்சிகளும், தேசிய கட்சிகளும் அழைக்கின்றன. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதே, விஜயகாந்தின் கொள்கை. அதற்கேற்ப, லோக்சபா தேர்தலை எப்படி சந்திப்பது என்ற முடிவை எடுப்பார். ஒவ்வொரு அரசியல் கட்சியும், தே.மு.தி.க.,வை ஒவ்வொரு வகையாக பயன்படுத்த முயற்சிக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் விஜயகாந்த் இடமளிக்க மாட்டார். தே.மு.தி.க.,வுடன் கூட்டணி என்பதை, பிற கட்சிகள் தான் கூறுகின்றன. தே.மு.தி.க., இதுவரை கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. பிற கட்சிகளின் கருத்துக்களுக்கு, நாங்கள் பதில் சொல்ல முடியாது. தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை, கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் அளித்து விட்டோம். அவர் முடிவெடுத்து, உரிய நேரத்தில் அறிவிப்பார். ஒருவேளை, தனித்து போட்டியிட்டாலும் தே.மு.தி.க., பெரிய வெற்றியை பெறும். மொத்தத்தில் தே.மு.தி.க., வெற்றி, நாட்டின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும். அதன்மூலம், தமிழக மக்களுக்கு நல்லதே நடக்கும்.
நல்லதம்பி, எம்.எல்.ஏ., - தே.மு.தி.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE